‘நிறைவேற்று அதிகாரம்’ ஒழிப்பு: தோல்வியில் ரணிலின் முயற்சி

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த இறுதிநேர முயற்சி தோல்வியில் முடிவடைந்திருக்கின்றது. கடந்த வியாழக்கிழமை அவசரமாக – விஷேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றைக் கூட்டி, அமைச்சரவைத் தீர்மானம் ஒன்றை எடுத்து அதன் மூலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றி அமைப்பது அவரது நோக்கமாக இருந்தது. இருந்தபோதிலும் சஜித் பிரேமதாச தரப்பினர் கொடுத்த கடுமையான அழுத்தத்தின் காரணமாக அவரது முயற்சி ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பு புதன்கிழமை இரவு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப் பட்டது. ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் எனவும் அதற்கான நியமனப் பத்திரங்கள் அக்டோபர் ஏழாம் தேதி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான
உடனடியாகவே அமைச்சரவையை கூட்டுவதற்கான விசேட நடவடிக்கை பிரதமர் மேற்கொண்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக் கையைத் தொடர்ந்தே வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. இதற்கான அறிவித்தல் வியாழக்கிழமை காலையிலேயே அமைச்சர்களுக்கு அவசரமாக அனுப்பப் பட்டது. விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறப்போ கின்றது என்றதும் உடனடியாகவே உஷார் அடைந்த சஜித் பிரேமதாஸ தரப்பினர் அந்த முயற்சியை முறியடிப்பதற் கான செயலில் இறங்கினார்கள்.

விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அலரி மாளிகையில் பிரதமர் ரணிலை சந்தித்தார். அதன்போது குறிப்பிட்ட பிரேரணையை எதிர்க்க போவதாக சஜித்துக்கு ஆதரவாக செயற்படும் அமைச்சர்கள் உறுதியாகத் தெரிவித்திருந்தார்கள். இதனையடுத்து
அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது சஜித் ஆதரவாளர்கள் ரணிலின் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பது என்பது இலகுவாக செய்து கொள்ளக் கூடிய ஒன்றல்ல. அது பல தடைகளைத் தாண்ட வேண்டும். முதலில் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். இரண்டாவது தடை பாராளு மன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட வேண்டும்.
இதற்கு உள்ள மூன்றாவது தடவை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் இதற்கான அங்கீகாரத்தை மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த மூன்று தடையையும் தாண்டி சென்றால் மட்டுமே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க முடியும். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால்
முதலாவது தடையையே தாண்ட முடியாமல் போய்விட்டது.
அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டால், அடுத்த வாரம் அது பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். அதனையடுத்து ஆறு வாரங்களுக்குள் சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். இந்த மூன்றும் நடைபெற்றால், நவம்பர் 16 இல் ஜனாதிபதித் தேர்தல்
நடைபெறாது. இதன் மூலம் நிறைவேற்று அதிகார பிரதமராக தான் இருந்து 2021 ஆகஸ்ட்டில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதுதான் ரணிலின் திட்டம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லா தொழிக்க வேண்டுமென அவசரமாக பிரதமர் ரணில் முற்பட்டதற்கு தனிப்பட்ட காரணங்கள் உள்ளன. ஜனாதி பதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாரை நிறுத்துவது என்பதில் கடந்த இரண்டு மாத காலமாகவே சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
ரனில் போட்டியிட்டால் சிங்கள மக்களின் வாக்குகளை அவரால் முழுமையாக பெற்றுக் கொள்ள முடியாது என்ற ஒரு கருத்து ஐக்கிய தேசியக் கட்சியிடம் அதன் பங்காளி கட்சிகளிடமும் காணப்படுகிறது.
அதனால் பொது ஜன பெரமுனவின் சார்பில் களம் இறக்கப்படும் கோத்தபாய ராஜபக்ஷவை எதிரில் உள்ள கூடிய வல்லமை சஜித் பிரேமதாச மட்டுமே உள்ளதாக ஐதேகவினர் பலர் கருதுகின்றார்கள். இந்த நிலைமையில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளர் தான்தான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.
அவரது ஆதரவாளர்கள் இந்த அழுத்தங் ளுக்கு ஈடு கொடுக்க முடியாத நிலைமையில் தான் ஜனாதிபதி இந்த விடயத்தில் ரணிலுக்கு சாதகமான சில விடங்களும் இருந்தன. பாதகமான விடயங்களும் இருந்தன. சாதகமான விடயங்கள் என்றால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த முயற்சிக்கு மறைமுகமான ஒரு ஆதரவை கொடுக்கக் கூடியவராக இருந்தார். காரணம் ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட முடியாது.

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடவைகள் பதவி வைத்திருந்தால் மூன்றாவது தடவை அந்த பதவிக்கு போட்டியிட முடியாது. அதனால் ஜனாதிபதியாக மீண்டும் வருவதற்கான வாய்ப்பு மஹிந்த ராஜபக்சவுக்கு இல்லை. அதனால் தான் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் அவர் களம் இறங்கினார். ஜனாதிபதி ஆட்சி முறை இல்லாத ஒழிக்கப்பட்டால் பிரதமர் தான் அதிகாரம் மிக்கவராக இருப்பார். அந்த பதவியை தன்னிடம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை மகிந்த ராஜபக்சவிடம் இருந்தது. அதனைவிட மைத்திரிபால சிறிசேனவும் மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக வர முடியாது என்ற நிலைமையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான ஆதரவை வழங்க தயாராக இருந்தார்.

கடந்த நான்கு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இல்லாது ஒழிப்பதாக கூறியே மக்களின் வாக்குகளை கேட்டிருந்தார்கள். இருந்தபோதிலும் பின்னர் அவர்கள் அதனைச் செய்யவில்லை. புதிய அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சியில் கூடநிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி என்பது முக்கிய இடத்தைப் பெறவில்லை. இந்த நிலைமையில்தான் ஜேவிபி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருந்தது. அதாவது அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பது ஜேவிபி முன்வைத்த யோசனையாக இருந்தது. இதனை அப்போது கவனத்தில் எடுக்காமல் இருந்த பிரதான அரசியல் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் உருவாகிய நெருக்கடியை தொடர்ந்தே இதனை கையில் எடுத்தன. குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க – அந்த முயற்சியில் தன்னுடைய நிலைமையை பலவீனமடைந்து செல்வது என்பதை உறுதியாக தெரிந்துகொண்ட நிலைமையிலேயே இறுதி கட்ட முயற்சியாக இதனை முன்னெடுத்தார்.

புதன்கிழமை 18.09.2019 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் செயலகம் அறிவிக்கின்றது. இந்த அறிவிப்பு அன்று இரவுதான் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனடியாகவே உஷார் அடைந்த ரணில் தரப்பு முன்னெடுத்த முயற்சிதான் விசேட அமைச்சரவைக் கூட்டம். இந்தக் கூட்டத்தில் கடுமையான எதிர்ப்புகள் உருவாகும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். குறிப்பாக சஜித்துக்கு ஆதரவாக உள்ள அமைச்சர்களும் பங்காளிக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி என்பனவும் இதனை கடுமையாக எதிர்த்தனர். அமைச்சரவையில் இதனை நிறைவேற்ற முடியாத நிலைமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது.

நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்யும் எந்த ஒரு முயற்சியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே செய்யப்படவேண்டும் என சஜித் பிரேமதாச இந்த அமைச்சரவை கூட்டத்தில் சுட்டிக்காட்டினார். அமைச்சர்களான சம்பிக்க, ஹக்கீம், ஹரீன் பெர்னாண்டோ உட்பட பல அமைச்சர்கள் இதே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். இவ்வளவு காலமும் இதனைச் செய்யாமல் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர் இவ்வாறு செய்வது மக்கள் மத்தியிலும் அதிர்ப்தி யை உண்டுபண்ணும் என அமைச்சர்கள் சுட்டிக்காட்டினார்கள். அமைச்சர் களான மங்கள சமரவீர இந்த விடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவுடன் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது என்ற நிலைப்பாட்டையே அவர்கள் எடுத்திருந்தார்கள். அதனால் ஜனாதிபதி ஆட்சிமுறையை இல்லாதொழிப்பதற்கான மறைமுக ஆதரவையும் அவர்கள் வழங்கினார்கள். குறிப்பாக இதற்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை கூட்டமைப்பின் பேச்சாளரான சட்டத்தரணி சுமந்திரன் வழங்கியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் ஒரு பாலமாகவும் அவரே செய்யப்பட்டிருந்தார். கூட்டமைப்பு தலைமை பொருத்தவரையில் சஜித் பிரேமதாச அல்லது கோதாபய ராஜபக்ஷவை தீர்வைத் தரக் கூடியவர்கள் அல்ல. அதனால் தான் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பது என்ற முடிவை கூட்டமைப்பின் தலைமை மறைமுகமாக எடுத்திருந்தது குறிப்பாக சம்பந்தனும் சுமந்திரனும் இந்த முடிவில் உறுதியாக இருந்தார்கள் இருந்தபோதிலும் அமைச்சரவையின் ஆதரவை பெற்றுக் கொள்ள முடியாததால் அந்த முயற்சி தோற்றுப் போய்விட்டது.

-கொழும்பிலிருந்து பாரதி

1,601 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *