பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல.

0
vm216

Different thinking, rational and irrational thinking concept. Mental health and problems with memory. Human brain shaped made of jigsaw puzzles inside your head

கௌசி (யேர்மனி)

ஏன் என்று கேட்காதுவிட்டால், மடையர் நாம் என்று கட்டிவிடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா? இல்லையெனில் 5 அறிவு மிருகங்களா? என்று புர்pயாது போய்விடும். மிருகங்கள், பறவைகள் பலவற்றின் குணநலங்களை எடுத்தாராயும்போது அவையே தம் வாழ்வுக்குத் தேவையான அறிவு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தலையாட்டித் தொடரும் ஆட்டு மந்தைகள் போல் வழிவழியாகத் தொடரும் பழக்கவழக்கம் என்றோ, ஊரோடு ஒத்தோடாவிட்டால், யதார்த்தவாதி சமூகவிரோதி என்பதற்கமைய சமூகம் எம்மை ஒதுக்கிவிடும் என்றோ, ஆச்சரியமானதாக இருக்கின்றது என்றோ, எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்றார்களே! அதில் ஏதோ உண்மை இருக்கும் என்றோ எதையும் நம்பிவிடக்கூடாது.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு

தவம் என்று சொல்லப்படுவது கொல்லாத நலத்தை அடிப்படையாகக் கொண்டது. சால்பு எனப்படுவது பிறரது குற்றங்களை எடுத்துச் சொல்லாத நலத்தை அடிப்படையாகக் கொண்டது சால்பு என்று வள்ளுவர் கூறிவிட்டார் என்பதற்காக அவர் கூறிய ~~எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்|| என்னும் குறளை நாம் மறந்துவிடக்கூடாது. தீமை கண்டு குற்றங்களையாது எடுத்துச் சொல்லித் திருத்தாது. போனால் போகட்டும் என்று நாம் வாழ்ந்தோமேயானால், வாழிடச் சாக்கடையுள் நாமும் புரண்டே எழவேண்டியவர்கள் ஆகிவிடுவோம்.

பொருட்கள் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக நிரூபிக்கக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. மெய்ப்பொருளை அல்லது உண்மையைக் கண்டறிவது என பகுத்தறிவு பற்றி அறிகின்றோம். பெரியார் அறிவு எனப்படுவதே பகுத்தறிவுதான் என்கிறார்.

சைவசமயத்தில் சந்தேகம் தோன்றியபோதே சைவசித்தாந்தம் தோன்றியது. இவ்வாறு சந்தேகங்கள் தோன்றும் போதே அவற்றுக்கான தெளிவும் ஏற்படுகின்றது.

2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தர் ~~கடவுளாவது ஆத்மாவாவது இவையெல்லாம் சுத்தப்புரட்டு. எதையும் அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்து புத்திக்கு எது சரியென்று படுகின்றதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமே அன்றி கடவுள் சொன்னார் முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே. வெகுகாலத்திற்கு முன் சொல்லப்பட்ட கருத்தாயிற்றே. வெகுகாலமாகப் பின்பற்றிவந்த கருத்தாயிற்றே என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே. அறிவு கொண்டு அலசிப்பார் எது உன்புத்திக்குச் சரியென்று படுகிறதோ அதனை ஏற்றுக்கொள்|| என்று அறிவைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தைக் கூறியுள்ளார்.

இவ்வாறு பெரியார் அவர்களும் கடவுள் பற்றி எண்ணற்ற வினாக்கணைகள் தொடுத்துச் சென்றுள்ளார். விஞ்ஞானிகளும் விண்முட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர். இயற்கையின் பலபக்கப் பரிமாணங்களை ஆராய்ச்சிகளில் தெளிவுபடுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆனால், பகுத்தறிவாளர்கள் எனக் கருதப்படுவோர் பலர் தனியே கடவுள் இல்லை என்று வாதிடுவது மட்டுமே பகுத்தறிவு என்று கருதிக் கொண்டிருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாகின்றது. நம் அறிவுக்குப் புலப்படாத விடயம் எதுவாக இருந்தாலும் அதை அறிந்து கொள்ளத் தேட முற்படுவதும், நடந்து கொண்டிருக்கும் சில விடயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாது அதற்குரிய உண்மை காரணத்தைத் தேடிக் கொள்ள முனைவதும் அவசியமல்லவா? எதிரியாக எம் கண்ணுக்குப் புலப்படுபவன் வேறு பலர் கண்களுக்கு நல்லவனாகத் தெரிவதும், நல்லவன் என்று நாம் ஏற்றுக் கொள்பவன் பலர் கண்களுக்குத் துரோகியாகப் புலப்படுவதும் நோக்கி அதுபற்றி ஏன் என்ற கேள்வியை முன்வைத்து ஆராய்ந்து பார்ப்பதும் ஒரு பகுத்தறிவின் பாற்படுகின்றது. ஏனெனில் பொய்க் கருத்துக்களை முன் வைப்பவர்கள் தம்முடைய சொல் ஆற்றலினால், உண்மை அல்லாதவற்றையும் உண்மை போலவே சொல்லி விடுவார்கள். இதனையே வெற்றி வேற்கையிலே அதிவீரராம பாண்டியர்

பொய்யுடைய ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே
மெய்யுடைய ஒருவன் சொல மாட்டாமையினால்
பொய் போலும்மே பொய் போலும்மே

என்று சொல்லிப் போனார்.

18ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த சீர்காழி அருணாசலக்கவிராயர் நடகத்தமிழுக்கு உயிரளித்தவர். இவர் சிந்திக்கப்பல பாடல்களை யாத்துள்ளார்

~~மிகப்பட்ட வெம்பசியால் வெம்பருந்தின் வாயில் 
 அகப்பட்ட கோழிப்பார்ப் பானேன் - நகப்பட்ட
 கல்லையோ கைதொழுதேன் காகமணு காமலையில்
 இல்லையோ ரத்னகிரியே||

அளவுகடந்த பசியால் மிகக் கொடிய பருந்தின் வாயில் கிடைத்த கோழிக்குஞ்சு போலானேன். யான் கல்லையா கடவுள் என்று கும்பிட்டேன். இல்லையே காகமும் அணுகாத இரத்னகிரி மலையை அல்லவா நானும் வணங்கினேன். அந்த ரத்னகிரி போன்ற சிவன் இப்போது இல்லையோ என்று கேட்கின்றார். இலங்கை முள்ளிவாய்க்காலிலே மொத்தமாய் உயிர்கள் பறிக்கப்பட்ட போதும் இதேபோன்ற கேள்வியே பலர் மனதுள் கேட்கப்பட்ட கேள்வியானது. இல்லையோ என்னும் அச்சம் தோன்றும் போதே இருக்கிறதா என்ற கேள்வியும் எம்மத்தியில எழுகின்றது.

~~வெண்ணெயுற்று நெய்தேட வேண்டுமா தீபமுற்று
நண்ணு கனறேட னன்றாமோ – என்மனத்தை
நாடிச் சிவனிருக்க நாடாமனூர்தோறும்
தேடித் திரிவதென்ன செப்பு?

ஏ, உள்ளமே உனக்கென்ன பேதைமை? வெண்ணெய் கையிலிருக்கும் போது நெய்யைத் தேட வேண்டிய அவசியமென்ன? விளக்கு இருக்கும்போது அனலைத் தேடிப்பிடிக் முனைவது சரியா? என்மனதை நாடிச் சிவன் இருக்கும்போது அவனை அகத்துள் பார்க்காமல் ஊரூராய்ச் சென்று கோயிலுக்குள் சென்று பார்ப்பதும் ஏன்? அதற்குக் காரணம் கூறு எனத் தன் பாடலில் சிந்திப்பதாய் வரிகள் தந்திருக்கின்றார். ~~உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்|| எனத் திருமூலர் கூறிய வரிகள் இங்கு தென்படுகின்றன.

ஒருவன் பார்க்கும் பார்வையில் உண்மைத் தன்மையைத் தேடும்போது சமூகத்திடையே அவன் பற்றிய நோக்கு பலர் பார்வைக்குக் கேள்விக்குரியாகத் தென்படும். ஆனால், மனத்துக்கு ஒவ்வாமல், இருக்குமோ இல்லையோ, சரியோ தவறோ என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடாது, எதுவாகவாவது இருக்கட்டும் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றார்களே! அப்படி ஏற்றுக் கொண்டாலேயே பலர் பார்வைக்கு நாம் நல்லவர்களாகத் தெரிவோம். பேரும் புகழும் எமக்குக் கிட்டும் என தப்பான ஒருவிடயத்திற்குத் துணைப்போவது மனிதனாக ஆறறிவு படைத்தமைக்குத் துரோகம் செய்வதாக முடியும். எதிர்காலச் சந்ததியினரையும் தப்பான வழிக்கு இட்டுச் செல்வதாக அமையும். மூடநம்பிக்கைகள் மலிவடைந்து மனிதநேயப்பண்புகளும் மழுங்கடிக்கப்படும்.

எனவே பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல. மனிதன்வாழும் பண்புகளின் நடத்தைகளின் தன்மை பற்றியும் ஆராய்வது என்பதில் மனம்பதிக்கவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *