பெண்கள், அன்றும் : இன்றும்

சேவியர் (தமிழ் நாடு)
வரலாறு எப்போதுமே பெண்களைச் சுற்றியே கட்டமைக்கப்படுகிறது என்பது தான் நிஜம். குடும்பங்கள் இல்லாமல் பழைய கால வரலாற்று நாயகர்கள் இல்லை. பெண்கள் இல்லாமல் இன்றைக்கு நவீன நாயகர்களே இல்லை. இது தான் யதார்த்தம். இதை ஏற்றுக் கொள்பவர்கள் ஆண்கள். ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஆணாதிக்க வாதிகள் அவ்வளவு தான் வேறுபாடு.
ஒரு காலத்தில் தண்ணி எடுத்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள், அது தவிர்க்க முடியாத வேலை. இன்றைக்கு அலுவலகங்களில் தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது யாரும் தப்பிக்க முடியாத வேலை. இன்னும் பழைய காலத்தின் நீட்சியாக யார் பெரிசு, யார் சமம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்க முடியாது. ஆண் என்பவன் ஆண். பெண் என்பவள் பெண் அவ்வளவு தான். ஆப்பிளையும், ஆரஞ்சையும் ஒப்பீடு செய்வது போல இது. இதுவே புது வித சிந்தனை !
- வீட்டு ராஜ்யம் முதல் அலுவல் ராஜ்ஜியம் வரை !
உண்மையிலேயே மல்டி டாஸ்கிங் எனப்படும் ஒரே நேரத்தில் பல வேலையைச் செய்யும் கலை பெண்களுக்கே வாய்க்கிறது. ஒரே நேரத்தில் அடுப்பையும் பார்த்து, காய்கறியையும் பார்த்து, பாத்திரமும் கழுவி, அழும் பிள்ளைக்கு ஒரு சமாதானமும் சொல்லி, பக்காவாக பால் பொங்கும் போது ரிட்டன் ஆகி.. ஷப்பப்பா.. ஆண்கள் என்றால் அல்லோலகல்லோலப் படுவார்கள். பெண்கள் அதை மிக நேர்த்தியாகச் செய்வார்கள், அது இயல்பிலேயே அவர்களுக்கு வந்த கலை !
இன்றைக்கு அது அவர்களுக்கு அலுவலகத்திலும் கை கொடுக்கிறது. பல வேலைகளைத் திறம்பட செய்து முடிப்பவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். இடையில் ‘ஃபிரிட்ஜ்ல இருக்கிற சிக்கனை எடுத்து வெளியே வெச்சுடு’ என வாட்சப்பில் வீட்டுக்கு செய்தியும் அனுப்புகிறார்கள்.
சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில், ஒரு காலத்தில் வீட்டை ஒரு சி.இ.ஓ போல இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தார்கள், இப்போது அலுவலகத்தை ஒரு வீடாகப் பாவித்து வேலை செய்கிறார்கள் !
- கண்டாங்கிச் சேலை முதல் கலக்கல் கோட் வரை !
பெண்களின் ஆடை என்பது வெறும் அவர்களுடைய மானத்தை மறைப்பதற்கான விஷயம் அல்ல. அது ஒரு வகையில் அவர்களுடைய சுதந்திரத்தைப் பறைசாற்றும் இடமும் கூட. அவர்களுக்குப் பிடித்தமான சேலையை, பிடித்தமான வகையில் கட்டும்போது சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது. இன்றைய நவீன உடைகளை அவர்களுடைய தேர்வுக்கு விடும்போது அவர்களுடைய சுதந்திரம் மதிக்கப்படுகிறது. அதற்காக ஆபாசத்தை நான் அனுமதிக்கிறேன் என்பதல்ல ! மாற்றத்தை மறுதலிக்கவில்லை என்பதையே கூறுகிறேன்.
ஏண்டி சேலையை விட்டுட்டு சுடிதாருக்கு மாறினே என்றார்கள், பின்னர் சுடிதாராவது பரவாயில்லை ஏன் ஜீன்ஸ் என்றார்கள், பிறகு ஜீன்ஸாவது பரவாயில்லை ஏன் கிழிஞ்ச ஜீன்ஸ் என்கிறார்கள். ஒவ்வொரு பரிமாணமும் கேள்விகளைக் கடந்தே பெண்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. பெண்களுடைய ஆடை இப்போது பேசுவது கண்ணியமோ பெண்ணியமோ அல்ல, அவர்களது அடையாளம் !
ஒரு மனிதனுடைய தன்னம்பிக்கை அவனது நேர்த்தியான, பிடித்தமான ஆடையில் இருக்கிறது என்பது உளவியல் உண்மை ! பெண்களை அவர்களுக்கு பிடித்தமான ஆடை அணிய அனுமதித்தாலே அவர்களுடைய தன்னம்பிக்கை வளரும்.
- மறுக்கப்பட்ட கல்வி முதல் அழைப்பு விடுக்கும் கல்வி வரை !
பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பது வரலாற்றின் மாபெரும் கறை. சொல்லப் போனால் பெண்களுக்கு மட்டுமல்ல, பிற்காலங்களில் சாதீய பிரிவுகள் கோலோச்சியபோது அடக்கப்பட்ட சமூகமும், படிக்க முடியாமல் தான் முடங்கியது. ஆதித் தமிழனின் அறிவு, பிற்காலங்களில் சிரச்சேதம் செய்யப்பட்டு ஆதிக்கத்தின் கைகளுக்குப் போனது. அதில் அதிகம் உதாசீனம் செய்யப்பட்டது பெண் கல்வி தான்.
இன்றைக்கு எவனும் கூப்பிடாவிட்டால் கூட ஆன்லைனில் அமர்க்களமாய்ப் படித்து, அட்டகாசமாய் பட்டம் வாங்க பெண்களால் முடியும். அலுவலகங்களில் இப்போது கையில் போனுடன் பறந்து திரியும் பட்டாம்பூச்சிகள் தான் அதிகம். அவர்கள் வாசிப்பது மட்டுமல்ல, எழுதுகிறார்கள். அவர்கள் படிப்பது மட்டுமல்ல, படைக்கிறார்கள்.
அதற்காக யாரும் பெண்களுக்கு ஸ்பெஷலாக எதையும் செய்து கொடுக்கவில்லை, தலைவர்களின் போராட்டம் தடைகளுக்கும் கொஞ்சம் விடை கொடுத்திருக்கிறது அவ்வளவு தான்
- கடமை முதல் தேர்வு வரை !
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒரு நிகழ்வு என்றால் அது திருமணம் தான். அந்தத் திருமணம் ஆணின் விருப்பப்படியும், பெண்ணின் விதிப் படியும் தான் நடந்து கொண்டிருந்தது. கழுத்தை நீட்டுவது பெண்களின் கடமை, திட்டம் தீட்டுவது ஆண்களின் உரிமை எனும் ஒரு கசப்பான காலம் இன்று விடைபெற்று விட்டது. எனது கடமையல்ல, எனது தேர்வே இங்கே முக்கியம் என்கின்றனர் பெண்கள். யாரும் கட்டாயத்துக்குக் கட்டுப்பட்டு கழுத்தை நீட்டுவதில்லை, நீட்டி விட்டோம் என்பதற்காக காலம் முழுதும் கட்டுப்பட்டு அடிமைப்படுவதும் இல்லை !
அன்றைக்கு காவியப் பெண் கற்பை நிரூபிக்க நெருப்புக்குள் அனுப்பி வைக்கப்பட்டாள். ஆனால் இன்றைய கலியுகப் பெண்கள், சர்தான் போடா என திரும்பி நடப்பார்கள். காரணம் அவர்களுக்கு பிறர் என்ன நினைப்பார்கள் என்பதை விட, நான் என்ன நினைக்கிறேன் என்பதே பிரதானமாகிவிட்டது ! அதுவே சிறப்பானதும் கூட.
- கஜல் கண்கள் முதல் இன்ஸ்டா ஃபில்டர் வரை !
அலங்காரம் எல்லோருக்கும் பிடிக்கும், அலங்காரத்துக்குப் பெண்களைத் தான் பிடிக்கும். உலகில் எத்தனை அழகிகள் உண்டோ அவர்கள் எல்லாம் நாலு லாரி சுமக்குமளவுக்கு அழகுசாதனப் பொருட்களும் உலகில் உண்டு. முன்பெல்லாம் அழகு சாதனப் பொருட்கள் செயற்கையாய் இருக்கவில்லை, இயற்கை அழகை இயற்கையே மெருகூட்டியது. மஞ்சளோ, மருதாணியோ, கருப்போ எல்லாமே இயற்கையின் கைகுலுக்கலில் நிகழ்ந்தவையே. இப்போது பெண்களின் கைப்பைக்குள் ரசாயன ரசனைகளே நிரம்பியிருக்கின்றன
அழகை மறைத்து வைக்க வேண்டுமென யாரும் இப்போது விரும்புவதில்லை, மேலும் அழகாய்க் காட்டும் ஃபில்டர்களுடன் இன்ஸ்டா பக்கங்களில் இளமை விதைக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் கதைக்கிறார்கள். அப்போதெல்லாம் எண்ணை தேய்ப்பது அழகுக் குறிப்புகளில் ஒன்று, இப்போது எண்ணை விலக்குவது அழகுக் குறிப்புகளில் ஒன்று. எதுவுமே எல்லைக்குள் இருக்கும்போது ஆரோக்கியம் காக்கப்படும். ஹை ஹீல் செருப்புகள் முதுகெலும்பை சேதமாக்கும், உதட்டுச் சாயங்கள் புற்று நோய்க்கு புள்ளி வைக்கும், முகப்பூச்சுகள் தோலை நிர்மூலமாக்கும் எனும் உண்மையான மருத்துவ எச்சரிக்கைகளைக் கொஞ்சம் கவனிப்பது நலம்.
- அடையாளம் சுமந்தவள் முதல் அடையாளம் அளிப்பவள் வரை !
முன்பெல்லாம் பெண்களை அடையாளப்படுத்துவதற்கு ஒரு ஆணோ, அல்லது ஒரு வீடோ, அல்லது ஒரு குடும்பமோ தேவைப்பட்டது. முத்துவேலின் மகள், பெரிய வீட்டு மருமகள் என்று ஏதோ ஒரு அடைமொழியால் தான் பெண்கள் அறியப்பட்டார்கள். ஆனால் இன்று அடையாளங்களை அளிக்கும் இடத்துக்கு பெண்கள் வந்திருக்கிறார்கள். பெண்களை வைத்து இடங்கள், அலுவலகங்கள், வேலைகள், சாதனைகள் எல்லாமே அறியப்படுகின்றன.
ஒரு காலத்தில் மனைவி, மகள், அம்மா, பாட்டி என அறியப்பட்டவர்கள் இன்று ஜனாதிபதி, விண்வெளி வீராங்கனை, மேலதிகாரி என்றெல்லாம் அறியப்படுகிறார்கள். அடையாளங்களைச் சுமப்பது தவறில்லை, அவை நமது தனி அடையாளங்களை அழிப்பதாய் இருக்கக் கூடாது. ஒருவரின் மனைவி என்பது பெருமையே, ஆனால் அந்த மனைவியின் தனித்துவமும் அங்கே காக்கப்பட வேண்டும் இல்லையா ?
- ஒடுக்கப்பட்ட குரல் முதல் ஓங்கி ஒலிக்கும் குரல் வரை !
அன்று, அடைக்கப்பட்ட கதவுகளுக்குள் தான் பெண்களின் குரல்களுக்கு விடுதலை இருந்தது. சாத்தப்பட்ட சன்னல்களின் உள்ளே தான் அவர்களுடைய சுதந்திரம் சுற்றிக் கொண்டிருந்தது. சற்று சத்தமாய்ப் பேசிவிட்டால் கூட அது பெரும் குற்றமாய்ப் பார்க்கப்பட்டது. பெண்கள் சிரிப்பது வெளியே கேட்கக் கூடாது என்று கூட பழமொழி இருந்தது.
ஆனால் இன்று மேடைகளில் கர்ஜிக்கும் பெண் சிங்கங்கள் எக்கச்சக்கம். அலுவல் கூடுகைகளில் பெண்களில் தொழில்நுட்ப உரைகள் மிகப் பிரபலம். அரசியல் அரங்குகளில் அவர்களுடைய துணிச்சல் மிக வியப்பு. ஒரு காலத்தில் ‘பெண்கள் பேச்சை கேக்காதீங்க’ என்றார்கள். இன்றைக்கோ மில்லியன் ஃபாலோயர்களுடன் அவர்கள் டிஜிடல் மேடைகளை ஆட்சி செய்கிறார்கள்.
கடைசியாக,
பெண்களின் அன்றைய வாழ்க்கையிலும் இன்றைய வாழ்க்கையிலும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அவையெல்லாம் அவர்களைச் சுற்றியிருந்த சமூகம் அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்ததன் விளைவு. அவர்கள் தங்கள் உரிமையை மீட்டுக் கொண்டதன் வெளிப்பாடு. ஆனால் அவர்களுடைய குணாதிசயமான அன்பு, மென்மை, தாய்மை போன்றவை எல்லா காலங்களிலும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
அடையாளங்கள் மாறலாம், வாழ்க்கை முறை மாறலாம், அங்கீகாரங்கள் மாறலாம். அந்த அழகிய பெண்மையில் இயல்பு மாறாதவரை பெண்கள் மண்ணின் அன்னையரே.. அன்றும், இன்றும், என்றும் ! அனைவருக்கும் இந்த சகோதரனின் பெண்கள் தின நல்வாழ்த்துகள்.
யேர்மனி கஸ்ரொப்-றவுக்சல் தமிழாலயத்தில் தைப்பொங்கல் விழா!
18.01.2025 அன்று யேர்மனி கஸ்ரொப்-றவுக்சல் தமிழாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல்விழாவின்; நிழற்படத்தொகுப்பு. செய்தி.தகவல் சக்தி-ஜெயா ( வெற்றிமணி )