இந்திய வேலைவாய்ப்பும் ஈழத் தமிழர்களும்

கடல் நடுவே இருக்கும் ஈழத்தின் மறுபக்கம் கண்ணீர்த் துளிகளைப் பரிசளிக்கத் தமிழகம் நோக்கித் தன்னம்பிக்கையோடு பயணித்து வாழ்வின் பெரும்பகுதியைத் தமிழகத்திலேயே கழித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்வியற் சிக்கல்கள் ஒன்றுக்கொன்று குறைவின்றித் தமிழர்களின் தன்னம்பிக்கையை எப்போதும் சீண்டிக் கொண்டே உள்ளது.

மாண்டு போகாமல் மீண்டு வந்தோம் என்று தமிழகத்தைத் தஞ்சம் அடைந்தவர்கள் மாளா வேதனையில் வலம் வருதல் இங்கு மாறாமல் போயுள்ளது . பொதுவாக ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் என்பது சிக்கலாக இருப்பது மட்டுமன்றிப் பட்டப்படிப்பு முடித்தவர்களும் படிப்பிற்கேற்ற வேலையைப் பெற முடியாமல் இந்த ஏதிலி வாழ்க்கை சதி செய்கின்றது.
தம் பிள்ளைகளை ஒரு பட்டப் படிப்பேனும் படிக்க வைப்பது கனவாக இருக்கும் இந்நேரத்தில் தம் பிள்ளைகளை இந்தியாவில் படிக்க வைப்பதற்காக வேதனை கொள்ளும் நிலையில் ஈழத்துப் பெற்றோர் இருப்பது பலருக்குத் தெரியாமல் இருப்பதுதான் வேதனைக்குரியதாக உள்ளது.

எல்லாவற்றையும் இழந்து ஏதிலியானோம். ஏதிலியானதால் எல்லாவற்றையும் இழந்துள்ளோம். ஏதிலி என்ற காரணத்தால் குடியுரிமை, ஓட்டுரிமை, சான்றிதழ்கள் ஆவணங்கள் என எதையும் பெற முடியாமல் போனவர்களின் பட்டியலில் இருப்பது இந்த வேலைவாய்ப்பின்மையுமாகும். கூலி வேலை செய்தேனும் தம் பிள்ளைகளைப் பட்டப்படிப்பு படிக்க வைத்தவர்களும், வெளி நாட்டு வருமானத்தில் பகட்டாகப் படிக்க வைத்தவர்களும் எதிர்கொள்ளும் சிக்கல் படிப்பிற்கேற்ற வேலையின்மை.

இந்தியர்களுக்கும் வேலையில்லை என்பது உண்மைதான் ஆனால் இங்கு கூறப்படுவது ஏதிலி என்ற ஒரே காரணத்தால் வேலை மறுக்கப்படுவது. பன்னாட்டு நிறுவனங்கள் கடவுச்சீட்டற்ற ஏதிலிகளை ஏற்றுக்கொள்வதில்லை . ஈழத் தமிழர் என்று தெரியாமல் தேர்வு செய்தாலும் பணி அனுமதிக்கான அயல்நாட்டு நுழைவுச் சான்று (விசா ) வாங்கி வந்தால் வேலை கொடுப்பதாக்க் கூறித் திருப்பி அனுப்பி விடுகின்றனர். நுழைவுச் சான்றோடு வரும் வாய்ப்பிருந்தால் ஏன் இந்தியாவில் ஏதிலிகளாக இருக்க வேண்டும்; இலங்கை சென்று இந்தியா வரும் சூழ்நிலை இருந்தால் இங்கு வேலை செய்யவே வேண்டியதில்லையே. இழப்புகள் தாங்கிய இனத்தின் சோகத்தின் பிண்ணனி தெரிந்தும் இதுபோன்ற நிபந்தனைகள் விதிப்பதும், வேலை மறுப்பதும் வேதனைக்குரியது.
ஏதிலிகளாக வாழ்ந்து வருபவர்கள் பெரும்பாலும் கூலி வேலையே செய்கின்றனர். அதில் பட்டப் படிப்பு முடித்த பின்பும் சரியான வேலை

கிடைக்காமலேர் கிடைத்த வேலை மறுக்கப்பட்டதாலோ பெரும்பாலானோர் கூலி வேலைக்குச் செல்கின்றனர்.

தனியார் நிறுவனங்கள் குறைந்த ஊதியத்துடன் வேலைக்கு அமர்த்திக்கொண்டாலும் படிப்பிற்கேற்ற வேலையைப் பெறுவதில் ஈழத் தமிழர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்பது குறித்த உண்மை இன்னும் கண்டுகொள்ளப்படாமலே உள்ளது.

எத்தனை பட்டப்படிப்பை முடித்தாலும்,திறமைகளை வளர்த்திருந்தாலும் ஏதிலி என்ற அடையாளமே வேலை மறுப்புக்குக் காரணமாக இருக்கின்றது.
எந்தத் திறமைகளுக்கும் உடனே அங்கீகாரம் கிடைப்பதில்லைதான் ஆனால் ஈழத் தமிழரைப் பொறுத்தவரை எப்போதுமே அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடுகின்றது.

கனவுகளோடு படித்து முடித்து வெளியே வந்த பின்பு நிகழும் இந்தப் புறக்கணிப்புகள் படிப்பின் மீதான நம்பிக்கையையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் அசைத்துவிடுகின்றது. ஏதிலி என்ற அடையாளமும், குடியுரிமைக்கான அடையாளமின்மையும் பலவிடங்களில் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்குவதால் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் படிப்பின் மீதான ஈடுபாட்டைக் குறைக்கின்றது.

பட்டப்படிப்பு முடித்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகளவில் இருக்கின்றது. இவர்களுக்கான வேலைவாய்ப்பு “ஏதிலி” என்ற அடையாளங்களைத் தாண்டி; கடவுச்சீட்டுச் சான்றுகள் தாண்டிப்பணி அனுமதிக்கான நுழைவுச் சான்றுகளின்றி வழங்கப்படுதலே திறமைக்கான அங்கீகாரம் ஆகும். நிறுவனங்களுக்கெனக் கொள்கைகள், வரைமுறைகள், விதிகள் இருக்கலாம்; ஆனால் விதியால் வாழ்க்கையைத் தொலைத்தவர்களிடம் இந்த விதிமுறைகளைத் தளர்த்தலும் கொள்கைகள் தாண்டிய மனிதமே!

ஈழத் தமிழர் வாழ்வில் இந்தியத்தின் மனிதம் படரட்டும்!

-பொலிகையூர் ரேகா B.com.M.com.M.phil.M.B.A.M.phil.

2,273 total views, 9 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *