ஈழத்து முதல் தமிழ் பெண்இசை அமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன்.
இவர் ஈழத்து முதல் தமிழ் பெண் இசை அமைப்பாளர். இலங்கையில் முதல் தமிழ் இசைத்தட்டை வெளியிட்ட ஈழத்து மெல்லிசை மன்னர் திரு M.P பரமேஸ் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.ஈழத்து மெல்லிசைக்குயில் என்பது பிரபாலினியின் பட்டங்களில் ஒன்று. 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் Edison விருது பெற்ற முதல் ஈழத்துப் பெண் என்ற பெருமையும் இவருக்கே. பல மொழிகளில் வெளியிடப்பட்ட queen cobra என்ற இசைத்தட்டை இசை அமைத்து ,பாடி,எழுதி,தயாரித்து வெளியிட்ட இவரை சந்தித்து பல கேள்விகளுக்கு பதில் தேடிக் கொண்டோம்.
இசைத்துறைக்குல் நீங்கள் எப்படி வந்தீர்கள்?
ஒரு சங்கீதபரம்பரையில் பிறந்த நான் எனது சின்ன வயதிலிருந்தே என்னை இசையில் ஈடுபடுத்திக்கொண்டேன் இசை தான் எங்கள் குடும்பத்தின் மூச்சு.யேர்மனிக்கு
நீங்கள் எப்படி வந்தீர்கள்?
இலங்கையில் பிறந்து 10வயதில் எனது பெற்றோருடன் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து வந்தேன்.பின்பு எனது கணவரையும் இங்கே ஒரு இசை ஒரு நிலைக்குழுவில் தான் சந்தித்து, காதலித்து பின்பு திருமணமும் செய்து கொண்டேன். இப்போது அவருடனும் எங்கள் இரு குழந்தைகளுடனும் california வில் வாழ்ந்து வருகிறேன்.
நீங்கள் முதல் முதல் இசை அமைத்த பாடல் எது என்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
நான் முதல் முதல் எழுதி இசை அமைத்த பாடல் – கண்ணிலே தெரிந்த மின்னல் – நான் உந்தன் கண்மணி.
அப்பொழுது எனது வயது 13, பல வருடங்களுக்கு பிறகு தான் அதை ஒரு இசைத்தட்டாக வெளியி;ட முடிந்தது
அதை வெளியிட பல வருடங்கள் ஆனாதற்க்கு காரணம் என்ன?
காரணம் வணிகரீதியாக நாங்கள் இன்னும் வெற்றி பெறாதது தான். வேகமாக நாங்களும் எங்கள் கலையும் முன்னுக்கு வர வேண்டும் என்றால் Financial Support எங்களுக்கு வேண்டும்.
அப்பொழுது கலைக்காவலர் திரு சிறீபதி சிவனடியான் கேட்காமலையே 1995 ஆம் ஆண்டு சங்கீத சாம்ராஜ்சியம் என்ற இசைத்தட்டை வெளியிட பணம் கொடுத்து உதவினார். அவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
அடுத்த சந்ததியில் உருவாக்கிக் கொண்டிருக்கும் உங்களைப் போன்ற இசைக்கலைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எங்கள் கதையை எங்கள் வேரை நாங்கள் அடியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும், மூத்த கலைஞர்களுக்கு நீங்கள் மரியாதை கொடுத்தால் தான் இன்னும் ஒரு 20,30 வருடங்களுக்கு பின்பு உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். தென் இந்திய மேடைகளில் பார்த்திர்கள் என்றால் மூத்த கலைஞர்களுக்கு என்ற ஒரு மகத்தான மதிப்பு இருக்கும். அவர்கள் பழைய பாடல்களை, இசையை பார்த்து பார்த்து தான் புதுசு புதுசாக அமைக் கிறார்கள். அவர்களின் கலை வளர்ந்து கொண்டு போகின்றது. நாங்கள் பழையதை மறந்து விட்டு, புதுசு புதுசாக அமைப்பதால் எங்கள் கலை இன்னும் போதிய அளவு அங்கீகாரம் பெறாமல் இருக்கின்றது.
பெரும்பாலும் ஆண்கலைஞர்களைப் போல் பெண்கலைஞர்களால் நிலைத்து நிற்க முடியவில்லை, ஏன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
குடும்பம் என்று சொன்னால் யாருக்கும் பிடிக்காது, ஆனால் அது தான் உண்மை. எனது பிள்ளைகள் சொந்தமாக இயங்குவார்கள் என்று எனக்கு தோன்றும் வரைக்கும் நான் எங்கும் செல்ல மாட்டேன். கடமைகள் தான் முக்கியம். அத்தோடு வேற தொழிகளில் கிடைப்பது போல ஒரு கலைஞனுக்கு வருமானம் இல்லை. வருமானம் வரும் அந்த அளவுக்குக்கு நாங்கள் இன்னும் வரவில்லை அப்படி இருக்கும் போது சுத்தி இருக்கும் நண்பர்கள், சொந்தக்காரர்கள் கேட்பார்கள் ஏன் நேரத்தை வீண் ஆக்குகின்றாய் என்று.
உங்களை அப்படி கேட்கிறார்களா?
நிச்சயமாக ஒவ்வொரு நாளும் கேட்கிறார்கள். அப்படி கேட்டாலும் அதை நீங்கள் எவ்வளவு தூரம் மனசில் எடுக்கிறீங்கள் என்பது தான் முக்கியம், உங்கள் பாதையில் இருந்து நீங்கள் மாறாமல் இருக்க வேண்டும். மற்றவர்களின் கதையை காதில் போட்டுக் கொண்டால், நீங்கள் நினைத்ததை சாதிக்க முடியாமல் போய் விடும்.
பிரபாலினியிடம் நன்றிகளை கூறி விடை பெற்றுக் கொண்டோம்.
-சிபோ.சிவா
873 total views, 2 views today