நெஞ்சம் நிறைந்;த நிறைவான நினைவுகள்
பொன் பரமானந்தர் வித்தியாலய அதிபரும் வெற்றிமணி ஸ்தாபகரும் ஆசிரியருமாகிய திரு மு.க சுப்பிரமணியம் ஆசிரியரின் 100வது ஆண்டு விழா ஜேர்மன் சுவெற்றா நகரில் 12.05.2019 இல் நடைபெற்றது. இவ் விழாவில் அவரது மாணவனாக எனது துணைவியாருடன் பங்கேற்கும் பாக்கியம் பெற்றேன்.
இவ் விழா அமைப்புக்கும் எமக்கு அழைப்புத் தந்த திரு மு.க.சு.சிவகுமாரன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் வாழும் காலத்தில் எமது மதிப்பிற்குரியவர்க்குரிய நூற்றாண்டு விழாவைக் காணக் கிடைப்பதென்பது இறைவன் எமக்களித்த வரப்பிரசாதமே. அதுவுமோர் கல்வி கற்ற அதிபரின் விழா என்பதில் மிகவும் அகமகிழ்ச்சி. குரும்பசிட்டி பொன் பரமானந்தர் வித்தியாலயத்தில் 12 வருடங்கள் மு.க.சுப்பிரமணியம் ஆசிரியர் அதிபராக அரும் பணியாற்றியிருந்தார்.
இக் காலத்தில் அவரிடம் கல்வி கற்கும் வாய்ப்பினைப் பெற்றதும் அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது மிக உன்னதமே. பெற்றவர்கள் எமை பேணிக்காத்திட்டாலும் எதிர் காலத்தில் நற்பேறு பெற்ற மாணவர்களாக்கித்; தருபவர்கள் குருவாக அமைந்திட்ட ஆசிரியப் பெருந்தகைகளே!
திரு மு.கசுப்பிரமணியம் ஆசிரியரவர்கள் அதிபராக கடமையேற்றது எமது பாடசாலைக்கோர் முன்னேற்றப் படிகளாகவே அமைந்தது எனலாம். ஆரம்பகாலத்தில் பொன் பரமானந்தர் வித்தியாலயம் நடுவண் ஓர் மண்டபத்துடன் இரு சிறு ஓலையால் வேயப்பட்ட வகுப்பறைகளுமே இருந்தன. இந் நிலையில் மாணவர்கள் படிப்பதற்கான இடவசதிக் குறைபாடுகள் அதிகமாயிருந்தன. மர நிழல்களில் கூட நாம் இருந்து படித்த காலங்கள் இருந்தன.
முயற்சி திருவினையாக்கும் என்ற வாக்குக்கமைய எதையுமே பொருட்படுத்தாது பாடசாலையின் வளர்ச்சியை நோக்காகக் கொண்டு அரும்பாடுபட்டார். பல தொழிலதிபர்களிடமும் பெற்றோர்களிடமும் உதவி பெற்றார். முன்பக்கமாக இரு பெரிய மண்டபங்கள் வகுப்பறைகளாக அமைக்கப்பட்டன. மாணவர்கள் கல்வி பயிலுமளவுக்கான தளபாட வசதிகளும் உருவாகின. இப்பெருமை முழுவதுமே அதிபரையே சார்ந்தது.
பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான புரிந்துணர்வை உருவாக்கினார். பெற்றார் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டங்களை ஏற்படுத்தினார். மேலும் பாடசாலை வளர்ச்சியை மெருகூட்டினார். மாணவர்கள் வசதிக்கான எல்லாவிதமான விடயங்களையும் அதிபர் தினமொரு திருத்தமாக செயலாக்கினார். இவற்றுள் அத்தியாவசிய தேவையாகவிருந்த குடிநீர் நிரப்பும் தொட்டியை அமைத்தார். அதற்குத் தேவையான நீர் இறைக்கும் யந்திரத்தை மில்க்வைற் தொழிலதிபர் கனகராஜா அவர்களின் உதவியுடன் அமைத்துத் தாகம் போக்கினார்.
அன்றைய காலத்தில் ஒரு விடயத்தை நிறைவேற்றுவதென்பது எளிதான விடயமல்ல. இதற்காக அவர் பட்ட சிரமங்கள் ஆயிரமாயிரம்.
மாணவர்கள் கலை நிகழ்வுகள், பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் என்பன நடத்தப்பட்டன. மாணவர் சேவைப்பணிகள் பலவும் உருவாக்கப்பட்டது. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும் வகையாக சாரணர்படை, குருளைச்சாரணர் படை என மாணவர்கள் குழாம் உருவாக்கப்பட்டு பாடசாலையின் தரமானது உயர்த்தப்பட்டது. எமது பாடசாலை காங்கேசன்துறைத் தொகுதியில் 3 நாட்கள் நடைபெற்ற சாரணர் பாசறையில் பிரபல பாடசாலைகளின் மத்தியில் போட்டியிட்டு பொன் பரமானந்தர் வித்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றிவாகை சூடி அதிபரின் கனவை நனவாக்கினோம்.
அனைவரும் பேதமின்றி நடத்தப்படவேன்டுமென உறுதியாக இருந்தார். வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களுக்கு அவரது பணத்திலே உதவிகள் புரிந்தார். பாடசாலை மாணவர்களுக்கென பொழுது போக்கு நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறும். குறிப்படும்படியாக வேல் ஆனந்தன் அவர்களின் நடன நிகழ்வு, அண்ணை றைட் நாடகம், வாடைக்காற்று திரைப்படம் போன்றன நினைவில் நிற்கின்றன. எப்பொழுதுமே மாணவர்கள் நல்லொழுக்கத்தில் கண்டிப்பாக இருப்பார். இதனை பாடசாலையிலும் வெளியேயும் நடைபெறும் நிகழ்வுகளிலும் பலராலும் அவதானித்து பாராட்டப்பட்;டது.
எமது பாடசாலை 75வது ஆண்டு விழாவானது கோலாகலம் பூண்டது. மாணவர்களின் ஊக்கத்திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்வுகள் இடம் பெற்றன 3 நாட்கள் மிகப் பெரும் கண்காட்சி ஒன்று பிரமாண்டமான ஏற்பாட்டில் அனைவராலும் ஒழுங்கமைக்கப்பட்டது. வடமாகாணத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகளை அழைத்துச் சிறப்பித்தமையானது எல்லோராலும் குறிப்பிட்டு பேசத்தக்க நிகழ்வாக அமைந்தது.
அதிபரது ஒழுங்கின் கீழ் சன்மார்க்கசபை மண்டபத்தில் சித்திரப் பயிற்சி வகுப்புக்கள் திரு மு.க.சு சிவகுமாரன் அவர்களால் நடாத்தப்பட்டன. கிராம மக்களுக்காக பாடசாலை விடுமுறை நாட்களில் முதலுதவி வகுப்புக்கள் திரு போஜன் (செஞ்சிலுவைச் சங்க அதிகாரி) அவர்களால் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
12 வருடகால சேவையில் அவர் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை உழைப்பால் உயர்ந்தவர் எங்கள் அதிபர் பெருந்தகை திரு மு.க சுப்பிரமணியம் அவர்கள் என்பதும் அதனால் சமூகத்தில் நீக்கமற அவரது சேவைகள் நினைவில் நிறைந்தவை என்பதுவும் பெரும் பதிவாகும்.
பொன் பரமானந்தர் வித்தியாலயம் அதிபர் உட்பட பெரும்பாலானவர்கள் எமதூர் ஆசிரியர்களே எமக்குக் கல்வி புகட்டினார்கள். அதனால் எம் மாணவர்கள் ஒழுக்க நெறி தவறா சீலர்களாக உருவாகி உள்ளனர் என்பதில் ஐயமேதுமில்லை. இவ்வகையில் அடியேனும் சுவிற்சர்லாந்திலுள்ள பூரண ஆச்சிரமத்தில் குடும்பமாக இணைந்து கொண்டு ஆன்மீக சமூக சேவைப் பணிகளிலும் ஈடுபட அடித்தள விதையாக அமைந்தவர் எமது ஆசிரியரே.
இவ் வேளையில் வித்யா கல்விக்கு வித்திட்ட மு. இராமலிங்கம் ஆசிரியர் அவர்களுக்கும் கல்வி கற்பித்த சக ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்வுறுகிறோம்.
அக்காலத்தில் அவரது இல்லம் ஓர் கலைக்கூடம்
அதிபர் மு.க சுப்பிரமணியம் வெற்றிமணி ஸ்தாபகரும் ஆசிரியருமாவார், துணைவியார் ஆசிரியர் திருமதி செல்வரத்தினம் (நவநியம்.) கற்கைநெறி புகட்டும் ஆசிரியர், புதல்வன் மு.க.சு சிவகுமாரன் ஓவியக்கலை பட்டதாரி ( BFA). புதல்வி தருமதி கலாநிதி லோதாசன் அவர்கள் குரும்பசிட்டி தபாற் கந்தேரின் அதிபராக திருமதி மாணிக்வாசகர் ஓய்வுபெற்றபின் அங்கு அதிபராகத் தொடர்ந்தவர். தயாநிதி மோகன் BA கலைப்பட்டதாரியும் அத்தோடு பத்மினி சின்னத்துரை வழுவூர் இராமையாபிள்ளை இவர்களிடம் நடனத்தை முறையாகக் கற்று சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தலைமயில் வீரசிங்கம் மண்டபத்தில் அரங்கேற்றம் கண்டவர். இன்று இவரது மாணவர்கள் பலர் நடனத்தில் சிறந்துவிளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு.சிவராஜன் அவர்கள் கொழும்பு ஆயுள்வேதக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து பல ஆண்டுகள் கொழும்பில் சிறந்த வைத்தியராகப் பணிபுரிந்தவர். திருமதி பதுமநிதி அன்பழகள் ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் ….. பட்டம்பெற்வர்.
தாயகத்தில் அக்காலத்தில் அவரது இல்லத்தின்( நிதிபவனம்) வாசலை அலங்கரிக்கவோர் சிறிய நீர்த்தடாகம் அமைந்திருந்தது. அதிலே ஓர் பெண்ணின்; வீணையுடன் இருக்கும் அழகிய நவீன சிற்பம். இந்த அழகான வடிவமைப்பை மு.க சிவகுமாரன் (கண்ணன்) அவர்கள் உருவாக்கியிருந்தார்.
இல்லமருகில் வைரவர் ஆலயமொன்று இருந்தது. இது இவர்கள்; வணங்கும் இஷ்ட தெய்வமாகும். சிறிய அளவிலான ஆலயத்தை எனது தகப்பனார் மகேந்திரம் அவர்களும் சில அயலவர்கள் உதவியுடன் புணரமைக்கப்பட்டு ஊரவர் வழிபாட்டிற்கு வழி அமைத்தார். ஓய்வு பெற்ற பின்பும் அதிபரின் சேவை ஓயவில்லை.
இவ்வேளையில் 1980ம் ஆண்டு அவரது ஜீவாத்மா பரமாத்மாவுடன் சங்கமித்தது. அந்த நாளில் எமதூர் மக்கள் உளமார்ந்த நன்றியுடன் கூடிய அஞ்சலியை செலுத்தியே நின்றனர். காலம் கடந்தும் நல்லவர்கள் மக்கள் மனதில் வாழ்வார்கள் என்பதற்கிணங்க இன்று 100 ஆண்டு நிறைவு விழாவிலும் அவருடனான நினைவுகளுடன் சங்கமித்து வணங்கி அமையும்.
மாணவன்
மகேந்திரம் சக்திபாலன்
வளரட்டும் அவர் பணி! வாழிய அவர் நாமம்!
2,259 total views, 6 views today