முதுமையில் நொய்மை


‘பொறு பொறு. நான் எழும்பிறன். நீ பிடியாதை. என்னை சும்மா விடு’ என்னுடனான மருத்துவ ஆலோசனையை முடித்துக் கொண்டு வெளியே செல்வதற்காக கதிரையில் இருந்து எழ முற்பட்ட போது அவரது பேரன் உதவ முன் வந்தார்.

அப்போதுதான் அவர் அவ்வாறு சொன்னார்.
அவரது வயது 85 தான். இந்த வயதிலும் அவரால் மற்றவர் உதவியின்றி கதிரையிலிருந்து எழுந்திருக்கவும் நடக்கவும் முடிகிறது. மாறாக அதே நாளில் என்னிடம் வந்திருந்த மற்றொரு பெண்மணியை அவளது மகன் கைபிடித்து அணைத்து நடத்திக் கொண்டு வந்திருந்தார். உட்காருவதற்கும் எழுந்திருப்பதற்கும் அவளால் முடியவில்லை. முழுக்க முழுக்க மகனிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. இத்தனைக்கும் அவளது வயது 62 மட்டுமே.

முதுமையில் இயலாமை ஏற்படுவது நாம் எதிர்பார்க்க வேண்டிய ஒன்றுதான். அதே நேரம் முதுமை என்பதை வருடங்களால் மட்டும் கணிக்க முடியாது. அதனால்தான் 85 வயதில் அவரால் சுயமாக இயங்கவும், 62 வயதில் அவள் மற்றவர்களில் தங்கியிருக்கவும் நேர்கிறது. இருந்த போதும் இதில் ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது.
85 வயதில் பெண் திடகாத்திரமாகவும் 62 வயதில் ஆண் சோர்ந்து கிடக்கவும் நேரலாம். அதே நேரம் வயது காரணமில்லை என்பதையும் முற்கூறிய உதாரணத்திலிருந்து புரிந்து கொள்ள முடியும் வயது என்பது வாழ்கின்ற காலத்தை வருடங்களில் கணிக்கிற ஒரு முறை மட்டுமே. ஆனால் முதுமையும் நொய்மையும் வயதினால் மட்டும் ஏற்படுகின்றவை அல்ல. முதுமையில் ஏற்படும் அத்தகைய தளர்ச்சியை, ஒரு நோய்க் குறியாக இப்பொழுது மருத்துவத்தில் அடையாளம் காண்கிறார்கள். முதுமையில் ஏற்படும் இத்தளர்ச்சியை பலவீனம், இயலாமை, நொய்மை என பல்வேறு பதங்களால் அழைக்க முடியும் ஆங்கிலத்தில் Frality என்கிறார்கள்.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் நொய்மை அடைந்துள்ளார் என்பதைஎவராலும் சொல்ல முடியும். ஒருவர் எவ்வாறு நடந்து வருகிறார். திடமாக நடக்கிறாரா. மெதுவாக அடியெடுத்து வருகிறாரா, தள்ளாட்டம் இருக்கறதா. மிக மெதுவாகநடக்கிறாரா, கதிரையில் எவ்வாறு இருக்கிறார், இருக்கவும் எழுந்திருக்கவும்சிரமம்படுகிறாரா. பேச்சு எவ்வாறு இருக்கிறது போன்ற பலவற்றை வைத்து எம்மைஅறியாமலே ஒருவரது நிலமையை கணித்துக் கொள்கிறோம்.

ஆயினும் மருத்துவத்தில் அவ்வாறு எழுந்தமாட்டில் சொல்ல முடியாது. சில சுட்டிகளைவைத்தே கணித்தறிந்து தெளிவாகச் சொல்ல முடியும்.
கைகளால் ஒன்றைப் பற்றும் போது உள்ள உறுதித்தன்மை தளர்தல், எல்லா விதச்செயற்பாடுகளிலும் ஆற்றல் குறைதல், நடையின் வேகம் குறைந்து போதல், உடற்செயற்பாடுகள் குறைந்து போதல், காரணமின்றி எடை குறைதல் ஆகியவற்றைநொய்மைக்கான சுட்டிகளாகக் குறிப்பிடலாம். நொய்மையால் பாதிக்கபட்டவர்களது கைகால் அசைவியக்கம் விரைவானதாக இருக்காது. மிக மெதுவாகவே கை கால்களைஅசைக்கவும் செயற்படுத்தவும் முடியும். அனிச்சையான செயற்பாடுகள் மிகவும் மந்தகதியிலேயே இயங்கும்.உதாரணமாக ஒரு சிறு கல் தடக்கினால் கூட அவரால் தன்னைச் சமநிலைப்படுத்தமுடியாது போகலாம். ஏதிர்பாராமல் விழுந்து தலையையோ இடுப்பு எலும்பையோஉடைத்து விடக் கூடும். முழங்கால் வலி அல்லது கணுக்கால் வலி போன்ற மூட்டுநோய்கள் இல்லாமலே இந்த நிலை ஏற்படுகிறது. இவ்வாறு உடல் உறுதி குறைவதுமட்டுமின்றி அவர்களால் துன்பத்தை பொறுக்க முடியாத மனநிலையும் ஏற்படுகிறது.

இவை காரணமாக அவர்களால் தன்னிச்சையாக இயங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டிய நிலை விரைவில் ஏற்படுகிறது. இதன்காரணமாக குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சுமையாக மாறிவிடுகிறார்கள். மிகவும்கவலைக்குரிய விடயம் என்னவெனில் அவர்களது ஆயுட் காலத்தையும் நொய்மைகுறைவடையச் செய்வதாகும்.

மரபியல் காரணங்கள், உடல் உழைப்பற்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை நடைமுறைகள்,நீரிழிவு மூட்டுவாதம் போன்ற வேறு நோய்களின் தாக்கம் இருப்பது, சூழல் போன்றவைஇவ்வாறு தளர்ச்சி அடைவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எங்கள் உடலில் நோய்களுக்கு எதிராகப் போராடும்அமைப்பு (Immune system) இருக்கிறது. எந்நேரமும்செயற்பட்டுக் கொண்டே இருந்து எமது உடலில்கிருமிகள் தொற்றுவதைத் தடுக்க முயல்கிறது.
அவ்வாறு செயற்படும் போது இருதயம், தசைகள்,எலும்பு போன்ற பல்வேறு உடற்தொகுதிகளிலும்அழற்சியும் வீக்கமும் ஏற்பட்டு அவை நாளடைவில் நொய்ம்மையாக மாறக் கூடும்.மற்றொரு காரணம் வயசாகும் போது எமது தசைத்தொகுதியானது நலிவடைவதாகும். 18 வயதில் இருந்ததுபோல வயசாகும் போது தோள் மூட்டு,புஜங்கள், தொடை போன்றவற்றில் உள்ள தசைகள் உறுதியாக இருப்பதில்லை. நலிவடைந்து அளவில்குறைந்து தொய்ந்து விடுகின்றன. இதனால்தான் பலமுதியவர்கள் மிகவும் மெலிவடைந்த தோற்றத்தைக்கொண்டு இருக்கிறார்கள். தசைகளின் அளவுகுறைவடைவதால் அங்கங்களின் செயற்பாடுகள்தளர்ந்துவிடுகின்றன.

மற்றொரு முக்கிய காரணம் முதுமையடையும்போதுபாலியல் ஹோர்மோன்களின் அளவு உடலில் குறைந்துபோவதாகும். பெண்களில் ஈஸ்ரோஜனின் அளவும் ஆண்களில் டெஸ்டஸ்டரோனின் அளவும் வயதாகும்போகும் போது திடீரெனக் குறைகின்றன. இதுவும்உடல் நலிவடைவதற்கு மற்றொரு காரணமாகும்.
நொய்மைக்கு மருத்துவ ரீதியாக செய்யக் கூடியவைஎவை.?

நொய்மை ஏற்படுவதை ஆரம்ப நிலையிலேயேகண்டறிந்தால் அதற்கான அடிப்படைக் காரணங்களைஅறிந்து அது மோசமடையாமல் தடுக்கலாம். உதாரணமாக தசைத் தொகுதியானது நலிவடையத் தொடங்கியிருந்தால் அதைத் தடுப்பதற்கான சுலபமான சிலபயிற்சிகளை செய்வது நன்மை பயக்கும். தசைகளைநீட்டி மடக்கும் சிறிய சிறிய பயிற்சிகளைச் செய்வதன்மூலம் தசைகளை வலுப்படுத்தலாம்.

எலும்புகள் பலவீனம் அடைந்திருந்தால் அவற்றைத்தடுப்பதற்கான விற்றமின் டி, கல்சியம் போன்றமருந்துகள் உதவக் கூடும். அத்துடன் மேற்கூறியவாறுபயிற்சிகள் செய்வதும் அவசியமாகும். ரூமட்ரொயிட்ஆத்திரைடிஸ் போன்ற மூட்டு வாத நோய்கள் இருந்தால் அவற்றிக்கான சிகிச்சைகளை சரியானமுறையில் தொடர வேண்டும்.

இவற்றைத் தவிர நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம்,கொலஸ்டரோல், இரத்த சோகை, இருதய நோய்கள்,சுவாச நோய்கள் போன்றவையும் நொய்மைக்குகாரணமாகலாம். சில சாதாரண பரிசோதனைகள் மூலம்அவற்றைக் கண்டறிய முடியும். அவற்றிற்கானசிகிச்சைகளை உரிய மருத்துவரின் கண்காணிப்பின் கீழ்ஒழுங்காக செய்ய வேண்டும். இருந்த போதும் பலநோயாளிகளை அவர்கள் தீவிரமான நொய்மைநிலைக்கு சென்ற பின்னரே காண முடிகிறது. அந்தநிலைக்கு சென்றவர்களுக்கு சடுதியான ஆபத்துகள்ஏற்படாமல் காப்பதே முக்கியமானது. முக்கியமாகஅவர்கள் விழுந்து விடுவதைத் தடுக்க வேண்டும்.

முடியாமல் கிடக்கிற இவர் பேசாமல் கிடவாமல் அங்கினை இங்கினை தட்டுத் தடுமாறி நடந்து திரிஞ்சுவிழுகிறார். சும்மா கிடவுங்கோ என்றால் கேக்கிறாரே என்பதுதான் பல பிள்ளைகளின் குற்றச் சாட்டாக,ருக்கிறது.

பேசாமல் கிடந்தால் நொய்மை இன்னும் தீவிரமடையவே செய்யும். செயற்பட்டுக் கொண்டே இருப்பதுதான் உடலை நலிவடையாமல் காப்பாற்றும். நடமாடுவதும் மற்றவர்களுடன் ஊடாடுவதும் அவர்களதுமன மற்றும் உடல் நிலைகள் மேலும் மோசமடையமல் தடுத்து உற்சாகமாக இயங்க வைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

எனவே அவர்கள் விழாமல் நடப்பதற்கு உதவியான உபகரணங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். கைத் தடிகள், வோக்கேர்ஸ்போன்றவை நிறையவே உதவும்.
இவை எல்லாவற்றையும் விட வருமுன் காப்பதே சிறப்பானதாகும். நொட்டு நொறுக்கு உணவுகளைத் தவிர்த்து போசாக்கான உணவுகளை உண்பதும், நாளாந்தம் உடற் பயிற்சிகளில் ஈடுபடுவதும் பெரும்பாலான நோய்களிலிருந்து எம்மைக் காப்பதுடன் முதுமையில் நொய்மைக்கு ஆட்படாமல் ஆரோக்கியமாக இயங்கவும் வழி செய்யும் என்பதை நாம்மறந்துவிடக் கூடாது.

— டாக்டர்.கே.முருகானந்தன்.

1,428 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *