எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்.

0
vm190

– பாக்குப்பாட்டி (யேர்மனி)

தாய்: மகனே நான் சித்தா பார்க்கப் போகிறேன்.
மகன்: என்னம்மா, உங்களுக்கு எங்கே சித்தப்பா இருக்கிறார்?
தாய்: அட போய்யா, நான் சித்தா வைத்தியம் பார்க்கப் போகிறேன்.

உடம்பு நோ, நாரி நோ, முழங்கால் நோ, பாத எரிவு, எலும்பு தேய்மானம்… கடவுளே எத்தனை வருத்தமப்பா? இது மட்டுமா…? இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்பு, மன உளைச்சல், மன அழுத்தம் எத்தனை எத்தனை. இதற்கெல்லாம் ஆங்கில வைத்தியரிடம் தான் பறந்து போவோம். அங்கு என்ன நடக்கும்? பாக்டீரியா, வைரஸ் என்று சொல்லி விதம் விதமான சிலினுகளையும் மாத்திரைகளையும் தருவார்கள்.

பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்றும் கூறுவார்கள். என்ன செய்வது ஆங்கில மருத்துவ உலகில் வாழ்கின்றோம்.

சுகர்,பிரஸர், கொழுப்பு நோய்களுக்கு மாத்திரைகள் தரப்படும். இது நோய்களே இல்லை. இந்த „நோய்களுக்கு“ எங்கள் சமையலறையிலேயே வைத்தியம் இருக்கு. இதை யார் கவனிப்பார்?

அவர்கள் தந்த மாத்திரைகளால் யாருக்காவது அந்த நோய்கள் இல்லாமல் போயிருக்குமா? கிடையாது! வாழ்கை பூரா மாத்திரை போடவே வேண்டும். ஆனால் பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். எங்க வாயும் சும்மாவா? பக்கத்தில் பேரன் சாப்பிடும் பிரியாணியில் ஒரு கண், மகன் வாங்கிவரும் பிட்ஸாவில் நாலு வாய். இது போதாதா? ஆங்கில வைத்தியமும் பல உயிர்களைக் காப்பாற்றியே வைத்திருக்கிறது. இதயநோய் புற்றுநோய் இப்படியான பல நோய்கள் அடங்கும். அதிலும் குறை சொல்ல முடியாது.

நான் என் கதைக்கு வருகிறேன். என் உடம்பு எலும்புகள் பலவகையான தேய்மானத்துக்கு உட்பட்டு நித்தம் வேதனை தான். தடுக்கி விழுந்தால் அங்குதானே போகவேண்டும். பல தடவை போனேன், கையில் பலதடவை அறுவைசிகிச்சையும் செய்தார்கள். ஊசிகள், மருந்துகள் என்று போக்கிடமின்றி ஆமா போட்டேன்.

இறுதியில் நான் ஊகூமே போட்டுவிட்டேன். காரணம் என் கை தோள்மூட்டிலிருந்து கீழ்நோக்கி சரியான வலி. தோள் மூட்டில் கூடுதலான தேய்மானம். இனி அறுவை சிகிச்சை அல்லது விலை கூடிய ஊசி எலும்பில் ஏற்றவேண்டும். ஊசி ஏற்றினாலும் மீண்டும் ஒரு வருடத்தால் வலி உண்டாகும், மீண்டும் ஊசி. போதுமடா சாமி வைத்தியத்துக்கே ஒரு கும்புடு!

என் நிலைமை எப்படி இருந்தது தெரியுமா? கை மேலே தூக்கமுடியாது, பின்னால் கொண்டுபோகமுடியாது, தலைமுடி சரியாக வாரமுடியாது, சிலசமயம் சோறு எடுத்து வாயில் வைக்கமுடியாது. முழங்கையை இடதுகையால் பிடித்து உயர்த்தியே வாயில் கையை கொண்டு போவேன். பரிதாபமான காட்சியப்பா இதெல்லாம்.

இன்னுமொரு முக்கிய நோய் ஒன்றும் எனக்கு இருக்கு. அதே எலும்பு தேய்மானத்தால் மலவாசல் இரண்டு பக்கமும் உள்ள எலும்புகள் மற்றும் மலவாசல் உட்புறமும் எனக்கு ஒரு வலி உண்டாகும். அதைப்போல் ஒரு வலி குழந்தைப் பேறு வலிக்கு ஒப்பானது. இந்த நோய் இருபத்தைந்து வருடமாக இருக்கிறது. குறைந்தது பதினைந்து வைத்தியர்கள் பார்த்திருப்பார்கள்.

பலவித கமராக்கள் பரீட்சைகளும் பண்ணிப் பார்த்துவிட்டார்கள். வழியே பிறக்கவில்லை. நான் முடிவு எடுத்தேன் ஆங்கில வைத்தியம் வேண்டாம் சித்தா ஆயுர்வேத வைத்தியம் பார்ப்போம். கேரளா முழுவதும் தேடினோம், பல வழிகளில் அழைத்தார்கள். வெளிநாடுதானே பணம் முன் நின்றது, இருந்தும் நோய்தீரவேண்டுமே?

நான் வணங்கும் தெய்வங்களின் அருளோ தெரியவில்லை ஒரு பொறி மண்டையில் தட்டியது. ஏன் என் நாட்டில் போய் வைத்தியம் பார்க்கக் கூடாது? அங்கே போவோம் எனத் தீர்மானித்து சித்தா பார்க்கப் போவதாகப் பிள்ளைகளிடம் கேட்டேன்.

அங்கு போய் நாற்பது நாட்கள் நின்று வைத்தியம் செய்தேன். வைத்தியசாலைக்கு நான் சென்றது கிழமைக்கு ஒருதரமாக நான்கு தடவைகள் மட்டுமே. அங்கு நிற்கும் நாட்களில் ஒரு பெண்ணின் உதவியுடன் மசாஜ், ஒத்தடங்கள் எண்ணை தேய்ப்பது போன்றவை திறம்படச் செய்து நாடு திரும்பி உள்ளேன். ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. இப்போது எனது கை இரண்டு பேரைத் தூக்கும் பலம் பெற்றுள்ளது. மற்றும் எனது இருபத்தைந்து வருட வேதனை 80மூ இல்லாமலே போய்விட்டது.

நான் மாறிவிட்டது என மட்டுமே சொன்னேன், எப்படி என்பதை விவரிக்கின்றேன்.

கொழும்பில் உள்ள பெரிய சித்தா வைத்தியசாலைக்குச் சென்றேன். நாட்டில் அரசாங்கம் தான் தமிழருக்கு எதிரி ஆனால் சிங்கள மக்கள் இல்லை. அவர்கள் அன்பாகவும் ஆதரவாகவும் நடந்தார்கள். எனது நல்ல காலம், தமிழ் பேசும் வைத்தியர் என் கையை திருப்பினார், மடக்கினார், அழுத்தினார்.

உயிர் போகும் அளவுக்குத் தோள்மூட்டு எலும்பின் மொழியை அழுத்தினார். எண்ணை, ஒத்தடம், பத்து சகலதும் அவர்களே தந்தார்கள். ஒருமாதத்தில் நான்கு தடவையும் அப்படியே நடந்தது.

சித்தா ஆயுர்வேத வைத்தியத்தில் பத்தியம், கசப்பான கசாயங்கள், மூலிகை மருந்துகள் என்றெல்லாம் சொல்லி அந்த வைத்தியம் பக்கம் போகாதவர்கள் எத்தனையோ பேர். அதெல்லாம் அந்தக் காலம்!

இப்போது மாத்திரைகள் மட்டுமே. அழகான வைத்தியம், அற்புதமான அணுகுமுறை. முக்கியமான ஒன்று, உடல் பயிற்சிகள் செய்யவேண்டும். அது செய்யாவிட்டால் எந்த வலிகளும் போகவே போகாது.

எங்கள் நாட்டில் எவ்வளவு திறமைகள் உள்ளன. மேலை நாடுகளில் இல்லாத அற்புதங்கள் உண்டு. அங்கு உள்ள மருத்துவ எண்ணெய்களைத் தடவினால் ஓடிவிடும் கால் கை வலிகள். நம்பிக்கை வேண்டும் நோய்கள் தீர. நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஆனால் என் பிள்ளைகள் ஊகூம் அதா இதா என்று கிட்டவே வரமாட்டார்கள். எல்லாம் பட்டுத்தான் திருந்தவேண்டும்.
நான் மீண்டும் சித்தாவிடம் போகிறேன்! யார் யார் வரப்போகிறீர்கள்?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *