அரிசிக்கும் வெற்றிலைக்கும் டேனிஷ் அதிகாரிக்கு தாரை வார்க்கப்பட்ட செப்புத் திருமேனிகள்!
கடந்த வாரம் ஐரோப்பாவின் மிகப்பிரசித்தமான ஹம் காமாட்சி அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது, தமிழ்க் கடலொன்று ஜெர்மனியில் நிறைந்தது போலே கூட்டம், கூட்டத்தில் இரண்டு அம்மாமார்கள் பேசிக்கொள்கின்றனர் “எப்போ வீட்டுக்கு திரும்ப கோவிலேர்ந்து போறீங்கள் ?” ஒரு அம்மா கேட்க, மற்றோர் அம்மா சொன்னார் “அம்மா தேர் ஏறி போயிருக்கா, அம்மா பச்சை சார்த்தி வர்றத பார்த்துட்டு போவேன்” என்று பதில் சொன்னாள், ஆம் இப்படி கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு ஹம் காமாட்சியும், நல்லைக் கந்தனும், திருவாரூர் த்யாகேசனும், சிதம்பரம் நடராஜனும் வெறும் செப்புத் திருமேனிகள் அல்ல, அவர்கள் நடமாடும் தெய்வங்கள்.
ஆனால் நீங்கள் ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களை வலம் வந்தால் நிச்சயம் ஒரு சோழர்கால செப்புத் திருமேனியையாவது காண்பீர்கள், குறிப்பாக நடராசனென்னும் ஆடல்வல்லா னின் திருமேனி. இந்த தெய்வங்களெல்லாம் ஒரு காலத்தில் திருவிழாவில் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் புரிந்தவர்கள் ஆனால் இன்றோ கண்ணாடிக் கூட்டுக்குள் கடல் கடந்து வசிக்கின்றனர். இவர்கள் பல காலகட்டங்களில் பல காரணங்களுக்காக நாடு விட்டு நாடு வந்தவர்கள்.
ஏன் சோழர் செப்புச்சிலைகளுக்கு அத்துணை சிறப்பு ?
பெரும்பாலும் சோழர் காலத்து செப்புத்திருமேனிகள் அதிகமாக கடத்தப் பட்டும், விலைக்கு வாங்கப்பட்டும் பல நாடுகளில் வைக்கப்பட்டுள்ளன. ஏன் இந்த சிலைகளுக்கு அத்துணை சிறப்பு ? உலகில் கலைகள் பல இடங்களில் பல காலகட்டத்தில் வளர்ந்தன, அப்படி தென்னகத்தில் பொற்கால சோழராட்சி அமைந்த போது, செப்புப் படிமக்கலை அதன் உச்சத்தை எட்டியது என்றே சொல்லலாம்.
முதலில் அச்சு செய்யப்பட்டு அதில் உலோகத்தை உருக்கி ஊற்றி இந்த சிலைகள் செய்யப்பட்டன, சிலையை அச்சை உடைத்தே வெளியே எடுக்க முடியும், ஒரு அச்சை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும், அதனால் ஒவ்வொரு சிலைகளும் தனித்துவமானது, இவற்றோடு சிற்பிகளின் கைவண்ணமும்,கற்பனைத் திறனும் சேரும்போது, தெய்வங்களே கண்முன் வருவர்.
தரங்கம்பாடியிலிருந்து கோப்பன்ஹேகனிற்கு !
டென்மார்க் தலைநகரம் கோப்பன்ஹேகனில் தமிழகத்து சோழர் கால செப்புப் படிமங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பிள்ளையார், சோமாஸ்கந்தர்,
உமையம்மை மற்றும் ஆடல்வல்லான் சிற்பங்கள் இவற்றுள் அடங்கும் !
எப்படி வந்தன ? இதற்கு அவர்களின் இணையதளம் பதிலளிக்கிறது, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்த ஊர் தரங்கம்பாடி, இது 17 ஆம் நூற்றாண்டில் டேனிஷ் நாட்டவரின் முக்கியமான வியாபாரத் தலமாக விளங்கியது, பின்னர் அவர்கள் கட்டுப்பாட்டிற்கும் வந்தது.
இச்சிலைகள் தரங்கம்பாடி கவர்னராக இருந்த பீட்டர் அங்கேர் என்பவரால் சேகரிக்கப்பட்டவை. 1799 ஆம் ஆண்டு சில கட்டிடவேலையின் போது நிலத்தை தோண்டினர் அப்போது செப்புப்படிமங்களும் பூஜைப் பொருட்களும் கிடைத்தன.
அவற்றை வாங்கிக்கொள்ள கவர்னர் விரும்பினார், உள்ளுர் பூசகர்களும் நிலத்தில் இருந்ததால் சிலைகளுக்கு சக்தி இல்லையென்றும் மீண்டும் சக்தியூட்ட பெரியகோவிலொன்று பணித்து அதில் வைக்கவேண்டும் என்றனர். மேலும் கோவில்கட்டுமளவு வசதி இல்லமையால், வெற்றிலைபாக்கு அரிசியை வாங்கிகொண்டு சிலைகளை பீட்டருக்கு தாரைவார்த்தனர் !
அவை பீட்டர் சேகரிப்பிலிருந்து டென்மார்க் வந்து பின்னர் அவரிடமிருந்து மன்னரால் அருங்காட்சியகத்திற்கு வாங்கப்பட்டது !
கோபன்ஹேகன் – வடகடலோரம் ஸ்கேண்டிநேவியா நிலப்பகுதியின் டென்மார்க்கின் தலைநகரம், கிழக்காசிய நாடுகளுக்கு வாணிபம் செய்யவந்த மேற்குலக நாடுகளுள் ஒன்று. கோட்டைகளும், கோபுரங்களும், கால்வாய்களும் நிறைந்திருக்கும் கோபன்ஹேகன் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது டேனிஷ் தேசிய அருங்காட்சியகம், அந்த அருங்காட்சிய கத்தில் காலனி நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை என்ற பகுதியில் இந்த சிலைகளை இன்றும் நீங்கள் காணலாம் !
பெரும்பாலும் சிலைகள் காணாமல் போவது மக்களின் பேராசையினாலும், அறியாமையாலும். இனி மீதமிருக்கும் கலைச்செல்வங்களையாவது களவுபோகாமல் பாதுகாப்போம்.
-தனசேகர் பிரபாகரன்
2,769 total views, 9 views today