வன்னி மண்ணும் வாடியிருக்கும் மக்களும்
அந்த வன்னிப்பயணம் ஏதோ மனதை நெருடிய சம்பவமாக இருந்தது. அதிலும் முல்லைத்தீவு மக்களைப் பார்த்தால் கவலைதோய்ந்த முகங் களையே காண முடிந்தது. போர்முடிந்தாலும் அதன் தாக்கம் இன்னமும் முடியவில்லை என்பதை காட்டி நின்றது. ஆண்டாண்டு தோறும் வீரம் செறிந்த விளைநிலமாக போற்றப்பட்டு வந்தது வன்னி பிரதேசம் அதிலும் முல்லைத்தீவு மண் வீரத்தையும் தமிழ் உணர்வையும் இன்னமும் பறை சாற்றிய வண்ணமே உள்ளது.
கடுமையான போரின் பாதிப்புக்கு உட்பட்டு பிரதேசமாக இது விளங்கியது முற்றிலும் உண்மை.இங்கு வாழும் மக்கள் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர். குன்றும் குழியும் நிறைந்த வனாந்தரப்பிதேசமாக உள் பாதைகள் உள்ளமை இன்னமும் கவலையை தருகிறது. பயிர் வளரவில்லை. மழை இல்லை.வரண்ட மண்ணாக தெரிகிறது.
வாழ்வாதாரத்திற்கு ஏங்கிய மக்களாக உள்ளனர். குண்டுகள் வெடித்த பூமியாதலால் பயிர்கள் இன்னமும் முளைக்கவில்லை என்கிறார்கள். பிரதான தொழிலாக மீன் பிடித்தலை செய்கிறார்கள். ஆங்காங்கு விவசாயம் செய்தாலும் நன்றாக பயிர் செழிக்கவில்லை.
பாடசாலை பிள்ளைகள் நீர் இன்றி கடினப்படுவது தெரிந்தது. உப்பு தண்ணீர்தான் அநேக இடங்களில் உள்ளது. நல்ல நீரை தூர இடத்திலிருந்தே பெற்றுக் கொள்கிறார்கள். பெற்றோரை இழந்த பிள்ளைகள் பலரை கண்டதும் கண்ணீர் பனித்தது.
ஆனாலும் சவால்களை எதிர் கொள்ளும் பிரசைகளை உருவாக்குவோம் என்ற பாடசாலை இலச்சனை என்னைக் கவர்ந்தது.
பாடசாலைக்குச் சென்றால் தமிழ் உணர்வும் படிக்கும் ஆர்வமும் என்னைக் கவர்ந்தது. கல்வியில் கண்ணாய் இருப்பது தெரிந்தது. பல சிறார்கள் ஆர்வமுடன் கற்பதும் திறமையாக உச்சரிப்பதும் நன்கு புலனாகியது.
உடைந்த கட்டிடத்திற்குள்ளே இருக்கும் வகுப்பறைக்குள் தமது கல்வியை தொடர்கிறார்கள். வசதிகள் பெரிதாக இல்லை. ஆனாலும் கற்றல் தொடா்கிறது. உதவிகள் பெரியளவில் கிடைப்பதில்லை என்கிறார்கள். ஆனாலும் போருக்குப் பின் வாழும் குழந்தைகள் சிறுவர்களுக்கு பாட உபகரணங்கள் உணவுப்பொருட்கள் தேவையாக உள்ளது. சோகம் நிறைந்த மக்களை கண்டு உள்ளம் கனத்தது. வசதி படைத்தோர் இந்தப்பிர தேசங்களுக்கு உதவிகளை வாரி வழங்கலாமே!
— நகுலா சிவநாதன்
2,699 total views, 6 views today