ஒரு கல்யாணக் கதை

நவமகன் (நோர்வே)
08.12.24 ஒரு கல்யாணவீட்டிற்குச் சென்று வந்த மனநிலையிலேயே இன்றைக்கும் இருக்கின்றேன். ஆனால், சென்று வந்தது கல்யாண வீட்டிற்கல்ல, “ஒரு கல்யாணக் கதை” நாடகத்திற்கே.
மண்டப வாசலில் இருந்தே நாடகம் ஆரம்பித்துவிட்டது. மணமக்களின் பெற்றோர் பார்வையாளர்களுக்கு வாசலில் வைத்தே பெட்டு வைத்து பன்னீர் தெளித்து உள்ளே அனுப்பினார்கள்.
மண்டபத்தினுள்ளே மங்களவாத்திய இசை ஒலித்துக்கொண்டிருந்தது. மேடையின் திரை விலகியபோது உண்மையில் ஒரு கல்யாண நிகழ்வில் நிற்பதுபோன்ற உணர்வே ஏற்பட்டது. அந்தளவுக்கு கல்யாணக் காட்சிகள் மிகவும் தத்துரூபமானவையாக இருந்தன. (இருத்திவைத்து வாழையிலையில் சாப்பாடு மட்டுந்தான் பரிமாறவில்லை.) இக் கல்யாணத்தில் (நாடகத்தில்) நமது சமூகத்தில் கலாசாரம் என்றும், பண்பாடுகள் என்றும் காலங்காலமாக கட்டமைத்துப் பேணிவந்த சில பிற்போக்குத்தனமான பழமைவாதக் கொள்கைகள் கட்டுடைக்கப்பட்டிருந்தமையானது மிகவும் சிறப்பான அம்சங்களாக இருந்தன.
அன்று நமது முன்னோர்கள் சிந்தித்த முறைக்கும், இன்று நாம் சிந்தித்துக்கொண்டிருக்கும் முறைக்கும், நாளை நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சிந்திகப்போகும் முறைக்குமான சிந்தனை மாற்றங்களே இத்தகைய கட்டுடைப்புக்களை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.
சில பழமைவாதக் கொள்கையுடையவர்களுக்கு இவை பிடிக்காத விடயங்களாகக்கூட இருக்கலாம். ஆனால், சமூக நலச் சிந்தனையுடைய படைப்பாளிகள் பழமைவாதக் கிடங்குகளிலிருந்து இத்தகையவர்களையும் மீட்டுவிடவே படைப்புத்திறன்களைப் பிரயோகிப்பார்கள். அந்த வகையில் இங்கு ஒஸ்லோவில் இத்தகைய முற்போக்குச் சிந்தனைகளை ரூபன் சிவராஜா, கவிதா லட்சுமி போன்றோரின் படைப்புகளில் காண்பதொன்றும் புதிதான விடயமல்ல.
இந்த நாடகத்திற்கான எழுத்துருவும் ரூபன் சிவராஜா அவர்களுடையதே. நாடகத்தினை சர்வேந்திரா தர்மலிங்கம் அவர்களும் ரூபன் சிவராஜா அவர்களும் நெறியாள்கை செய்திருந்தார்கள். பாடல்கள், பாடலிசை, பின்னணி இசை, நடன அமைப்பு, ஒளியமைப்பு, மற்றும் கலைஞர்களின் ஆற்றுகைகள் அனைத்தும் சிறப்பானதாக இருந்தன. இப்படியொரு அரங்காற்றுகையை நிகழ்த்துவதென்பது இலகுவான விடயமல்ல, அனைத்துக் கலைஞர்களினதும் கடின உழைப்பிற்கு எனது பாராட்டுக்கள். நாடகம் ர்ழரளந கரடட காட்சியாக அரங்கேறியதனால். பலர் மீள் காட்சிக்காக காத்திருக்கின்றார்கள். அதனால் நானிங்கே கதையைக் கூற விரும்பவில்லை. குழசரஅ வாநயவசந பாணியில் நாடகத்தினை ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டு, நாடகத்தின் தொடர்ச்சி அல்லது முடிவு எப்படி இருக்கவேண்டும் என்ற கேள்வியை பார்வையாளர்களிடம் முன்வைத்துக் கருத்துக்கள் கேட்கப்பட்டதும், புதிய சிந்தனைகளுக்கு வழிகோலுமுகமாக கருத்தாடல்கள் நிகழ்ந்ததும் சிறப்பு.
அத்தோடு நிகழ்வின் ஆரம்பத்தில் அரங்கப் பாடல்கள் இசைக்கப்பட்டன. இந்நிகழ்வும் சினிமாப் பாடல்களைக் கேட்டுப் பழகியவர்களுக்கு வித்தியாசனான அனுபவமாகவும் இரசிக்கக்கூடியதாகவும் இருந்திருக்கும் என்றே நம்புகின்றேன். அதிலும் ‘மந்திர வலிமை உடையவர் நாங்கள்’ என்ற பாலஸ்தீனப் பாடலும், ‘எனக்குத் தடைபோடும் பொல்லாத உலகத்தை..’ என்ற பாடாலும் மிகச் சிறப்பு.
52 total views, 2 views today