இலண்டன் வள்ளுவர் !
தமிழ் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை மட்டுமே வழங்கப்படுவதில்லை, எல்லைகள் தாண்டி கண்டங்கள் தாண்டி வழங்கப்பெறுகிறாள்.
ஏழ்கடலுக்கு அப்பால் கொண்டு வைப்பினும் தன்மணம் வீசும் தன்மையுடையவள் தமிழன்னை ! தமிழன்னைக்கு உலகெனும் பரந்து வாழும் தமிழர்கள் பெருமைசேர்க்கிறார்கள், அதனால் உலகில் எங்கே சென்றாலும் தமிழர்கள் பெருமைப்படும் விடயங்கள் நிறைந்திருக்கின்றன.
இலண்டன் – பிரித்தானியாவின் ராஜதானி, மேற்குலகின் முகம், தேம்ஸ் நதி தீரத்தில் அமைந்த பிரம்மாண்ட நகரம், நாள்தோறும் உலகின் பல்வேறு இடங்களில் இருந்து தமிழர்கள் உட்பட பல்வேறு மக்கள் வந்துசெல்கின்றனர். இதே இலண்டன் நகரத்தின் மையப்பகுதியில் தான் உலகத் தமிழர்கள் பெருமையுற அய்யன் வள்ளுவர் அழகாய் அமர்ந்திருக்கிறார்.
இலண்டன் மாநகர் செல்ல வாய்ப்புக்கிடைத்தது, பிரித்திஷ் அருங்காட்சியகத்தை காண எண்ணி தேடுகையில் வள்ளுவர் சிலை இலண்டன் Sபல்கலைகழகத்தின் வாயிலில் நிறுவப்பட்டிருப்பதை பற்றி படித்தேன். கட்டாயம் பார்க்கவேண்டுமென குறித்துக்கொண்டேன்.
ஏன் வள்ளுவருக்கு அத்துணை பெருமை ? காரணம் உலகப்பொதுமறை குறளை தந்த பெருந்தகை அவர். தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங் களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”
மூவடியில் திருமால் உலகை அளந்தாற்போல் ஒன்றரை அடியிலேயே உலகத்தை தம் கருத்துக்களால் அளந்தவர் அய்யன் வள்ளுவர். பரந்து விரிந்த பிரித்தானிய ராஜதானியின் முக்கிய இடத்தில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தின் வாயிலேயே மரத்தடியில் நீலமேனியுடன் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் வள்ளுவர் !
சற்றே வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளினூடே, பரபரப்பான தெருக்களில் நடந்து வந்து பல்கலைக்கழக வாசலை வந்தடைந்தேன், சற்றே நெகிழ்ந்து தான் போனேன், பிறந்து வளர்ந்த சேலத்தின் மையப்பகுதியில் பழமையான வள்ளுவர் சிலை உண்டு, குமரியில் விண்முட்ட நிற்கும் வள்ளுவனைப் பார்த்ததுண்டு ஆனால் இப்படி கடல்கடந்து பிரித்தானியாவில் அமைதியாய் ஒரு மரத்தடியில் நீலநிற மேனியராய் அமிர்ந்திருப்பதைக் கண்டு மெய்சிலிர்ப்புதான்.
அய்யன் வள்ளுவரும் தமிழர்க்கு வானுறையும் தெய்வம் போலவே ! குளிரிலும் சற்றே காலணியை கழற்றிவிட்டு அருகே சென்று கையைகூப்பினேன், அருகில் இருந்த வெள்ளைகாரப் பெண்மணியிடம் புகைப்படம் எடுத்து தரமுடியுமா என்று கேட்க, புன்னகையுடன் வள்ளுவரோடு எம்மை ஒரு புகைப்படமும் எடுத்து தந்தார் !
அவர் என்னிடம் கேட்டது ஏன் காலணியை கழற்றினேன் என்று, வைய்யதுள் வாழ்வாங்கு வாழ்வோரை தெய்வம்போல மதித்து மரியாதை செய்வது தமிழர் மரபென்று சற்றே ஆங்கிலத்தில் சொன்னேன் !
மிகவும் மகிழ்ந்து வாழ்த்துக்கள் சொல்லிச்சென்றார் அந்த பெண்மணி !
இலக்கிய கருவூலமாகத் திகழும் திருக்குறள் உணர்த்தும் உண்மைத் தத்துவத்தில் ஐயம் கொள்ள இடமே இல்லை. தினசரி வாழ்க்கையில் மனிதன் பின்பற்ற வேண்டிய ஒவ்லவாரு தகவல்களையும் துள்ளியமாகத் தருகின்ற வாழ்வியல் களஞ்சியம் திருக்குறள். கிரேக்க மக்களுக்குக் ஹோமர் இலியட் போன்றது தமிழருக்கு இத்திருக்குறள்.
குறள் உலகப்பொதுமறை என்று அனுபவத்தில் உணர்ந்தநாள் அன்று !
பாரதி ஏன் வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் தந்த தமிழ்நாடு என்று சொன்னான் என்று கண்கூடாய் உணர்ந்த நாளும் அன்றே !
— Dhanasekar Prabhakaran
1,673 total views, 6 views today