ஆண்மை நஞ்சாகுமா? ஆண்கள் உளநல சிகிச்சைக்கான புதிய வழிகாட்டி

மேற்குலக உளவியலின் அடிப்படை, ஆண்கள், அதுவும் வெள்ளை இன, இயல்பான பாலுணர்வு (heterosexual) கொண்ட ஆண்களின் உளவியலாக தான் இருந்துவருகிறது. அதாவது, இந்த வரையறைக்குள் அடங்கும் ஆண்களின் உளவியல், முழு மனித இனத்திற்கும் பொருத்தமானதாக கருதப்பட்டு வருகிறது. அதனால் தான், இதுவரை ஆண்கள் உளநலம் சார்ந்து ஒரு வழிகாட்டியும் பிரத்தியேகமாக உருவாக்கப்படவில்லை. மாறாக, பெண்கள், மற்றும் வயது, பால்நிலை, இனம் என்ற அடிப்படையில் எல்லாம் ஒவ்வொரு சாராருக்கான வழிகாட்டிகள் American Psychological Association [APA] இனால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அண்மையில், APA இன் ஆண்கள் உளநலத்திற்கான வழிகாட்டி (பரனைநடiநௌ) பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

இந்த வழிகாட்டி தரும் செய்தி என்னவென்றால், காலம் காலமாக ஆண்மை என நாம் வரையறுக்கும் கருத்தியலுக்குள் வளரும் ஆண்கள் உடல் மற்றும் உளநலம் சார்ந்த பாதிப்புகளை அனுபவிக்க வேண்டி வருகிறது என்பது தான். ஆண்மை பற்றிய பார்வை, இனம், வயது, மற்றும் கலாச்சாரம் சார்ந்து மாறுபடும் என்பதை அங்கீகரிக்கும் துறைசார் நிபுணர்கள், இந்த பிரிவினைகள் எல்லாவற்றையும் கடந்து, ஆண்மை என்பதற்கு உலகளாவிய சில பொதுவான அம்சங்கள் இருப்பதை சுட்டி காட்டுகிறார்கள். இவை, பெண்மைத்தன்மையை எதிர்த்தல், சாதித்தல், பலவீனத்தை தவிர்த்தல், துணிவான செய்கைகள், அபாயங்களை சந்தித்தல், மற்றும் வன்முறை என பட்டியல்படுத்தப்படுகின்றன. ஆண்மைத்தன்மையில் இருக்கும் நேர்மறையான அம்சங்களை பலப்படுத்தும் அதே சமயத்தில், இங்கு குறிப்பிட்ட எதிர்மறையான அம்சங்களை, அது தரும் பாதிப்புகளை, நாம் உணர்ந்து கொள்ளவேண்டும் என்பது தான் இந்த வழிகாட்டியின் செய்தி.

இந்த வழிகாட்டிக்கு எதிர்ப்புகள் வந்திருக்கின்றன. ஆண்களை ஆண்களாக இருக்கவிடுங்கள் என்றும், இந்த வழிகாட்டி ஆண்களை அரக்கத்தனமாக சித்தரிக்கிறது என்றும் எதிர்கருத்துகள் எழுந்திருக்கின்றன. இதற்கு விளக்கம் கொடுக்கும் உளவியல் நிபுணர்கள், சிறுவர்களும் ஆண்களும் மகிழ்வான, ஆரோக்கியமான வாழ்வை கொண்டு நடத்துவதற்கு உறுதுணை புரிவதே இந்த வழிகாட்டியின் நோக்கம் என்கிறார்கள். University of Redlands பேராசிரியர் Fredric Rabinowitz சொல்கிறார், “ஆண்கள் மத்தியில் தற்கொலையின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. இருதயம் சம்பத்தப்பட்ட நோய்கள் அதிகமாக இருக்கின்றன. வயது அதிகரிக்க, தனிமை உணர்வும் இவர்களில் அதிகரிக்கிறது. ஆண்கள் உணர்வு கையிருப்பை விரிவாக்குவதே எம் நோக்கம். அவர்கள் பலத்தை அழிப்பதல்ல.”

When Boys Become Boys சிறுவர்களாகும் போது என்ற நூலின் ஆசிரியரும், Stanford University இல் சிறுவர்கள் உள – சமூக வளர்ச்சியை பற்றி கற்பிப்பவருமான Judy Y. Chu, இந்த வழிகாட்டி சிறுவர்கள் உணர்வு வெளிப்பாட்டுக்கு தடை போடும் நமக்கு ஆழ்ந்த அறிவை தருகிறது என்கிறார். “மனிதர்கள் எல்லோருமே ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கிறோம். நெருக்கமான உறவுகள் எமக்கு ஆரோக்கியமான வாழ்வை தரும். அப்படி இருக்கும் போது, இந்த அடிப்படைத் தேவை சிறுவர்களுக்கு (ஆண்களுக்கு) மட்டும் முக்கியமற்றது என நாம் எப்படி கருதமுடியும்?” என்று கேட்கிறார் Chu. சிறுவர்கள் வளர்ப்பில் நாம் உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் உரிய முக்கியத்துவத்தை முன்னிறுத்துவதில்லை என்பது இவர் கருத்து.

உணர்வுகளை அடக்கிக்கொள்வது தான் ஆணுக்கு அழகு என்று கற்பிக்கப்படும்போது, பலவீனத்தை வெளிக்காட்டுவது ஆண் என்ற பெயருக்கு களங்கம் என்று தான் தோன்றும். மற்றவர்கள் உணர்வுகளை ஆண்கள் மதிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் போது, உணர்வு கல்வியையும், அனுபவத்தையும் எப்படி அவர்களில் இருந்து தள்ளி வைக்கலாம்?

பொதுவாகவே ஆண்கள், உளநல நிபுணர்கள் உட்பட, மற்றவர்களிடம் உதவி கேட்பதை தவிர்க்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது இந்த வழிகாட்டி. தம்மை பலவீனமானவர்களாக மற்றவர்கள் பார்ப்பார்கள் என்ற எண்ணமும் இதற்கு காரணம். ஆண்கள் உதவி தேடும் போது கூட, அவர்கள் நோய் அடையாளப்படுத்தலில் உளநல நிபுணர்கள் தவறிழைக்கிறார்கள். உள்நோக்கிய உளச்சோர்வு போன்ற நோய்நிலைகளை புறக்கணித்து, மதுபாவனை போன்ற வெளிக்காரணிகளுடன் தொடர்பு படும் நோய்நிலைகள் தான் ஆண்களில் அதிகமாக அடையாளம் காணப்படுகிறது.

ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய காரணிகள் பற்றிய ஆய்வுகளையும் இந்த வழிகாட்டி விளக்குகிறது. உணவுப் பழக்கவழக்கங்களாலும், புகைத்தல் போன்ற ஆபத்தான பழக்கவழக்கங்களாலும் பெண்களை விடவும் ஆண்கள் ஆயுள்காலம் குறைவடைகிறது. இனவேறுபாடின்றி எந்த சமூகத்திலும் பெண்களை விடவும் ஆண்கள் சாதகமான நிலையில் இருக்கிறார்கள். அப்படி இருந்தும், வன்முறைகளில் அதிகம் ஈடுபடுபவர்கள் ஆண்களாக தான் இருக்கிறார்கள். தரவுகள் ரீதியாக பார்த்தால், பாதிப்புக்கு உள்ளாகுபவர்களிலும் ஆண்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.

ஆண்மை என்று நாம் எதனை நினைக்கிறோம்

ஆண்மை என்று நாம் எதனை நினைக்கிறோம், எங்கள் கண்ணோட்டத்திற்கான காரணம் என்ன என நாம் எல்லோரும் சிந்தித்து பார்க்கவேண்டி இருக்கிறது. சிறுவர்கள் ஆண்களாக வளர்ந்து வரும் காலகட்டம், பல தடைகளையும் கொண்ட காலமாக இருக்கிறது. பெண்கள் மேலான பார்வை உட்பட பல விடயங்கள் பிரச்சனைக்குரியதாகின்றன. நாம் ஆண்பிள்ளைகளை வளர்க்கும் விதம் முற்றுமுழுதாக மாறவேண்டும் என்கிறார் ஆண்-உளவியலில் நிபுணத்துவம் பெற்ற Dr. Michael Reichert. ஆண்மை பற்றிய ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை, ஆண்கள், பெண்கள், மற்றும் எந்த பால்நிலையை சார்ந்தவர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது என்கிறார் இவர். ஆண்பிள்ளைகள் இப்படித்தான் வளரவேண்டும் என்ற வரைமுறைகள், ஆண்பிள்ளைகளுக்கு உணர்வு, கல்வி மற்றும் ஆரோக்கியம் சார்ந்து பல பாதிப்புகளை கொண்டுவந்திருக்கின்றன என்கிறார் Dr. Reichert.

ஆய்வுகளின் படி, ஆண்மைக்கான வரையறைகளில் அதீத நம்பிக்கை வைக்கும் ஆண்கள் தம் ஆரோக்கியத்தில் கவனம் குறைந்தவர்களாகவும், மதுபாவனை, புகைத்தல் என்பவற்றில் அதிக நாட்டம் உள்ளவர்களாகவும், உளநல சேவைகள் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அண்மையில் வெளிவந்திருக்கும் ஒரு ஆய்வு கட்டுரை, நம் கனேடிய புலம்பெயர் தமிழ் சமூகத்தில், ஆண்மை, போர் , உளநலம், என்பவற்றுக்கிடையிலான தொடர்பு பற்றி தகவல் வெளியிட்டிருக்கிறது ((Affleck, Thamotharampillai, Jeyakumar & Whitley, 2018). Culture Medicine and Psychiatryஎன்ற ஆய்விதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் இந்த ஆய்வு, போரில் தம் அன்புக்குரியவர்களை காப்பாற்றமுடியாமல் போனமை, புலம்பெயர் சூழலில் குடும்பத்திற்கு தகுந்த ஆதரவை வழங்கமுடியாமை, உழைப்பும் வேலையும் சார்ந்த சிக்கல்கள், மற்றும் தம் இயலாமையை குத்திக்காட்டும் துணைவரால் ஏற்படும் தாக்கம் என்று, ஆண்கள் தம் அனுபவத்தில் சிக்கலாக உணர்ந்த 4 விடயங்களை முன்வைக்கிறார்கள். இந்த விடயங்கள் ஆண்களின் பால்நிலை சார்ந்து, முக்கியமாக அவர்கள் ஆண்மை பற்றி கொண்ட பார்வையை சார்ந்து பிரதிபலிக்கின்றன என்பது ஆய்வாளர்கள் கருத்து.

எம் சமூகத்தை சேர்ந்த 33 ஆண்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வு, ஆண்கள் தம் உளத்தாக்கங்களை வெறுமையான, அல்லது பலம் குறைந்த தம் ஆண்மையோடு (Depleted masculinity) தொடர்புபடுத்துவதாக விளக்குகிறது. தம் ஆண்மையை வேறுவிதமாக “கட்டியெழுப்ப” அல்லது “நிர்ணயிக்க”, இந்த ஆண்கள் சமூகத்தில் மற்றும் பொது அமைப்புகளில் தலைமைத்துவ பதவிகளை தேடி இணைகிறார்கள் என்ற கருத்தும் முன்வைக்கப் பட்டிருக்கிறது. இந்த ஆய்வாளர்கள் பரிந்துரையின் படி, ஆண்மை, மற்றும் ஆண்மையின் அடையாளம் பற்றிய மீளாய்வும், மீள்-கட்டியெழுப்பலும், போரால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்த ஆண்களின் உளநலத்திற்கு மிகவும் அவசியமாகிறது.

வழி வழி வந்த ஆண்மை சார்ந்த பார்வை தற்பொழுது கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. நச்சுத்தன்மையான ஆண்மை toxic masculinity போன்ற பதங்கள் பாலியல் வன்முறைக்கு எதிரான சர்வதேச MeToo அமைப்பின் மூலம் பரவலாக பேசுபொருள் ஆகியுள்ளன. MeToo எமக்கு கற்றுத்தந்திருக்கும் பெரிய பாடம் என்னவென்றால், ஒரு சமநிலையான உலகத்தை உருவாக்குவது பெண்கள் கைகளில் மட்டுமில்லை என்பது தான், என்கிறார் . முன்னெப்பொழுதும் இல்லாதவாறு, பெண்-வன்முறையை எதிர்த்து குரல் எழுப்ப இன்னும் இன்னும் ஆண்கள் முன்வரவேண்டும் என்கிறார் Dr. Reichert . தம் பல கால அதிகார பலத்தை சற்றே தளர்த்தி தோள் கொடுத்தால், அதனால் ஆண்களும் அதிக ஆரோக்கியமான வாழ்வை அனுபவிக்க முடியும் என்பது இவர் கருத்து.

ஆணாதிக்க அடிப்படையில் பால்நிலையை நோக்குவதை கண்டிக்கும் ஆண்கள், பலவீனமானவர்கள் எனவே கருதப்பட்டு வந்தனர். ஆனால் பெண்களும் இந்த ஆணாதிக்கத்தை கேள்வி கேட்க ஆரம்பித்தபோது, ஆண்கள் கூட, தமக்கு இருக்கும் சாதகமான சில விடயங்களை விடுத்து, ஆணாதிக்க அமைப்பு முறை தம்மையும் பாதிக்கிறது என்பதை உணர ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிறார் Dr. Reichert சொல்கிறார்: பெண்களுக்கான 50 வருட போராட்டத்தின் விளைவாக, பால்நிலை சார்ந்த பாரபட்சங்கள் பற்றிய விளக்கத்தையும், பெண்கள் தாமே தம்மை யார் என நிர்ணயிக்க கூடிய சுதந்திரத்தையும் நாம் அடைந்திருக்கிறோம். ஆனால், ஆண்கள் விடயத்தில் மட்டும், உயிரியலில் விடை தேடி தப்பிக்க பார்க்கிறோம். ஆண்களா? அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள், ஏனென்றால் அது ஹோர்மோன்கள், உயிரியல், என்கிறோம்.

ஆண்கள் போட்டுக்கொள்ளும் முகத்திரையை, பால்நிலை உளவியல் நிபுணர்கள் “Man Box” என்று அழைக்கிறார்கள். அந்த முகத்திரைக்குள் ஆண்கள் சிக்குண்டு விடுகிறார்கள் என்கிறார்
Dr. Reichert . சமூக வரையறைகளுக்கேற்ப எப்படி சிந்திக்க வேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் அவர்கள் மேல் திணிக்கப்படுகின்றன. எவ்வளவுக்கு இந்த Man Box ற்குள் கட்டுப்படுகிறார்களோ அவ்வளவுக்கு ஆண்கள் வன்முறையில் ஈடுபடுவதும், மதுவை நாடுவதும், உளச்சோர்வு போன்ற உளநோய்களுக்கு ஆளாவதும் அதிகரிக்கிறது. இந்த வேதனை வெளிநோக்கி மட்டுமல்ல, ஆழமாக உள்நோக்கி தாக்குகிறது. ஆணுக்கு எதிராகவே திரும்பிவிடுகிறது.

அப்படியானால், ஒரு இளைஞன் எப்படி தைரியத்தை பெறமுடியும்? தன் உணர்வுகளை அடக்கிவிட்டு, பிடித்த பிடியில், தனக்கு தேவை என கருதுவதை நிலைநிறுத்துவதா? அல்லது, தன் மனதோடு தொடர்பு ஏற்படுத்தி, தன்னை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தி, நெருக்கமான உறவுகள் தரும் ஆதரவில் அந்த பலத்தை, தைரியத்தை பெற முடியுமா? மனிதனுக்கு எது பலம், எது பலவீனம்? பொறுமையும், சவால்களை சமாளித்துப் போகும் சாதுரியமும் வேண்டுமென்றால் என்ன தேவை? பெண் பிள்ளையோ, ஆண் பிள்ளையோ, இந்த கேள்விகளுக்கு விடை காண, எம் பிள்ளைகளுக்கு நாம் உதவ வேண்டும் என்பது Dr. Reichert போன்ற உளநல நிபுணர்கள் கருத்து. சிவனில் பாதி சக்தி என்ற முற்போக்கான சிந்தனையை பண்டைக்காலம் தொட்டு படித்து வளர்ந்த நம் தமிழர்கள் இந்த சவாலை ஏற்றுக்கொள்வார்கள் என நம்புவோம்.

— Dr .புஷ்பா.கனகரட்டணம்

2,545 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *