பணிவு என்பது தலைகுனிவல்ல

நாம் எமது ஆரம்பக்கல்வியை பெற்றவர்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்கின்றோம். அதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள். இதனையே மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள். நாம் இவர்களை சிறப்பாகப் பெற்றுவிட்டோமானால் அதுவே நமக்கு ஆண்டவன் அளித்த மிகப்பெரும் வரமாகும்.

முதலில் முதியவர்களைக் கனம்பண்ணுதல் நம் தமிழ்மரபாகும். அவர்கள் முன்னிலையில் நாம் எப்படி நடக்கவேண்டும் எப்படி பேசவேண்டும் என்பது எல்லாமே. அது நாம் நாமாக உணர்ந்து வருவது. அந்த உணர்தலுக்கு நம்முன் செயலில் காட்டி நின்ற பெரியவர்களே எமக்கு முன்னுதாரணமாக முன்வந்து நிற்பார்கள்.

இளையவர்களுக்கும் பெரியவர்களுக்கும் இடையில்
ஒரு சந்ததி இடைவெளியிருக்கும்.அதனால்
இளையவர் கருத்துக்கள் அவர்களது கருத்துக்களுடன்
முரண்பட்டும் இருக்கும். இந்த இடைவெளி நாளை இன்று இளையவர் களாக இருக்கும் நமக்கும் வரும் என்பதனை உணர்ந்தால் கருத்து வேறுபாடுகளை பணிவுடன் ஏற்று அதனை பக்குவமாக எடுத்து இயம்பும் குணம் வரும்.
கற்றவர்கள், சமூகத்துக்காக உழைப்பவர்கள், இவர்கள் முன்னிலையில் நாம் பணிந்து நடப்பது நல்லது. இது அவர்களை மகிழ்ச்சிப்படுத் துவதற்கான பணிவு அல்ல. அந்தப்பணிவின் மூலம் நாம் அவர்களின் சேவைகளை உழைப்பை உணர்ந்தவர்களாக மதிப்பவர்களாக வெளிப்படுத்தும் ஒரு செயலாக அது அமையும் என்பதே உண்மை.
எந்தக் கருத்துக்கும் உலகில் எதிர்கருத்து என்று ஒன்று உலகம் பிறந்தநாள் முதல் உள்ளதுதான். ஆனால் அந்த எதிர்கருத்தை வைப்பதில் இருக்கும் நாகரீகம் நமது பணிவான செயல்கள் மூலமே வெளிப்படுகின்றன.
பலகருத்துக்களுக்கு எதிர்வாதம்தான் தீர்வாகும் என்பதும் உண்மை யல்ல. பல நேரங்களில் மௌனம் அதிக வலிமையானதாக இருப்பதையும் நம் வாழ்வில் காணமுடியும்.
இந்த மௌனம் தவறான கருத்துக்களை முன்வைப்பவர்களுக்கு தம்மைத்தாமே சுயமதிப்பீடு செய்வதற்கான ஒரு நேரத்தையும் வழங்கும் அல்லவா. எதிர்வாதம் புரிந்தால் அவர்கள் சிந்தனைகள் எதிர்பதற்கான தேடுதலில் இருக்குமேயன்றி உண்மையை அறிய முற்பட அவகாசம் கிடைத்தல் அரிதல்லவா. இப்படியான நேரங்களில் இந்த மௌனம் பணிவு இவையாவும் தலைகுனிவு என்று எண்ணவிடவேண்டாம்.
இந்தக்குனிவே ஒரு நிமிர்வுக்கான செய்பாடுதான். எதிரிகள் முன் நாம்பணிந்து பேசினால்; அவர்களையும் அறியாது நாம் அவர்கள் மனதில் நிமிர்ந்து நிற்போம்.
நாம் புலம்பெயர்ந்து இங்கு வாழும் காலத்தில் இங்குள் பெரியவர்கள் பலரை பேரூந்தில் சந்தித்து இருப்போம். அவர்கள் முதியவர்களாக இருந்தால் நாம் எழுந்து அவர்களுக்கு எமது ஆசனைத்தைக் கொடுப்போம். அவர்கள் முகமலர்ச்சியுடன் இல்லை தாம் நிற்பதாகக் கூறுவார்கள். சிலர் எமது செயலை நன்றியுடன் ஏற்றும் அமர்வார்கள். இதில் நிற்பதாகச் சொன்வர்களும், இருந்தவர்களும் நமது செயால் எமது அன்பு உள்ளத்தை உணர்ந்தவர்களாகவே இருப்பார்கள். நாம் காட்டும் பணிவு இந்த இடத்தில் அவர்கள்முன் அன்பாக மலர்கின்றது. அவர்களது முகமலர்ச்சிக்கு நாம் எழுந்து இடம்கொடுக்க முற்பட்ட பணிவே காரணம்.
பிறரை மகிழ்விக்கவும், அவர்களது தேவைகளுக்கு கரம் கொடுக்கவும் உதவுவது எமது பணிவான செயல்களே. பணிவு ஒரு போதும் தலைகுனிவாகாது. நீர்வீழ்ச்சி கூட வீழ்ச்சியல்ல தலைகுனிவும் அல்ல. பயிர்கள் எழுச்சியுடன் நிமிர்ந்து நிற்க ஓடும் நதியின் பணிவுதான் அது.

— றஜினா தருமராஜா

2,175 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *