மூன்று வகைச் சீவான்மாக்கள்
சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநித
ஆன்மாக்கள் (உயிர்கள்) விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூன்று வகைப்படுவர். உயிர்களின் பொது இயல்பானது தனித்து நிற்காது ஏதேனும் ஒரு பொருளைப் பற்றி நிற்பதாகும்.
உயிர்கள் இறைவனைத் தவிர வேறு பொருளைப் பற்றி நிற்பதும், கருவி கரணங்களுடன் நின்று ஐந்தவத்தைப்படுவதும், அறிவித்தால் அன்றி அறியமாட்டாததாயும் இருக்கும். உயிர்கள் ஆணவ மல மறைப்புக்கு உட்பட்டு ஆணவம் (தூலமாக), கன்மம், மாயை ஆகிய மும் மலக் கட்டுடையவர்கள் சகலர் எனவும், ஆணவம் (தூலமாக), கன்மம் ஆகிய இரு மலக் கட்டுடையவர்கள் பிரளயாகலர் எனவும், ஆணவ மலக்கட்டு மட்டும் (சூக்குமமாக) உள்ளவர்கள் விஞ்ஞானகலர் எனவும் அழைக்கப்படுகின்றன. இவ்வுண்மையை திருவருட்பயனில் வரும் பின்வரும் பாடல்
“திரிமலத்தார் ஒன்றதனில் சென்றார்கள் அன்றி
ஒருமலத்தா ராயு முளர்.”
ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலத்தை உடையவர் என்றும், மும்மலங்களில் ஒன்றாகிய மாயை நீங்கி மற்ற இரு மலங்களை உடையவர் என்றும், இவர்கள் தவிர ஆணவமலம் மட்டும் உடையவர் என்றும் மூவகையான ஆன்மாக்கள் உளர்.
திருமந்திரத்தில் ஆன்மாக்கள் பற்றிக் கூறும் பாடல் எண் 492 இல்
“சக்தி சிவன் விளையாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்டத்(து) இடைபூட்டிச்
சுத்தம தாகுந் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே”
சக்தியும் சிவனுமாக விளங்குகின்ற சதாசிவப் பரம்பொருளின் அருட் கருணையினால், உடலை உயிர் பெறச் செய்து, சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு மயக்கங்களிடையே சேரவிட்டு, ஆன்மாக்கள் சுத்தமாக அந்த மாயைகளின் மயக்கத்தில் இருந்து தனியே பிரிந்து, மனதுக்குள் தங்கி சீவன்களைச் சிவமயமாக்கும்.
திருமந்திரத்தில் மூவகை ஆன்மாக்கள் பற்றிக் கூறும் பாடல் எண் 493 இல்
“விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்(து)
அஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம்
விஞ்ஞான ராதிகள் வேற்றுமை தானே”
ஆராய்ந்து எதையும் ஏற்றுக் கொள்கிற ஆராய்ச்சி ஞானம் உள்ள விஞ்ஞானகலர் நால்வர். ஓடுக்கத்தில் அந்த ஞான நல்லறிவு பெறும் பிரளயாகலர் மூவர். உலக வாழ்வில் ஈடுபட்டு அஞ்ஞானம் உடையவர்களாக இருக்கும் சகலர் மூவர் ஆக மொத்தம் பத்துப் பேர்கள். ஆராய்ச்சி ஞானம் உள்ள விஞ்ஞானலர் உடலோடு இருக்கும் போதே சிவத்தை உணர்ந்தறிந்த சீவன் முத்தர்கள். இவர்கள் சித்தர், உத்தமர், மத்திமர், அதமர் என நால்வர், இவர்களுக்கு ஆணவ மலம் ஒன்று மட்டுமே உண்டு. இதை இறைவன் அவர் நினைவோடு பொருந்தி இருந்து அறுப்பான். பிரளயாகலர் ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்களைக் கொண்டவர்கள். இவர்கள் இறைவன் கடைக்கண் நோக்காலேயே மாயக் கட்டறுக்கப் பெறுவர். சகலர் உலக வாழ்வில் பொருந்திய ஆணவம், கன்மம், மாயை என்னும் மும் மலங்களிலும் சிக்கித் தவிப்பவர்கள். இவர்களுக்கு இறைவன் குருவடிவாக வந்து உபதேசம் செய்தருளுவான்.
விஞ்ஞானகலர் உத்தமர் எனக்கூறும் பாடல் எண் 494
“விஞ்ஞானர் கேவலத் தார்அது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசஞ் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே”
விஞ்ஞானகலர் என்பவர்கள் ஆணவமலம் மட்டுமே உடையவர்கள். அந்த மலம் நீங்கப்பெற்றவர். தத்துவ அறிவுடையோர்கள். அறிவுக் கடவுள் எட்டுப் பேர். இவர்கள் இறைவன் உடலில் பொருந்தி இருப்பவர்கள். எண்வகை ஞானம் உடைய மந்திரத் தலைவர்கள் ஏழரைக் கோடி பேராகும். உண்மையான மெய்த் தவம் புரிந்த ஞானவான்கள் ஆணவமலத்தை விட்டொழித்தவராவார்கள். பிரளயாகலர் மத்திமர் எனக் கூறும் பாடல் எண் 495
“இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட்டு உருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே”
விஞ்ஞானகலரில் பக்குவம் குறைந்தவர்கள் உடலோடு கூடிச் சீவன் முத்தி அடையாமல், அடுத்து எடுக்கும் பிறவியில் முத்தி அடைவர். இரண்டாவதாக உள்ள ஆணவம் கன்மம் ஆகிய இரு மலம் உடைய (பெத்தர்) பிரளயாகலர் இரண்டு பிறவிகளில் நூற்று எட்டு உருத்திர பதவி அடைந்தவர்கள் என்பவர்கள்.ஆணவம்,கன்மம்,மாயைஎன்னும் மூன்று மலங்களாலும் கட்டப் பட்ட சகலர் மூன்றாமவர். சகலர் கடையினர் எனக் கூறும் பாடல் எண் 496
“பெத்தத்தர் சித்தொடு பேண்முத்திச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத்து அமிழ்ந்து சகலத்து உளாரே”
ஆன்மாவைப் பற்றியுள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் வயப்பட்ட சகலர் சிவனைப் பூசித்துச் சிவஞானம் பெற்றவராவார். ஞானம், கிரியை இரண்டும் பொருந்தியிருக்கச் சிவசிந்தனையில் இருப்போர் சித்தர்களாயிருப்பவராவார். ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங் களையும் விட்டொழிக்க முடியாதவர்கள் ஆரவாரமிக்க உலகியலில் ஈடுபட்டுச் சாதாரண மனிதர்களாக (சகலர்) இருப்பர்.
2,768 total views, 3 views today