நெல் களஞ்சியசாலைகளையும் வைக்கோலால்தான் நிரப்ப வேண்டும்.

நெல்லா? வைக்கோலா?
புனித பிரியா
உண்மையாகவே நாம் சுதந்திரமாகத்தான் வாழ்கிறோமா? வேறு எதில் இருந்து விடுதலை பெற்றிருந்தாலும் வாழ்க்கைச் செலவிலிருந்து நாம் இன்னும் விடுதலை அடையவில்லை. இதன் காரணமாக பலரும் பசி, பட்டினியோடு தான் இருக்கிறோம். அரசியல்வாதிகளுக்கு இலங்கையில் அரிசி பிரச்சினை இல்லை. தேங்காய் பிரச்சினையும் இல்லை. இந்த நாட்டின் மிகச்சிறந்த விவசாயியாகக் கருதப்படக்கூடிய விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, ஒரு பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளார். அவரால் இன்னும் நெல்லுக்கு உத்தரவாத விலையைப் பெற முடியவில்லை. அரசாங்கத்தில் யாரிடம் கேட்டாலும், அவர்கள் அனைவரும் அடுத்த சில நாட்களில் நெல் கொள்முதல் செய்வதற்கான அரசாங்கத்தின் உத்தரவாத விலை அறிவிக்கப்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த நாள் எப்போது வரும் என்று சொல்ல முடியாது.
தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது பற்றி சிலர் கூறும் கதையைப் போலவே இதுவும் உள்ளது. தமிழ், சிங்களப் புத்தாண்டு என்று சொன்னாலும், அது எந்த வருடம் வரும் புத்தாண்டு என்று சொல்லவில்லை. நெல்லுக்கான உத்தரவாத விலை பிரச்சினை காரணமாக இலங்கை விவசாயிகள் மிகவும் மோசமான சூழ்நிலைகளை எதிர்க்கொண்டுள்ளனர். அரசாங்கம் சொல்வதைக் கேட்டுக்கொணைடு ஊடக சந்திப்பு நடத்திவிட்டு, நாட்டிற்குத் தங்கள் குறைகளைப் பற்றிக் கூறி மௌனமாக இருப்பது நமது விவசாயிகளின் வழக்கமாகி விட்டது. இப்போது, இந்த நாட்டிலுள்ள நான்கு அல்லது ஐந்து பெரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நேரடியாக வயல்களுக்குச் சென்று அதிக விலைக்கு அரிசி வாங்கத் தொடங்கியுள்ளனர். அரசாங்கம் நெல்லுக்கு உத்தரவாத விலையை அறிவிக்கும் நாள் வரும்போது, வைக்கோல் மட்டுமே மிஞ்சியிருக்கும். எனவே, அரசின் அனைத்து நெல் களஞ்சியசாலைகளையும் வைக்கோலால்தான் நிரப்ப வேண்டும். இந்த நாட்டில் அரசாங்கத்தை அமைப்பது மிகவும் கடினமான பணி என்பது உண்மைதான். இந்த நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்கள், ஒரே திசையில் நகர்வதற்குப் பதிலாக வெவ்வேறு திசைகளில் நகர்ந்து, நகர்ந்து தாமதப்படுத்தி, ஆமை வேகத்தில் செல்லப் பழகிவிட்டனர். இதனால் நாட்டை நிர்வகிப்பது மிகவும் கடினமாகிறது.நாம் வாய் திறந்தாலே 2500 ஆண்டுகால வரலாற்றைப் பற்றிப் பேசப் பழகிவிட்டோம். ஆனால் ஒரு அவசரத்திற்கு யாரிடமும் கையில் 500 ரூபாய் கூட இல்லை. அப்படியானால் 2500 ஆண்டுகால கலாச்சாரத்தை பற்றி பேசுவதில் என்ன பயன்? நாம் முதலில் செய்ய வேண்டியது அரசாங்கத்தைக் கவிழ்ப்பது அல்ல, மக்கள் குழியில் விழுவதைத் தடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் கடந்த ஆண்டு ஜனவரியில் நெல்லுக்கு உத்தரவாத விலையை அறிவித்தது. அதன்படி, 14மூ ஈரப்பதம் கொண்ட ஒரு கிலோ நாட்டரிசி நெல்லின் விலை ரூ. 105, ரூபாவாகவும், அதே ஈரப்பதம் கொண்ட ஒரு கிலோ சம்பா அரிசி நெல் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லை ரூ.130க்கு கொள்வனவு செய்யத் தயாராக இருப்பதாக அரசு அறிவித்திருந்தது. 14மூ க்கும் அதிகமான ஈரப்பதம் கொண்ட நாடு, சம்பா மற்றும் கீரி சம்பா நெல்லின் விலை ரூ. 90, ரூ. 100, 120 ரூபாய் விலையில் வாங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது. அத்துடன், நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு 50 மில்லியன் ரூபாயும், நெல் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு 25 மில்லியன் ரூபாயும் வழங்க அந்த அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இந்தப் பணம் அனைத்தும் தனியார் மற்றும் அரசு வங்கிகளால் வழங்கப்பட்டது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.150 உத்தரவாத விலை வழங்குவதாகக் கூறியிருந்தது.
இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுவது போல், இந்த அரசாங்கத்தால் உத்தரவாத விலையை நிர்ணயிப்பதன் மூலம் விவசாயிகளின் உரத்திற்கு பணம் கூட வழங்க முடியாது. அரசாங்கம் ஒரு பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். இது மிகவும் கடினமான சூழ்நிலை. உலகின் பிற நாடுகளும் பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்கின்றன. எனவே, நாங்கள் முன்னர் போல தான் தோன்றித்தனமாக கடன்களைப் பெற முடியாது. மேலும், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கான தவணைகள் மற்றும் வட்டியை செலுத்த இயலாமல் போனதின் காரணமாக, கடந்த காலங்களில் நாடுகள் நமக்குக் கடன் வழங்க அதிக விருப்பம் கொள்ளவில்லை. சில நாடுகள் இந்த நேரத்தில் மிகப்பெரிய இலக்குகளை மனதில் நிறுத்திக்கொண்டு தான் நமக்குக் கடன் வழங்குகின்றன. சில நேரங்களில் அந்த நாடுகள் நம் நாட்டின் ஒரு பகுதியை எடுத்து தங்களுக்கென குக்கிராமங்களை அமைப்பதற்காக நமக்குக் கடன் வழங்குகின்றன. எனவே, விவசாயிகளுக்கு நல்லுக்கான உத்தரவாத விலைகள் பிரச்சினையில் அரசாங்கத்தையே விமர்சிக்க முடியாது.
ஆனால் ஒரு நாடாக எடுத்துக்கொண்டால் அரசாங்கம் விவசாயிகளுக்காக அதிகபட்ச அர்ப்பணிப்பைச் செய்ய முடியும். அரிசி உற்பத்தி என்பது ஒரு கடினமான பணியாகும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரான மதிப்பீடுகளின்படி, ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய அரசாங்கத்திற்கு 220 ரூபாய் செலவாகியது. உர மானியங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளுக்கு செலவிடப்பட்ட தொகை, விவசாயிகளின் உழைப்புக்காக ஒதுக்கப்படும் தொகை, நெல் வயலுக்கான நில வாடகை, நெல் வயல்களுக்கு நீர் வழங்குவதற்கான செலவை கருத்தில் கொண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கம் ஒரு கிலோ நெல்லுக்கு ரூ.220 செலவிட்டது. இன்று, இந்த எண்ணிக்கை சுமார் 350 ரூபாயாக இருக்க வாய்ப்புள்ளது. நாம் எப்படியும் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு நாடு என்பதால், அரசாங்கம் ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய ரூ. 500 செலவிட்டாலும், அது மக்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அரசாங்கம் நிலைமையைப் புரிந்துகொண்டு நெல்லுக்கான உத்தரவாத விலை தொடர்பாக விரைவில் நிவாரணம் வழங்குவதே சிறப்பான விடயமாகும்.