பெண்விடுதலை பற்றிய பாரதியின் நோக்கு

0
vm215

சிவராஜா சிவார்த்தன்
யா ஃ தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி, தரம் -12 (விஞ்ஞானப்பிரிவு)

பாரதியார் பெண்கள் விடுதலையே நாட்டு விடுதலை – மானுட விடுதலையின் வேர் என்ற கருத்தை மையமாகக் கொண்டிருந்தார் என்பது ஆழமாகப் பாரதியைப் படிப்போர்க்குத் தெளிவாகும். நாட்டு வணக்கம் எனப்பாடப்பட்ட
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே – அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே ” என்ற பாடலிலும் கூட

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தருள்
ஈந்ததும் இந்நாடே – எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே – அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே – தங்கள்
பொன்னுடல் இன்புற நீர் விளையாடி இல்
போந்ததும் இந்நாடே
மங்கையராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே

என்று பெண்மையின் சிறப்பை பேசி நிற்கிறார் பாரதியார்.

பாரதி பேசும் பெண்விடுதலை என்பது மனித குலத்திற்கான விடுதலை. பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான பாரதியின் சீற்றம் பெண்களை மட்டும் பாதுகாக்கும் – பெண்களைக் கரையேற்றிவிடும் குறுகிய நோக்குடையதல்ல. அப்படியிருந்திருந்தால் அதுகூட ஒருவகையான அடிப்படை வாதமாகியிருக்கும். பாரதியின் பெண்விடுதலை – அடிமைத் தனத்திலிருந்தான மீட்சி என்பது முழு மனித குலத்தையும் வாழ்விக்க எண்ணும் மாண்புயர்நோக்கு அது. ஆணும் பெண்ணும் சமமாக வாழாவிட்டால் வீட்டிலும் நாட்டிலும் அமைதியிராது. மனிதகுல வாழ்க்கை சிறக்காது. என்ற ஆழமான சமூகவியலையும், மானிடவியலையும் காட்டுவதே பாரதியின் நோக்கமாக இருந்திருக்கிறது.

பெண் எனும் கழனிக்கு விடுதலை எனும் நீர் இல்லையென்றால் பின்னிந்த உலகினிலே மனித குலத்தின் வாழ்க்கையெனும் வேளாண்மை இல்லை என்ற கவலையே பாரதியை அரித்தெடுத்த பெருங்கவலை. அதனால்தான் பாரதி

“பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்; அதற்குரிய பெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,
மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட்டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,
விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.

என்று கொஞ்சம் கோபத்தோடு – கேட்பவன் தலையில் மெல்ல ஒரு குட்டுக்குட்டி உலக வாழ்க்கை செழிக்க பெண் விடுதலையின் அவசியத்தை அழுத்தமாகச் சொல்கிறான்.
பெண் அடிமைப்பட்டு விட்டால் முழு மனிதகுலமும் அடிமைப்பட்டு விடுமே என்ற ஏக்கமும், ஆதங்கமும் பாரதியிடம் மேலோங்கி நின்று அவரைத் துணுக்குற வைத்தன. பெண் என்பதை வெறுமனே மனைவி (பெண்டாட்டி) என்பதாக மட்டும் எண்ணி முழுப்பெண்களையும் அடிமைகளாக்கி மனித குலத்தை அடிமைக் குலமாக்கி விடாதீர்கள் என்ற எச்சரிக்கை பாரதியிடம் மேலோங்கியிருந்தது. அதனால்தான்

தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ?
தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை,தங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமைப் படுத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
“தாயைப்போ லேபிள்ளை” என்று முன்னோர்
வாக்குளதன் றோபெண்மை அடிமை யுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ?
என்று புத்தியில் உறைக்கும்படி பக்தியின் சாயல்கூட்டி பேசுகிறார்.
ஆணும் பெண்ணும் சமமாக வாழாவிட்டால், வீட்டிலும், சமூகத்திலும், நாட்டிலும் – முழு மனித சமுதாயத்திலும் அமைதி இராது. மனித குல வாழ்க்கை சிறக்காது. அதனால்தான் வையம் தழைக்கும் வழியாக பெண்விடுதலையைப் பேசுகிறார் பாரதியார்.
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி, இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்; – என்று நயமாக புத்திமதியும் சொல்கிறார்.

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி.
காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான் வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்…….

என்று பேசுகின்ற பாரதி பெண்கள் விடுதலை பெறுவது – கல்வியறிவில் சமத்துவம் காண்பது தொன்மை அறங்களை – பண்பாட்டினைப் பாதிப்பதல்ல அவற்றை மேலும் மாட்சி பெறச் செய்யும் என்று சமூகக் கரிசனைக்கும் பதில்சொல்லி பெண்கல்வியினால் மனித குலம் செழிக்குமென உத்தரவாதமளிக்கிறார். பெண்கள் கல்வி பெறுவதென்பது ஒரு சமூதாயத்தின் அத்திபாரம் என்றும், சமுகத்தை தழைக்க வைக்கும் செழிப்பான நிலம் பெண்ணென்றும் உறுதியாக நம்பி அதனையே உரைத்தவர் பாரதியார். தாயைப்போல பிள்ளை என்ற மரபு விளக்கத்தை விளக்கி உரைக்கும் பாரதி

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சாலவே யரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ!
மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!

என்று போற்றுதலும் வாழ்த்துதலுமாய் பாரதி போற்றிய பெண்மை போற்றி வையகம் இன்புற இன்னுமின்னும் நேசமாய் சிநேகமாய் ஆதர்சமாய் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *