இராமநாதன் நுண்கலைக்கழக நடனத்துறை வளர்ச்சியின் முக்கிய காலகட்டங்களில்கலாபூஷணம் கிருசாந்தி இரவீந்திரா அவர்களின் பங்களிப்பு!

கேள்வி: பரதக் கலை மீதான ஆர்வ ஈடுபாட்டினையும் குருவாக அமைந்தவரையும் கூற முடியுமா?
ஆடற்கலை மீதான ஆர்வமும் ஈடுபாடும் என்னுடைய குழந்தைப் பருவத்திலே இயல்பாகவே வெளிப்பட்டதனை எனது பெற்றோர்கள் கூறிப் பெருமைப்படுவதனை அறிந்துள்ளேன். திருமண வைபவங்களின் போதும்;, நாதஸ்வர தவில் கச்சேரிகள் நடைபெறும் வேளைகளிலும் நான் எனைமறந்து இயல்பாகவே நடனம் புரிவதாக உறவினர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இத்தகைய எனது அதீத நடன ஆர்வ வெளிப்பாட்டை உணர்ந்த தந்தையார் சேனாதிராஜா அவர்களே எனக்கு ஆரம்ப குருவாக நடனம் பயிற்றுவிக்க ஆரம்பித்தார்.

தந்தையார் திரு.இராஜா சேனாதிராஜா அவர்கள் கணக்கியல்துறை சார்ந்தவராய் இருந்தாலும் ஆடற்கலை நடிப்புத்திறன் என்பவற்றில் நாட்டம் மிகுந்தவர். நல்லை ஆதீன ஸ்தாபகர் முதற் குருமணி தம்பிரான் சுவாமிகள் என்ற மணிஐயரிடம் நடனம் பயின்றவர்.
1942ம் ஆண்டில் அவர் ஆடிய சிவதாண்டவம் மறக்க முடியாத நிகழ்வு என அன்றைய கலைஞர் பெருமக்களால் பாராட்டப்பெற்ற நடனக் கலைஞர். இவ்வாறு ஐந்து வயதினிலேயே தந்தையிடம் ஆரம்பித்த ஆடற்கலை பயில்வு தான் தொடர்ந்து வந்த வளர்ச்சிக்கும் ஈடுபாட்டிற்கும் வித்திட்டது. சிறந்த நாட்டிய குருமூலம் பரதக்கலையை எனக்கு முறையாகப் பயிற்றுவிக்க எண்ணி அன்றைய நாட்களில் பிரசித்தி பெற்ற கொக்குவில் கலாபவனம் நாட்டிய குரு கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையாவிடம் நடனம் பயில ஏற்பாடு செய்தார்கள்.

அன்றிலிருந்து கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா அவர்களின் மாணவியாக இலங்கையின் பல பாகங்களிலும் கலாபவனம் ஆற்றுகை செய்த நாட்டிய நிகழ்வுகளில் எல்லாம் பங்குபற்றி குருவின் நாட்டிய வழிகாட்டல், பயிற்றுவிப்புத் திறன், கண்டிப்பு, தொடர்பயிற்சி மற்றும் ஒரு தந்தை போன்ற அக்கறையுடனான ஆதரவு என்பவற்றினால் புடம்போடப்பெற்று 1970களில் எனது பரதநாட்டிய அரங்கேற்றமும் மிக விமரிசையாக இடம்பெற்றது.

நாட்டியத்தில் மேலும் தகைமைகள் பெற்று என்னை பரதநாட்டிய வல்லுனராக்க வேண்டும் என்ற பெற்றோரின் தாகமும், பரதக்கலையின்பால் நான் கொண்டிருந்த அளவிலா நாட்டமும் தமிழ்நாட்டின் அன்றைய பிரபல நாட்டிய ஆசான்களிடம் பயின்று மேலும் நாட்டிய நுணுக்கங்களை கற்றிட தூண்டியது. எனவே, 1970 – 1972 காலப்பகுதியில் இந்தியா சென்று பத்மபஸ்ரீ அடையாறு லக்ஸ்மணனுடைய நாட்டிய நிறுவனமான ‘பரதசூடாமணி’யில் பரத நாட்டியம், நட்டுவாங்கம் என்பவற்றில் டிப்ளோமா பயில்வையும், குரு.இராமநாதன் அவர்களிடம் மோகினியாட்டத்தையும், ‘பரத கலாஞ்சலி’ பத்மபூஷண் தனஞ்சயன் சாந்தா தம்பதியர்களிடம் 1975ல் நாட்டியத்தில் சிறப்புப் பயில்வுகளையும் பூர்த்திசெய்தேன்.

இந்தியாவில் பயின்ற காலப்பகுதியில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் தமிழ்நாட்டின் வேறும் பல இடங்களிலும் ‘பரதசூடாமணி’ மற்றும் ‘பரத கலாஞ்சலி’ நடாத்திய பாதநாட்டிய ஆற்றுகைகளிலும் நடன ஆற்றுகைகள் செய்து அனுபவம்பெற்ற நர்த்தகியாக இலங்கை திரும்பினேன்.
ஏனக்குக் குருமாராக அமைந்த அத்தனை நாட்டிய ஆசான்களின் நாட்டியப்; பயிற்றுவிப்பும், வழிகாட்டலும், ஆசீர்வாதமுமே என்னை இன்றைய நிலைக்கு உயர்த்திற்று. அத்தகைய சிறந்த குருமாரிடம் பயின்றமை இறைவன் எனக்களித்த பேறெனலாம்.

நாட்டிய கலாகேந்திரா ஊடாக எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளீர்கள்?
தமிழர்களின் செவ்வியல் ஆடற்கலையாம் பரதக்கலையின் மேன்மையை சகலரும் உணர்ந்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் 1972ம் ஆண்டு ஐப்பசி மாதமளவில்; கலை ஆர்வலர்களின் ஆதரவுடன் நவாலியூர்; கலையரசு சொர்ணலிங்கம் அவர்களை போஷகராகக் கொண்டு மானிப்பாயில் நாட்டிய கலாகேந்திரா என்ற நாட்டியப் பயிலகத்தை ஸ்தாபித்தேன். இதற்கு முன்னோடியாக எனது பரதநாட்டிய நிகழ்வு சுன்னாகம் – சிவபூதராஜர் ஆலயத் திருப்பணி நிதிசேகரிப்பு நிகழ்வினுக்காக யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக எனது நாட்டியகுரு அடையாறு லக்ஸ்மணன் அவர்கள் வருகை தந்திருந்தார்கள். பரதக்கலை ஆர்வலர்களின் வேண்டுகோளிற்கிணங்க சுழிபுரம், சங்கானை போன்ற இடங்களிலும் கிளைப் பயிலகங்களினூடாக பரதக்கலையை பயிற்றுவித்தேன். வசிப்பிடம் மாறவேண்டிய சூழல் ஏற்பட்டதால் பிரதான பயிலகம் ஆனைக்கோட்டைக்கும் பின்னர் உடுவிலுக்கும் மாற்றமடைந்தது.
முன்னெடுக்கப்பட்ட முக்கிய செயற்பாடுகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். வருடாந்த கலைவிழாக்களை ஒழுங்கு செய்து நாட்டியம் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் அரங்கினில் ஆடும் வாய்ப்பினை வழங்ததல். பொது நோக்கு மற்றும் சமூக மேம்பாடு கருதி, குறிப்பாக ஆலய கட்டிட நிதிசேகரிப்பு, லயன்ஸ்கழக சேவை நிதி சேகரிப்பு போன்ற நிகழ்வுகளுக்காக மாணவர்களின் நாட்டிய நிகழ்வகளை நடாத்துதல். இதன் மூலம் பிள்ளைகளுக்கு நிகழ்த்துகலை வாய்ப்பினை வழங்கும் அதேவேளை சமூகத்திற்கு சேவை செய்த மனநிறைவும் ஏற்பட்டது.
சமூக ஆலய விசேட நிகழ்வுகளுக்குப் பொருத்தமான நாட்டிய நிகழ்வுகள் நாட்டிய நாடகங்கள் தயார் செய்து மேடையேற்றுதல். வட இலங்கைச் சங்கீத சபை (தரம் ஒன்று தொடக்கம் ஆசிரியர் தரம் வரை), க.பொ.த (சாதாரணதரம்), க.பொ.த (உயர்தரம்) நடன பரீட்சைகளுக்கு மாணவர்களை பயிற்றுவித்து தயார்படுத்துதல். நடனப் பட்டப்படிப்பு மாணவர்களிற்கு ஆய்வு சம்மந்தமான வழிகாட்டலகள்; வழங்குதல், என்னால் நாட்டிய அமைப்பு செய்யப்பட்ட மார்க்க உருப்படிகளை வீடியோ பதிவாகவும் இறுவட்டாகவும் வெளியிடல். நடனப் பயில்வு கருத்தரங்குகள் பயிற்சி பட்டறைகள் என்பவற்றில் வளவாளர்களாக பங்கேற்றல்.

இராமநாதன் நுண்கலைக்கழக நடனத்துறை வளர்ச்சியின் முக்கிய காலகட்டங்களில் அங்கு பணியாற்றியிருக்கிறீர்கள். நீங்கள் எவ்வாறு அங்கு இணைந்தீர்கள்? உங்கள் பங்களிப்பு எவ்வாறு அமைந்தது எனக் கூறமுடியுமா?

சேர்.பொன்.இராமநாதனின் மருகராகிய கலாநிதி.சு. நடேசபிள்ளை அவர்கள் தன் மாமனாரின் நினைவாக இராமநாதன் கல்லூரியின் ஒரு பகுதியில் தமிழர் செந்நெறிக்கலைகளை (கர்நாடக சங்கீதம், மிருதங்கம், நடனம் மற்றும் இதர வாத்திய இசைகள்) பயிற்றுவித்து வளர்க்கும் நோக்கில் 1960ம் ஆண்டு ஐப்பசி மாதம் விஜயதசமி நன்னாளில் ஆரம்பித்த நிறுவனமே இராமநாதன் இசைக்கல்லூரியாகும் (Ramanathan Music Academy). இந்நிறுவனத்தில் பணியாற்ற தமிழ்நாட்டின் பிரபல இசைமேதைகளை வரவழைத்து இக்கல்லூரி இயங்க வழிவகுத்தார். இக்கல்லூரியில் இசையும் இசை சார்ந்த பாடவிதானங்களே ஆரம்பத்தில் கற்பிக்கப்பட்டது. இராமநாதன் இசைக்கல்லூரியில் நடனக்கலையையும் கற்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளின் நிமித்தம் பரதநாட்டியம் பயிற்றுவிப்பதற்கான தகுந்த ஒருவரின் தேவைப்பாடு ஏற்பட்டது. அக்காலப் பகுதியில்தான் இந்தியாவில் பரதசூடாமணியில் பயின்று நாடு திரும்பியிருந்தேன். எனது தகமையை நன்கறிந்த மானிப்பாய் ஐயாக்கண்ணு தேசிகர், நவாலியூர் கலையரசு.சொர்ணலிங்கம் மற்றும் அம்பிகைபாகன் போன்ற கலைஞர் பெருமக்கள் என்னை இராமநாதன் இசைக்கல்லூரியில் நடனக்கலையை பயிற்றுவிப்பதற்காகத் தேர்ந்தெடுத்தார்கள். 1973ம் ஆண்டு பங்குனி 1ம் திகதி இராமநாதன் இசைக்கல்லூரியில் நடன போதனாசிரியராக நியமிக்கப்பட்டு பரதநாட்டியப் பயில்வை அங்கு முதன்முதலாக ஆரம்பித்து வைத்தேன். இதேவேளையில் வாய்ப்பாட்டுத்துறை போதனாசிரியராக திருமதி.ஜெகதாம்பிகை கிருஸ்ணானந்தசிவம் அவர்களும் நியமிக்கப்பட்டார்.
1974சித்திரை மாதமளவில் அரசாங்கத்தினர்;;; கலைகளை வளர்க்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் கலைப்பணியாற்றிவந்த பிரசித்தமான இந்நிறுவனத்தைப் பொறுப்பேற்று யாழ் மாவட்ட கல்வித் திணைக்களத்திடம் கையளித்தனர். அப்போது நடனக்கற்கை நெறிக்கு மேலும் ஒரு பிரசித்தமான நடனக்கலைஞரான கலாஷேத்திரா பட்டதாரி செல்வி.சாந்தா பொன்னுத்துரை அவர்களை தேர்வு செய்து நடனத்திற்குப் பொறுப்பாக நியமித்தனர். அன்றிலிருந்து செல்வி.சாந்தா பொன்னுத்துரையும் நானும் பரதக்கலையை அங்கு பயிற்றுவிப்பதில் இணைந்து செயற்பட்டோம். இராமநாதன் அரசினர் நுண்கலைக்;கல்லூரி என்ற பெயர் மாற்றத்துடன் இந்நிறுவனம் இராமநாதன் கல்லூரி முதல்வர் திருமதி.அருணாசலத்தின் நிர்வாகித்தில் இயங்கத் தொடங்கியது.
01.12.1975இல் இந்நிறுவனம் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ் வளாகத்தினால் உள்வாங்கப்பட்டு இராமநாதன் நுண்கலைக்கழகம் என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது. ஏற்கனவே இந்நிறுவனத்தில் கடமையாற்றியவர்களுடன் நானும் பல்கலைக்கழகத்துள் உள்வாங்கப்பட்டேன். ஆரம்ப காலங்களில்; நான்கு வருட டிப்ளோமா கற்கைநெறியே நடைமுறைப்படுத்தப்பட்து.
1978இல் நடைபெற்ற இறுதிப்பரீட்சையில் நடனப் பகுதியில் முதலாம் பிரிவில் சித்தியடைந்து (Diploma in Dance) நாட்டியக் கலைமணி பட்டம் பெற்ற செல்வி.பத்மரஞ்சினியும் (திருமதி.உமாசங்கர்) நடனத்துறைக்கு நிரந்தர போதனாசிரியராக நியமிக்கப்பட்டார். 01.01.1979இல் இலங்கைப் பல்கலைக்; கழகத்தின் யாழ்வளாகமானது தரமுயர்த்தப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் தன்னாதிக்கமுள்ள பல்கலைக்கழகமாக இயங்க ஆரம்பித்தது. அக்காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட சூழல் காரணமாக 1990இல் செல்வி.சாந்தா பொன்னுத்துரையும் 1993இல் திருமதி.பத்மரஞ்சினி உமாசங்கர் அவர்களும் விலகிவெளிநாடு செல்ல நடனத்துறைக்கு ஒரேயொரு நிரந்தர விரிவுரையாளராக நான் கடமையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இக் காலப்பகுதியில் தான் இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் பட்டதாரிக் கற்கை நெறிகளை ஆரம்பிக்கும் வழிமுறைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் முன்னெடுத்தனர். இதன் தொடர்ச்சியில் 1998இல் முதற்தொகுதி பட்டதாரிகள் வெளிவந்தனர். 1999இல் இராமநாதன் கல்லூரி தற்போதுள்ள புதிய கட்டடத்தில் இயங்க ஆரம்பித்தது. 2000ஆம் ஆண்டில் “யாழ்ப்பாணத்து நாட்டிய மரபு” எனும் தலைப்பினில் ஆய்வினை மேற்கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடனத்தில்; முதுதத்துவமாணி பட்டம் பெற்ற முதல் பட்டதாரியாகி, சிரேஸ்ட விரிவுரையாளராகப் பதவியுயர்வு பெற்று, பின் நடனத்துறைத் தலைவராகவும் பதவியேற்று 2006ஆம் ஆண்டுவரையும் பணியாற்றினேன்.
எனது பங்களிப்பு என்ற வகையில் கீழவருவனவற்றை முக்கியமானவையாகக் குறிப்பிடலாம்.
பரதநாட்டியப் பயில்வினை இங்கு முன்னோடியாக ஆரம்பித்தமை; குருசிஷ்ய பயில்வு முறைமையில் பயிலப்பட்டு வந்த பரதநாட்டியம் பல்கலைக்கழக உயர்கல்வி பட்டக்கற்கைநெறியாக வளர்ச்சியடைந்த மிகமுக்கியமான காலப்பகுதியில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருடன் இணைந்து முக்கிய பங்களித்தமை; சோதனைகள் சவால்கள் இடப்பெயர்வுகள் என கலைப்பயில்வுக்கு மிக வசதிகள் குறைந்த பாதகமான இக்கட்டான காலப்பகுதியில்தான் (1975 – 2006) நடனத்துறைக்கான எனது பங்களிப்பு மிகுந்திருந்தது. இக்காலப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைநிகழ்வுகளில் எல்லாம் (முக்கியமாக பட்டமளிப்பு விழா வருடாந்த கலைவிழாக்கள்) நடனத்துறையினூடாக நாட்டிய நாடகங்கள் நிகழ்வுகள் தயாரித்தளித்தமை; பல நடன உருப்படிகளுக்கும் நாட்டிய நாடகங்களுக்கும் நாட்டிய அமைப்பு செய்தமை; நடனத்துறை மாணவர்கள் பட்டப்பின் கற்கை நெறிகளிலும் ஆய்வுகளிலும் ஈடுபட முன்உதாரணமாக சாதித்து காட்டியமை; ஏறக்குறைய 9 தொகுதி நடனத்துறை மாணவர்கள் என்னுடைய காலப்பகுதியில் கலைமாணிப்பட்டம் (BFA in Bharathanatyam) பெற்றமை.

54 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *