சொல்வது போதாது செயலே வேண்டும்

வார்த்தைக்குள் அரிதாரம் பூசி, அலங்காரம் போட்டு அற்புதமாக யாரும் பேசலாம். ஆசைகளை, எண்ணங்களை அடுக்கி வைத்து நடைமுறைப்படுத்த முயற்சியின்றி மழுங்கிப் போகலாம். பிறர் முயற்சியைப் பார்த்து கொட்டாவி விடலாம். சொல்வதற்கு பலரால் முடியும். அதை செய்து காட்டுவதற்கு ஒரு சிலராலேயே முடிகின்றது. சொல்வது போல் நடத்திக் காட்டுதலே செயலாகப்படுகின்றது. சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகும் பட்சத்தில் சமுகத்திடையே தவறாக அடையாளப்படுத்தப்படுவர். நாம் வாழும் உலகத்திற்கு சொல் வேண்டாம் செயலே வேண்டும்.
சொன்னதைச் செய்து காட்டிய துரியோதனன், கர்ணன் மனதில் மலையாய் உயர்ந்தான். நீ என் நண்பன் என்று கூறிய ஒரு வார்த்தைக்கு துரியோதனன் கொடுத்த மரியாதை அளவிட முடியாதது. வில்வித்தை வீரன் அர்ச்சுனனுடன் நேருக்கு நேர் நின்று போரிடக் கூடிய தகுதி பெற்ற ஒரே வீரன் கர்ணன். சபையிலே அரசகுமாரர்கள் அரசகுமாரர்களுடனேயே போரிடுவார்கள், உன் குலம் என்ன? என்று துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் ஆகியோர் கூறிய வார்த்தைகள் கேட்டு உடைந்து போய் நின்றான் கர்ணன். நண்பன் கலங்கி நிற்கும் சமயத்தில் கைகொடுப்பவனே உண்மை நண்பன். சூரர்களுக்கும் நதிகளுக்கும் மூலம் பார்ப்பதில்லை. அசுரர்களைக் கொல்லுகின்ற அஸ்திரம் ஒரு பிராமணனுடைய எலும்பில் இருந்து வந்தது. அக்னி ஜலத்திலிருந்து வந்தது. எனவே எது எங்கிருந்து வந்தது என்பது முக்கியமல்ல. அதனுடைய வீரியமே முக்கியம். அதனால், கர்ணனுடய வீரத்தைப் பற்றி பேசுங்கள். அவருடைய மூலத்தைப் பற்றிப் பேச யாருக்கும் உரிமையில்லை என்று கூறி, அச்சந்தர்ப்பத்திலேயே கர்ணனுக்கு அங்கத நாட்டைப் பரிசளித்து, இப்போது அங்கத நாட்டுக்கு அரசன் கர்ணன். எனவே இப்போது அரசகுமாரனுடன் போரிடும் தகுதி இவனுக்கு இருக்கிறது என்று கர்ணனை உச்சத்துக்கு உயர்த்தினான். நண்பன் என்று கூறிய வாய்ச் சொல் மட்டுமன்றி அதனை நடத்தியும் காட்டிய செயல் வீரன் துரியோதனன் ஆவான்.
இது போன்று அந்தப்புரத்திலே துரியோதனன் மனைவி பானுமதியுடன் கர்ணன் சதுரங்கம்; விளையாடிக் கொண்டிருந்த வேளையில் துரியோதனன் வரவு கண்டு பானுமதி திடீரென்று எழுந்தாள். விளையாட்டில் தோற்று விடுவாள் என்று கருதி எழுகின்றாள் என்று நினைத்த கர்ணன் அவளுடைய ஆடையைப் பிடித்து இழுத்தான். கை தவறி பானுமதி இடையிலே இருந்த மேகலையில் கை பட்டு அதில் ஒட்டியிருந்த முத்துக்கள் சிதறின. அச்சம்பவத்தைக் கண்ட துரியோதனன் எவ்வித சந்தேகமும் கொள்ளாது. சிதறிய முத்துக்களை எடுக்கவோ கோர்க்கவோ என்று கேட்கின்றான்.
~~மடந்தை பொன் திருமேகலை மணிஉகவே மாசு அறத் திகழும் ஏகாந்த இடந்தனில்; புரிந்தே நானயர்ந்து இருப்ப எடுக்கவோ கோர்க்கவோ||
என்றான் என வில்லிபுத்தூராழ்வார் பாடினார். நண்பன் என்று சொல்லுக்கு களங்கம் ஏற்பட கர்ணன் நடந்ததுமில்லை. நண்பன் என்று சொன்ன வார்த்தைகளை மந்திரமாக கொண்டு அது போலவே வாழ்ந்து காட்டியவன் துரியோதனன்.
தன்னுடைய தாய் குந்தி தேவிக்கு கொடுத்த சொல்லைக் காப்பாற்றிய கர்ணன் ஒரு தடவைக்கு மேல் நாகாஸ்திரத்தை செலுத்தாது, தன்னுடைய வாய்ச்சொல்லே பெரிதென மதித்து உயிர் நீத்தான்.
சொல் என்பது மந்திரம். சொல்லும் செயலும் ஒன்றானால் இவ்வுலகம் சொல்லும் உங்கள் செயல்கள்;. அந்தச் சொல்லில் உண்மை கலந்து வாழ்ந்தவனே அரிச்சந்திரன்.

நீ எனக்கு அரசைத் தரவில்லை என்று ஒரே ஒரு பொய் சொல் என்று கேட்டான் கௌசிகன். அதற்கு அரிச்சந்திரனும்,
~~பதிஇ ழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த
நிதிஇ ழந்தனம் இனிநமக் குளதென நினைக்கும்
கதிஇ ழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றார்
மதிஇ ழந்துதன் வாயிழந்(து) அருந்தவன் மறைந்தான்

~~எம்முடைய அரசை இழந்து விட்டோம். சொத்து சுகங்களை இழந்து விட்டோம். மகனை இழந்து விட்டோம். இனி எங்களுக்கு ஒன்றே ஒன்று தான் இருக்கிறது என்று நினைக்கும் சொர்க்கத்தை இழந்தாலும் சொன்ன சொல்லை இழக்க மாட்டோம் என்று சொல்ல அதுகேட்ட முனிவர் கௌசிகனும் சொல்ல வார்த்தைகள் இழந்து மறைந்தார். என்று அரிச்சந்திர புராணம் கூறுகிறது. அரிச்சந்திரன் உண்மையைத் தவிர பொய் சொல்ல மாட்டேன் என்ற சொல்லுக்கு ஏற்ப செயற்படுத்திக் காட்டினான்.
என்று வாய்ச்சொல்லில் வீரம் வைத்து நேர்மைத் திறமில்லா நடிப்புச்சுதேசிகள் பற்றி பாரதி,

~~நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறமு மின்றி
வஞ்சனை சொல்வா ரடீ – கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி||

என்றார்.

எனவே புராணங்களும், இதிகாசங்களும், இலக்கியங்களும் போதித்த சொல்லின் வாய்மை, செயலிலும் இருக்க வேண்டும். நினைத்ததை சொல்வது மாத்திரமில்லாது நடத்தியும் காட்டுவதே வாயிலிருந்து புறப்பட்டு வரும் வார்த்தைகளுக்கு மதிப்பாகப்படுகின்றது.

— கௌசி

2,064 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *