இளையவர்கள் விரும்புவது வீட்டு உணவா? கடை உணவா?
மகன் மகள் விடுமுறையில் வருகிறார்கள் என்றால் போதும் அம்மாவிற்கு. அம்மா அப்பாவையும் இருக்கவிடமாட்டா!
அவனுக்கு ஆட்டு இறச்சி என்றால் அலாதி ஆசை! அவளுக்கு நண்டுக்குழம்பு என்றால் போதும், அவர்கள் வந்தால் பின் நேரம் இருக்காது, இப்பவே வேண்டித்தாங்கோ நான் நேரம் உள்ளபோது வெட்டி எல்லாம் வைக்கிறேன, என்பா அம்மா.
ஆனால் அப்பாவிற்குத்தெரியும் என்ன நடக்கும் என்று. பிள்ளைகள் வருவார்கள். வந்ததும் போனைச் சாச்சில் போடுவார்கள். அம்மா ஒருவாரமாக பிள்ளைப்பைத்தியத்தில் செய்துவைத்தவற்றை எல்லாம் மேசையில் பரப்பி வைப்பா. பிள்ளைகள் நண்பர்களுடன் சந்திப்பதற்கான நேரத்தை உறுதிப்படுத்திக்கொண்டு என்ன சாப்பிடுகிறோம் என்பது கூடத்தெரியாமல் விழுங்குவார்கள். அவ்வளவுதான் வீட்டுச்சாப்பாடு.
மாலையானதும் நண்பர்களைச் சந்தித்துவிட்டு பிட்சா, கேபாப், அல்லது கொத்துரொட்டி என வயிற்றை ஆசைதீர நிரப்பிக்கொண்டு வீடு வருவார்கள்.
அம்மா இன்னும் குசினிக்குள்ளால் வெளியில் வரவில்லை. பிள்ளை களுக்கு இரவு உணவு தாயார் செய்து முடித்திருப்பா. பிள்ளைகளும் அம்மா பாவம் என்று எண்ணியபடி இருவிரலால் எடுத்து உருசிபார்ப்பதுபோல் எடுத்து உண்பார்கள். கடைச் சாப்பாடு ஆரோக்கியம் அற்றதுதான். ஆனால் கேட்டதும் கிடைக்கும். பசித்ததும் புசிக்கலாம். வீட்டில் அம்மா நாளைக்குத் தோசையடா என்று சொல்வதற்கும், கடையில் ஒரு மசாலாதோசை என்றதும் மேசையில் பூவிழுந்தால்போல் வந்து விழுவதும் வித்தியாசம் அல்லவா. காத்திருக்கப்பிடியாத பருவம் இளமைப்பருவம். அது காதலாக இருந்தாலும் சரி உணவாக இருந்தாலும் சரிதான்.
ஆனால்
பிள்ளைகள் திருமணமானபின் யாரைக் கேட்டாலும் அம்மா நன்றாக சமைப்பா! என்று தானே கூறுவார்கள். ஆகவே வீட்டு உணவு தான் பிடிக்கும் என்பார்கள்.அவர்கள் தாயக தந்தையாக மாறும்பொழுது வீட்டு உணவின் மகிமைதெரியும்.
வீட்டு உணவு அன்போடும் ஆரோக்கியத்துடனும் தயார் செய்வதல்லவா. எங்களுக்கு பிடித்த உணவு எது எது என்பதை கணமும் சிந்தித்து சிரத்தையுடன் ஆக்கிதருபவள் தாய் அல்லவா!
கடையில் உண்ணும் உணவு துரித உணவு அதாவது fast food. இவை ஆரோக்கியம் அற்றவை. ஆனால் இன்று உலகம் வேகமாகச் சுற்றுகிறது. வேலையால் இருவரும் வந்து குசினிக்குள் போனால் காலையில் அவர்களால் விரைவாக எழுந்து வேலைக்குச் செல்வதும் கடினம். இப்படியான சில வலுவான காரணங்களும் இருக்கவே செய்கின்றது. அத்துடன் வயதானவர்கள் இருவருக்கு சமைப்பதிலும் பார்க்க கடையில் ஒரு நேரம் வேண்டி உண்பது மலிவானது. லண்டனை எடுத்துக்கொண்டால் இடியப்பம் வீட்டில் அவிப்பது இல்லை என்றே கூறிவிடலாம். அங்கு தெருவிற்கு தெரு போட்டியுடன் பல கடைகள் உண்டு. யேர்மனியில் அப்படி அல்ல. 100 கி.மீ,150 கி.மீ சென்று 50 இடியப்பம் வாங்குவதிலும் பார்க்க அம்மா வீட்டில் அவித்துவிடுவா.
ஆனால் பலர் கடைகளில் வாங்கி உண்பார்களும் உளர். நண்பர்களுடன் நேரம் செலவு செய்யும் போது அதிகமாக கடைகளுக்கு உண்ண செல்வார்கள். கடைகளில் உண்ணும் போது வெளிநாட்டு உணவுகளை தெரிந்து கொள்கிறார்கள். வித்தியாசமான உணவு வகைகளையும் அறிய முடிகிறது. வெளியில் சுவைக்காக மட்டுமே உண்ணுகிறார்கள்.
சில சமயங்களில் சில உணவு வகைகள் வீட்டில் கிடைப்பதில்லை. என்ன செய்வார்கள்? கடையில் வாங்கி உண்பார்கள். மேல் படிப்பு மற்றும் வேலை விடயம் சம்மந்தமாக தனியாகத் தங்கி வருபவர்கள் அதிகமாக வெளியில் உண்பார்கள். உண்ணும்போது உணவு சுவையாக இருந்தால் அதனைப் படம் எடுத்து நண்பர்களுக்கும் பகிர்வார்கள். இது சிறந்த விளம்பரமாகவும் உணவுச்சாலைகளுக்கு அமைகிறது.
தினமும் வெளியில் உண்பதால் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை ஆகவே முடிந்தவரை வீட்டு உணவை விரும்புங்கள், அதற்கு நீங்கள் ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன முதலில் சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அது நிச்சயம் ஒரு நாள் கைகொடுக்கும். அன்று தனியாக இங்கு வந்த ஆண்களை கேட்டுப்பாருங்கள் அவர்களும் அது சரிஎன்றே சொல்வார்கள்.
— றஜீனா தருமராஜா
1,826 total views, 9 views today