பாலியும் பாசிபடர்ந்த சிலைகளும்!

-மாதவி.(யேர்மனி)
நாம் அண்மையில் சென்ற பல்கேரியாவில் முழத்திற்கு ஒரு யுவுஆ இருந்தது. பாலியில் முழத்திற்கு ஒரு கோவில். கோவில் என்றால் சொரூபம் இருக்கும் என்று இல்லை. ஒரு கதிரை போன்ற இருப்பு இருக்கும், அதில் காலையில் தமக்கு விரும்பிய உணவு ஒரு தென் ஒலையில் பின்னிய தட்டில் படைப்பார்கள்.
அதனை விட பல கோவில்கள், இராமர், விஸ்ணு, பிள்ளையார், உருவங்களுடன் அமைந்த கோவில்களும் உண்டு.
இந்தியாவில் கருங்கல்லில் ஆனா சிற்பங்கள் அதிகம். இங்கு பாலியில் சுண்ணாம்புக் கல், அல்லது சுண்ணம் (சீமந்துபோல்) இவற்றாலானதாகவே பல இருக்கும். கற்சிற்பங்களும் சில இடை இடையே உண்டு. எழுதாத விதியாக இந்தச் சிலைகள், வர்ணம் பூசாமல் பாசிபிடிக்கவேவிட்டும் இருப்பார்கள்.
பழைய சிற்பம், கோவில் என்பதனை பாசிபிடித்த சிலைகள் மூலம் காணலாம். எமக்கு அழகான வேலைப்பாடுகள் உடன் பார்த்து பழகியமையால் பாசிபடர்ந்த சிற்பங்கள் கவர்வதாக இல்லை, அத்துடன் அனைத்து சிற்பங்களும், சீனா, தாய்லாந்து மக்களின் கலைத்துவம் கலந்த ஒருவித சிற்பங்களாகவே. காணப்படும்.பாம்பு சிங்கமுகம்,யாழி போன்ற தலைகளுடன் பல பாசிபடர்ந்த சிற்பங்கள் தெருத்தெருவாக இருக்கும். மேலும் பழைய சுற்றுலாத் தலங்களில், புதிய சிற்பங்கள் முழு வர்ணம் பூசப்பட்ட சிலைகளும் சில காணப்படுகின்றன.
நடனங்கள், இசைக்கருவி வாசிக்கும் சிற்பங்கள் என பல காணப்படுகின்றன. பிரமாண்டமான கருடன் சிலை, விஸ்ணு சிலைகளும் இராமர் சிலைகளும் பாலிக்கு வருபவரை கவரும் வண்ணம் உள்ளது.
நாம் நின்ற விடுதிக்கு பெயர் வனராசா.யேர்மனியல் 40 வருடங்களுக்கு முன் எம்மோடு வசித்த நண்பர் திரு.இரத்தினம் கருணரட்ணம் பாலி பாரப்;பதற்கான ஒழுங்குகள் சிறப்பாகச் செய்து எம்மோடும் குடும்பமாகக் கூடவும் வந்தனர். தற்போது அவர்கள் லண்டனில் வசித்துவருகின்றனர். அவர்களுக்கு பாலி இரண்டாவது பயணம்.