படம் இலங்கையில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கானமுயற்சியில் JMFOA தொண்டு நிறுவனம்.

தொண்டு நிறுவனமான யாழ்ப்பாண மருத்துவ பீட வெளிநாட்டு முன்னாள் மாணவர் சங்கம் (JMFOA) சார்பாக டாக்டர் வாசுகி தவராஜசிங்கம், அவரது கணவர் திரு தவராஜசிங்கம், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோரால் ஜனவரி 26, 2025 அன்று Dortmundல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரண்டாவது நிதி திரட்டும் நிகழ்வு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.
ஜெர்மனியில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோர் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த JMFOA உறுப்பினர்களை ஒன்றிணைத்து நடத்திய இந்த நிதிசேகரிப்பு இலங்கையில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் சமூக மட்டத்தில் புற்றுநோய்களால் பாதிக்கப்படுபவர்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதற்குமானதாகும்.
இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரவேற்பு உரையை JM for UK தலைவர் திரு ராஜரத்தினம் நிகழ்த்தினார். சிறப்புவிருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமார் அவர்கள் கலந்து சிறப்புரை வழங்கிச் சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் ஜெர்மனியில் உள்ள தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இங்கிலாந்தைச் சேர்ந்த யாழ் மருத்துவபீட முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மதியம் மற்றும் மாலையில் நடந்த இந்த நிகழ்வில், JMFOA இன்டர்நேஷனல் ஒருங்கிணைப்பாளரும், இந்த இரு திட்டங்களினது ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் நவநீதன், தற்போது நடைபெற்று வரும் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான மேலும் விரிவாக்கம் பற்றிய விவரங்களை விளக்கி உரையாற்றினார்.
ஜெர்மனிய தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தன்னார்வ மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள், இசைக்குழு மற்றும் பாடல் போன்ற பல நேரடி பொழுதுபோக்கு நிகழ்வுகளால் இந்த நிகழ்வு மிகவும் வெற்றிகரமாக அமைந்தது.
கஸ்தூரி சலங்கை ஒலி நாட்டியக் கலா மன்ற ஆசிரியரும், கலை பண்பாட்டுக் கழக மூத்த ஆசிரியருமான சாவித்திரி சரவணன் MA. & M Phil in dance. அவர்களின் மாணவிகள் வழங்கிய ‘கோகில கிருஷ்ணா’ நடனம் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. பலரது மனங்களையும் கொள்ளை கொண்டது.
தாரணா நர்த்தனாலயம் ஆசிரியர் திருமதி தனுஷா ரமணன் அவர்களின் மாணவிகள் வழங்கிய ‘தசவதாரம்’ பலரது பாராட்டையும் பெற்றது.
இந்த நிதி திரட்டலின் தாக்கம் வரும் ஆண்டுகளில், இலங்கையில் உள்ள சமூகத்தினால் உணரப்படும். இப்படியான நிகழ்ச்சிகள் ஜெர்மனியில் உள்ள தமிழ் சமூகத்தில் அடுத்த தலைமுறையை சமூக சிந்தனை உடையவர்களாக வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. தாராளமான பங்களிப்புகள் மற்றும் பங்கேற்பிற்காக, துகுஆழுயு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.