பூசை – சிறுகதை

பாடசாலைக்கு முன்னால் நின்று பார்க்கும்போது கந்தசுவாமி கோவிலின் முன்புற தரிசனம் தோன்றும். பாடசாலைக்கும் கோவிலுக்கும் இடையே 50 மீட்டர்கள் தூரம் இருக்கும். நேரிய பாதை. கோபுரத்தின் ஒரு பகுதியையும், எட்டுக்கால் மண்டபத்தின் ஒரு கரையையும் பாடசாலைக்கு முன்னால் நின்றபடியே பார்க்கக்கூடியதாக இருக்கும். தினமும் அந்த தரிசனத்துடன் தான் எல்லா மாணவர்களும் பள்ளிக்குச் செல்வார்கள்.

கோபாலன் கோவிலுக்கு ஒரு கும்புடு போட்டுவிட்டு பாடசாலைக்குள் செல்கின்றான். நான்காம் வகுப்புப் படிக்கின்றான். நெற்றியிலே திருநீற்றுக் கீற்று, மத்தியிலே சந்தணப்போட்டு. பாடசாலைக்கென்று சீருடை எதுவும் இல்லை. மேலே கோடு போட்ட சட்டையும், அரைக்களிசானுமாக அவனின் கோலம். காலில் செருப்பு இல்லை.

பாடசாலை நேரங்களில் கோவில் மணி, பாடசாலை மணியின் ஓசையிலிருந்து வேறுபட்டுக் கிணுகிணுக்கும். விழாக்காலங்களில் பூசை நேரங்களில் ஏற்படும் ஆரவாரம், சங்கொலி, மணி ஓசை காதுக்கு இதமானவை.

“அடேய் கோபாலா… கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதிய வேளையில் பூசை முடிய அன்னதானம் கொடுக்கின்றார்கள்” நாகநாதன் அவன் காதிற்குள் முணுமுணுத்தான்.

“அதற்கென்ன? நான்தானே தினமும் சாப்பாடு கொண்டு வருகின்றேனே!” என்றான் கோபாலன்.

“கோபாலா… நீ கொண்டுவருவது சாப்பாடு. இது அன்னதானம். கோயில் அன்னதானம். படு சுப்பராக இருக்கும். நாங்கள் இரண்டு வெள்ளிக்கிழமைகள் சாப்பிட்டுவிட்டோம். இன்றும் போகின்றோம். விரும்பினால் வா” நாகநாதனுடன் ஒட்டியபடி நின்ற சூரியகுமார் புளுகித் தள்ளினான்.

மதியம் வரும்வரை கோபாலன் மனதில் ஒரு போராட்டம் நடந்தது. படிப்பில் கவனம் செலுத்தவில்லை. இடையிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் சூரியகுமாரும் நாகநாதனும் கைகளால் ஜாடை செய்து நாவை ஊறச் செய்தார்கள்..

வீட்டுச் சாப்பாட்டை எவ்வளவு நாட்கள் தான் சாப்பிடுவது?

மதியம் நாற்பத்தைந்து நிமிடங்கள் சாப்பாட்டிற்காக விடுவார்கள். பாடசாலைக்கு அருகே இருப்பவர்கள் வீட்டிற்குச் சென்று உணவருந்தி இளைப்பாறி வருவார்கள். கோபாலன் தன் நண்பர்கள் புடைசூழ கோவிலுக்குச் சென்றான். பாடசாலையில் அவன் ஒரு குட்டி இளவரசன். படிப்பில் முதன் மாணவன். எல்லாருக்கும் முன்னோடி. கோபுரதரிசனம் முடித்து கோயிலிற்குள் நுழைந்தான் கோபாலன். கோவிலில் மதியப்பூசை நடந்துகொண்டிருந்தது. மெய்மறந்து புலன்களை ஒருங்கு சேர்த்தான். பூசை முடிந்து பிரசாதம் வழங்கியதும், அடியார்கள் கிழக்குப்புற அறைக்கு முன்பதாக வரிசை கட்டி, பின்னர் சம்மாணமிட்டு அமர்ந்தார்கள். கோபாலன் உட்பட ஐவர், ஏற்கனவே உட்கார்ந்தவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்தார்கள். வாழை இலைகள் பரிமாறப்பட்டன. வாழை இலையில் ஆவி பறக்கும் சுடுசோற்றை ஒருவர் பரிமாற, பின்னாலே இருவர் கறிகளைப் பரிமாறினார்கள். மரவள்ளிக்கிழங்கு, கீரை, தக்காளிக்குழம்பு, பருப்பு, பப்படம், மிளகாய்ப்பொரியல், தயிர் என பலவகைக்கறிகள். உருக்கிய நெய் எடுத்து ஒருவர் பருப்பினுள் விட்டுச் சென்றார். வாசம் மூக்கை ஒரு தூக்குத் தூக்கியது. மணக்க மணக்க சாப்பாடு சுவையாக இருந்தது. சாப்பிட்டு முடிய வாழை இலையைப் பார்த்தான் கோபாலன். சுடுசோற்றின் அடையாயளம் மெல்லியமண்ணிறமாக இலையில் வட்டமிட்டிருந்தது. கையை எவ்வளவுதான் கழுவிய போதும் நெய்யின் வாசனையை மறைக்க முடியவில்லை.

பள்ளி போய்ச் சேரும்போது ஐந்து நிமிடங்கள் பிந்திவிட்டன. செல்லம்மா ரீச்சரின் வகுப்பு ஆரம்பித்துவிட்டது. ஊரில் கோபாலனின் வீட்டிற்கு பத்துவீடுகள் தள்ளி செல்லம்மா ரீச்சர் இருக்கின்றார். அவர் இவர்கள் ஐவரையும் வரிசையில் நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

“நாங்கள் கோவிலுக்குப் போய் வருகின்றோம்” நாகநாதன் விறைப்பாகச் சொன்னான்.

“பூசை பாத்தீர்களா?”

“ஓம் ரீச்சர்” கோரஷாக எல்லாரும் சொன்னார்கள்.

நாகநாதனிற்குக் கிட்டப் போனவர், ”எங்கே உன் நெற்றியில் திருநீறு சந்தனத்தைக் காணவில்லையே” சொல்லியபடியே அவன் காதை முறுக்கினார். பின்னர் எல்லோரையும் ஒரு முறைப்புப் பார்வை பார்த்துவிட்டு அவர்களின் கைகளைத் தூக்கி முகர்ந்து பார்த்தார்.

“உம்… போய் இருங்கோ”

“கோவில் விஷயமாச்சு. ரீச்சர் பயந்திட்டா. இல்லாவிட்டால் எல்லாருக்கும் பூசை விழுந்திருக்கும்” சூரியகுமார் கோபாலனின் காதிற்குள் முணுமுணுத்தான்.

பாடசாலை முடிந்து, மாணவர்களுடன் அங்கும் இங்கும் விளையாடி கோபாலன் வீடு போய்ச் சேர்ந்தான். இடையில் செல்லம்மா ரீச்சரை எதிர்கொண்டான். பவ்வியமாக தலையைக் கவிழ்த்து மரியாதை செலுத்தியபடி அவரைக் கடந்து போனான்.

“இன்று ரீச்சர் ஏன் இந்த வழியால் வருகின்றார்? அவரின் வீட்டிற்குப் போகும் பாதை இதுவல்லவே!” மனதிற்குள் கேள்வி எழுந்தது.

வாசலில் அம்மா காத்து நின்றார்.

“கோயிலில் போய் சாப்பிட்டாயா?”

ஆம், இல்லை என்று கோபாலன் பதில் சொல்லும் முன்னர், பின்னாலே மறைந்திருந்த அப்பா துவரம் கம்பினால் விளாசத் தொடங்கினார்.

“இனிமேல் போவியா? இனிமேல் போவியா?” கேட்டுக் கேட்டுத் துரத்தியபடி கோபாலனின் காலுக்குக் கீழ் பூசை விழுந்தது. வீட்டைச் சுற்றிச் சுற்றி ஓடினான் கோபாலன். மூன்றாவது ரவுண்டில் அப்பாவை ஏமாற்றிவிட்டு அருகே இருந்த பனை வடலிக்குள் ஓடி ஒளிந்து கொண்டான் கோபாலன்.

“ஏன் கோவிலுக்குப் போய் சாப்பிடக் கூடாதா?” கோபாலனின் மனதினுள் ஆயிரம் கேள்விகள்.

“ரீச்சர் பயந்திட்டா. இல்லாவிட்டால் எல்லாருக்கும் பூசை விழுந்திருக்கும்” என்றானே சூரியகுமார்.

அப்பா அம்மாவை ஏன் சாமிக்குப் பயப்பிடவில்லை வடலிக்குள் இருந்தபடி யோசித்தான் கோபாலன். காலில் வலி எடுத்தபோது குனிந்து பார்த்தான். சுடுசோற்றின் அடையாளம் வாழைஇலையில் வட்டமிட்டிருந்தது போல, அப்பாவின் பூசை அடையாளங்கள் அவனது காலில் கோலமிட்டிருந்தன.

“பெரியவர்களுக்கு ஏன் சில விடயங்கள் புரிவதில்லை” அவன் மனதில் பூதாகாரமாக ஒரு கேள்வி எழுந்தது.

  • சுருதி

2,154 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *