என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகள்.

–தீபா ஸ்ரீதரன் (தைவான்)
அதியமானுக்கு அவ்வை நெல்லிக்கனியைக் கொடுத்தது அவர் ஆயுளை
நீட்டிப்பதற்கு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
உங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் என்ன? உங்கள் உணவு முறையைப் பற்றிச் சொல்லுங்கள். நீங்கள் எந்தவிதமான உடற்பயிற்சியைச் செய்கிறீர்கள்?
இதைப் பற்றி ஒரு நீண்ட பதிவை எழுத வேண்டும் என்று பல நாட்கள் நினைத்திருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் உடற்பயிற்சி, உணவுப் பழக்கங்கள் என்பதை நான் வெறும் உடல் எடை குறைப்பிற்காகவோ அல்லது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்காகவோ செய்யவில்லை. இதை ஒரு வாழ்க்கை முறையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
மனித உடல் உண்மையிலேயே மிகவும் அபாரமான, நுணுக்கமான ஓர் ஆயுதம். படைப்பாற்றலையும், உடல் உழைப்பையும், பரிணாமத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் அறிவையும் தாங்கி இருக்கும் ஓர் அட்சய பாத்திரம் மனித உடல். எனவே அதன் ஆரோக்கியத்தைப் பேணுவதில் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் பலரும் இங்கே உடல் என்பதை
(Take it for granted) இயல்பு நிலையில் வழங்கப்பட்டது என்ற முறையிலேயே எடுத்துக் கொள்கின்றனர். ஆனாலும் சமீப காலமாக இந்நிலை மாறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
நான் கீழே குறிப்பிடப் போகும் உணவு முறை, உடற்பயிற்சிகள் மட்டுமே ஆரோக்கியமான வாழ்விற்குச் சிறந்தது என்று என்னால் சொல்ல முடியாது. பல தத்துவங்களைப் போலவே அறிவியலும் பலவிதமான தர்க்கங்களை உள்ளடக்கியது. இன்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை கூட நாளை மறுக்கப்படலாம். வேறு Hypothesis முன் வைக்கப்படலாம். ஒருவரால் ஏற்றுக்கொள்ளப்படும் உணவுப்பழக்க வழக்கங்களும் உடற்பயிற்சிகளும் மற்றொருவரால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கலாம். எனவே அவரவர்க்கு உகந்ததை ஓரளவு அறிவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து பார்த்து நடைமுறைப்படுத்திக் கொள்வது நல்லது.
நான் பின்பற்றும் வாழ்க்கை முறை
காலையில் எழுந்தவுடன்(6:30) காலைக்கடன் கழித்தல். பின் 15ல் லிருந்து 20 நிமிடங்கள் வரை சின்ன சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வேன். பாடி ஸ்ட்ரெட்ச்சிங், 20 தோப்புக்கரணம் போன்றவை. நான் 40 வயதைக் கடந்து விட்டதால் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக முதுமைக்குத் தயார்ப்படுத்திக் கொள்கிறேன். எனவே இரண்டு மூன்று ஆண்டுகளாகக் கண்களை மூடிக்கொண்டு வீட்டில் நடை பயில்வது. ஒற்றைக்காலில் சில நிமிடங்கள் நிற்பது, நடப்பது. அன்றாடக் காரியங்களைச் செய்யும்பொழுது இடது கையையும் வலது கையையும் மாற்றி உபயோகித்துக் கொள்வது. கண்களுக்கான பயிற்சி, கண்களைச் சுழற்றுதல், 30- 40 முறை கண்களைச் சிமிட்டுதல் போன்ற சின்ன சின்னப் பயிற்சிகளைக் காலையில் செய்வேன். வயதாக ஆக நம் புலன்களின் வேலைப்பாடு குறைய ஆரம்பிக்கும். அவற்றை ஓரளவு ஈடுகட்டி வாழ்வதற்கான முயற்சிகள் இவை.
அதற்குப் பின் அரைத் தேக்கரண்டி பட்டைப் பொடியைத் தண்ணீரில் கொதிக்க வைத்து அது மிதமான சூட்டுக்கு ஆறியவுடன் அதில் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேனைக் கலந்து குடிப்பேன். தேனில் உடலுக்குத் தேவையான குடல் பாக்டீரியாக்கள் (Gut Microbiome) அதிகமாக இருக்கிறது மற்றும் பட்டை பொடி மெட்டபாலிசத்திற்கு மிகவும் உதவி செய்யும். இதைத் தவறாமல் தினமும் செய்து பாருங்கள். உங்கள் மெட்டபாலசத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். ஓர் ஆரோக்கியமான வாழ்விற்கு நல்ல மெட்டபாலிசம் மிகவும் முக்கியமானது.
என்னுடைய காலை உணவு (9:30) பெரும்பாலும் ஒரு கப் பழங்கள் குறிப்பாகப் பப்பாளி அல்லது கொய்யாப்பழம். ஒரு துண்டு பிரெட் ஒரு கோப்பை எலுமிச்சை சாறு. எலுமிச்சை சாற்றில், சர்க்கரையோ, உப்போ சேர்த்துக் கொள்வதில்லை. இது சர்க்கரை மற்றும் உப்பு கட்டுப்பாட்டுக்காக அல்ல.
என்னைப் பொறுத்தவரையில் உங்கள் இளமையின் ரகசியம் என்று கேட்பவர்களுக்கு நான் சொல்வது எலுமிச்சை சாற்றைத் தான். அதில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடென்ட் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நம் உடலில் புது உயிரணுக்கள் உருவாவதற்கும் அதிகப்படியான விட்டமின் சி அதில் இருக்கிறது. இங்கே நெல்லிக்காய்கள் கிடைப்பதில்லை. அதனால் எலுமிச்சை சாற்றைத் தவறாமல் குடிக்கிறேன். நம்மூரில் நெல்லிக்காய்கள் அதிகமாகக் கிடைக்கும். அதை விடவும் மிகச்சிறந்த immortal மருந்து வேறு ஒன்று இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அதியமானுக்கு அவ்வை நெல்லிக்கனியைக் கொடுத்தது அவர் ஆயுளை நீட்டிப்பதற்கு என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
என்னுடைய மதிய உணவு (12.30-1:00) ஐந்தாறு தேக்கரண்டிகள் சாதம் இரண்டு மூன்று வகைக் காய்கறிகள் பெரும்பாலும் வேகவைத்தவை. (பச்சைக்காய்கறி வகைகள், கீரை வகைகள், நார்ச் சத்து மிக்கவை). வாழைத் தண்டு,பூ இங்கே கிடைப்பதில்லை. கிடைக்கும் இடத்தில் வாழ்பவர்கள் அவற்றை நிறைய சேர்த்துக்கொள்ளலாம். புரதச்சத்துக்காக முட்டை அல்லது சோயா. நான் வெஜிடேரியன் என்பதால் முட்டை அல்லது சோயாவை மட்டும் சாப்பிடுகிறேன். மாமிச உணவு உண்பவர்கள் இன்னும் நல்ல புரதத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதைச் சமைக்கும் பொழுது எண்ணெய் இல்லாமல் சமைப்பது நல்லது. பெரும்பாலான மாமிசங்களில் இயற்கையாகவே எண்ணெய் இருக்கும் அதை வைத்துக்கொண்டு மட்டுமே சமைப்பது ஆரோக்கியமானதாக இருக்கும்.
நான்கு மணி அளவில் ஒரு கப் பழம் தைவான் நாட்டில் பழங்கள் மிக அருமையாகக் கிடைக்கும். அதனால் அந்தந்த பருவத்திற்கு வரும் பழங்களைச் சுவைத்துக் கொள்வேன். பழங்களோடு சேர்த்து உலர் பருப்பு வகைகள் பாதாம், பிஸ்தா, வால்நட், உலர் திராட்சை (ஒவ்வொன்றும் 4) எடுத்துக் கொள்வேன்.
6.30- 7.30 இரவு சாப்பாடு. இரவு பெரும்பாலும் ஏதாவது சுண்டல் வகைஃசோயா அதனுடன் ஓட்ஸ் நான்கைந்து தேக்கரண்டி. வெள்ளரிக்காய் அல்லது கேரட்.
நான் மெனோபாஸை நெருங்கிக் கொண்டிருப்பதால் ஈஸ்ட்ரோஜன் அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்வதில் இப்போது கவனம் செலுத்துகிறேன். தயிர், மோர் நிறைய சேர்த்துக் கொள்வேன். ஊழககநநஇ வநய குடிப்பதில்லை.
பெரும்பாலும் இந்த உணவு முறையே நான் பின்பற்றுகிறேன். சனி, ஞாயிறு இவற்றிலிருந்து விலகுவதுண்டு. அதுவும் ஏதாவது ஒரு வேளை மட்டும். இதில், மூன்று வேளை சாப்பாட்டிலும் பெரும்பாலும் எண்ணையோ வெண்ணெய்யோ சேர்த்துக் கொள்வதில்லை. பருப்புச் சாதம் செய்யும்போது கொஞ்சம் நெய் சேர்த்துக்கொள்வேன். சில காய்களில் தாளிப்புக்காகச் சொட்டு எண்ணெய் சேர்த்துக் கொள்வதோடு சரி . இதற்கு முக்கியக் காரணம் எனக்குச் சாக்லேட், ஐஸ்கிரீம், கேக்,உhநநளந போன்றவை மீது அதீதப் பிரியம். அதனால் சாயங்காலம் இரவு சாப்பாட்டிற்கு முன்பு ஏதாவது ஒன்றைச் சாப்பிட்டு விடுவேன். அதை ஈடுகட்டும் வகையில் சமையலில் அதிகம் கொழுப்புச்சத்தைச் சேர்த்துக் கொள்வதில்லை.
( உலர் பருப்புகள், உhநநளந எல்லாம் பணக்காரர்கள் உணவு என்று சிலர் தர்க்கம் செய்யலாம். உண்மையில் அவற்றிற்கான செலவு, நீங்கள் மருத்துவமனைக்குச் செலவிடும் பணத்தை விட குறைவு என்பதை யோசித்துப் பாருங்கள். முடிந்த வரையிலும் பலதரப்பட்ட கலவையான ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது அது நமக்கான முதலீடும் கூட.)
உணவைப் பொறுத்தவரையில் இதைச் சாப்பிடக்கூடாது, அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், மைதா சாப்பிடக்கூடாது, பேலியோ டயட், கீட்டோட டயட் போன்றவற்றில் எனக்குச் சுத்தமாக நம்பிக்கைக் கிடையாது. உடல் என்பது நிலத்தின் நீட்சி. நாம் எந்த இடத்தில் வசிக்கிறோமோ வாழ்கிறோமோ அந்த இடத்தில் விளையும் எல்லாப் பொருட்களும் நாம் உட்கொள்ளலாம். மாவுச் சத்து மிக்க உணவின் மீது இன்று ஓர் ஒவ்வாமை இருக்கிறது. அது தேவையில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. சித்திரை இதழில் தொடரும்.அதுவரை மேல் கூறியவற்றை செய்து பாருங்கள்.