இன்னும், வயலோடு வாழ்கிறேன்!
அருவி வெட்டியாச்சோ? என்று ஊரிலிருந்து ரெலிபோன் எடுத்த மருமகளைக் கேட்டேன்.”அருவிவெட்டி சூடும் அடிச்சு நெல்லும் வித்தாச்சு”என்று சிரிச்சபடி பதில் தந்தாள். என்னால் நம்ப முடியவில்லை. எல்லாம் இவ்வளவு கெதியாகவோ? என்றேன்.
“மாமா உங்கிட காலம் போல இல்லை மாமா இப்ப, இங்க எல்லாத்திற்கும் மெசின்தான். காடு வெட்டி,வரம்பு வெட்டி,அரிவி வெட்டி சூடடிச்சு எல்லாமே ஒருநாளில் முடிஞ்சிடு;ம் .எனக்கு சிரிப்புத்தான் வந்தது .நாங்கள் வாழ்ந்த காலத்தில் இதற்காக எத்தனை நாள் செலவளிக்க வேணும். யுத்தம் முடிவுக்கு வந்தபின்பு மரங்கள் முளைத்து காடாக இருந்த வயல் எல்லாம் சென்ற வருடம்தான் காடுவெட்டி விதைக்கத் தொடங்கியிருந்தார்கள். நல்ல விளைச்சல் என்று அக்காவும் புழுகித்தள்ளினா?
பல வருடங்கள் வயல் விதைக்காததால் தேக்கி வைத்த நிலப்பசளையே ,தன் காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன். இன்னும் ஒருமுக்கிய மான கதை ஒன்றும் சொன்னா”தம்பி இஞ்ச சனத்திற்கெல்லாம் சலரோகம் தம்பி”
வராமல் என்ன செய்யும் என்றேன் நான்.”ஏனையா அப்படிச்சொல்லிறாய்” என்று கேட்டா அக்கா..வயலில வேலை செய்யிற குப்பனுக்கும், சுப்பனுக்கும் இந்த வருத்தம் வராதென்று ஒரு புத்தகத்தில படிச்சனான் ;.இப்ப பார்த்தால் யாரும் வயல்வேலை செய்வது போல் தெரியவில்லை அப்படியென்றால் வருத்தம் வராமல் என்ன செய்யுமென்றேன்.
அன்றிரவு எனக்கு நித்திரை வரவில்லை. விதைப்பு, அறுவடை, சூடடிப்பு என்று எத்தனை நாட்கள் உடல் உழைப்பு. கடினம்தான் என்றாலும் அதில் ஒரு சந்தோசம் இருந்தது. இந்த காலம் எமக்குப் பெருத்த ஆரவாரம்தான். இந்த ஆரவாரங்கள் யாவும் எங்களின்ர காலத்துடன் முடிந்து விட்டது போல.. நினைவுகளை அந்தக்காலத்தோடு விரித்து வைக்கிறேன். உங்களையும் என்னோடு அழைத்துச்செல்ல ஆசை.
ஊர் வயல்களைவிட எங்களுக்கு தண்ணிமுறிப்பில் ஒரு வயல் இருந்தது. காடும் களனியுமாய், ஆறும், வண்டலுமாய், கனியும், பூக்களுமாய் எழில் கொஞ்சும் பசுமை நிலமிது. இதன் தன்மையும், தண்மையும், வன்மையும், வரட்சியும் நான் அனுபவித்தவை: இந்தப்பிரதேசமே பல குடும்பங்களின் அட்சய பாத்திரம். எங்களுக்கும் இங்கே தான் அந்தப்பாத்திரம் இருந்தது.
சில வருடத்தில் இரண்டு போகப்பயிர்ச்செய்கை உழவுநேரம் விதைப்புக் காலம், அரிவு வெட்டு, சூடடிப்பு என்று அங்கு சிலநாட்கள் தங்கி நின்று வேலை செய்வோம். வாய்க்காலில்
மேவிப்பாயும் தண்ணிமுறிப்புக்குள நீர்
சுமந்து வரும் காட்டுமலர்கள் கொள்ளை
அழகு.
வேலை முடிந்து நீந்தி
விளையாடும்போது களைப்பை மறந்து
விடுவோம். குடிலுக்குள் நுழைந்து
கொதிக்கக்கொதிக்க அம்மா
ஆத்தித்தரும் தேநீரை செதுக்கி
இருக்கும் சிரட்டையில்
விட்டுக்குடிக்கும் சுவை.
அந்தப்பிரதேசத்திற்குரியது.
இரவு அம்மா வைக்கும்
கருவாட்டுக்குழம்பு அதன் சுவை
எப்போதும் நினைவில் நிற்கும்.
இப்போதும்தான்.
விதைப்புக் காலத்தில் நிலம் ஈரலிப்பாக இருக்கும். படுக்கைக்கு ஏற்றவாறு கிடுகுகளைப்பரப்பி, அதன்மேல் சாக்கை விரித்து, இடுப்புவரை சாக்குக்குள் கால்கள் இரண்டையும் விட்டு படுக்கின்ற சுகம் அலாதியானது.
நுளம்பிற்காகவும், பனிக்குளிருக்காகவும் மூட்டிவிட்ட வீரம் விறகு எரியும் நெருப்பு கதகதப்பாக இருக்கும். நாங்கள் திரும்பும்வரை .இது தொடர்ந்து எரிஞ்சு கொண்டே இருக்கும்.
புதிதாகக் காடு வெட்டியகாலங்களில் காட்டு மிருகங்களுக்குப்பயந்து,தடி பரப்பி களி மண்ணால் மெழுகி மேல் மாடி அமைப்பதுண்டு. கீழே மூட்டிவிட்ட நெருப்பின் கதகதப்பில் அமைதியான தூக்கம் வரும். இரவுவேளைகளில் ஆற்றுக்குள் விழுந்து அழும் மறிக்கரடிகளின் சத்தம் குழந்தைகள் அழுவதுபோல் கேட்கும்:
சிறுத்தைகளின் உறுமல் பயத்தை ஏற்படுத்தும். இரவு பெய்யும் கடும்பனியும், அதிகாலை பனிப்புகாரை விலக்கி வெளிவரும் சூரியனின் கதிர் வீச்சின் அழகும் தண்ணிமுறிப்பின் சிறப்புகளில் ஒன்றாகும்.
எங்கள் ஊரில் ,ருந்து பதினாறு மைல் இந்த வயல் பிரதேசம்.இடைப்பட்ட காலங்களில் தண்ணீர் பாய்ச்ச சைக்கிளில் வருவதுண்டு. அதிகாலை எழுந்து அம்மா சாப்பாடு சமைச்சுக் கட்டித்தருவா, சிவத்தப்பச்சை அரிசிச் சோறு, வெங்காயம் பச்சைமிளகாய் கலந்து நெய்யில் பொரிச்ச முட்டைப்பொரியல், பருப்புக்கறி, வாட்டிய வாழை இலையில் கட்டும்போது வாசம் மூக்கைத் துழைக்கும்.. செத்தல் தேங்காயில் சமைத்த றால் குழம்பு கோர்லிக்ஸ் போத்தலில் விட்டுத் தருவா, .எண்ணெய் பிறந்து பார்க்கவே வாயூறும்.
சைக்கிளில் வரும்போதே சாப்பாட்டின் வாசம் மூக்கைத் துளைக்கும். எப்படா சாப்பிடுவோம் என்றிருக்கும். சைக்கிளை குடிலுக்குள் சாத்திவிட்டு மண்வெட்டியுடன் வாய்க்கால் நீரை வயலுக்குள் திருப்பி விட்டு. வரப்பு வழியே சென்று நண்டு உமைகளைப்பார்த்து சரி செய்துவிட்டு,குடிலுக்குள் வந்து சாப்பாட்டை பிரித்து அரைவாசிக்குமேல் சாப்பிட்டு விட்டால் கொஞ்சம் சரிந்து கொள்ள ஆசைவரும்.
சோவென்று காற்றுக்கு ஆடும் அழகு பார்ப்பதற்கு சந்தோசமாக ,ருக்கும். தாலாட்டும் காற்றின் சலசலப்போடு சுமந்து வரும் மூலிகைச் செடிகளின் வாசம் சுகத்தைத் தரும்.சுகமான தூக்கம் வரும்.வெயிலின் கொடுமை தாளாது கானல் குருவிகள் கத்தும் சகிக்க முடியாத கதறல்,அடிக்கடி கேட்கும். மயில் அகவும் சத்தம்,மான்கள் கூச்சலிடும் சத்தம், ஆள்காட்டி குருவி கத்தும் சத்தம் தலையில் அடித்தது போல் கேட்கும்.
உழவு பலகையடித்தல்,அரிவு வெட்டுதல்,சூடடித்தல், தண்ணிபாய்ச்சுதல் என்று எல்லாமே கஸ்ரமயாயினும் ,நெற்கதிர்களைப் பார்க்கும் போது எல்லாமே மறந்து விடும். இந்த இன்ப வடுக்களைச்சுமந்து இன்னும் வயலோடு வாழுகிறேன். அதிகமாக எழுத ஆசை பத்திரிகைப் பக்கம் போதாதென ஆசிரியர் கடுப்பாயிடுவார்;. மீண்டும் இந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க மனம் கிடந்து துடிக்கிறது. முடியும். என்றே நினைக்கிறேன்.
வாசித்து முடிய நான் இங்கு இல்லை. இது வாசித்த எனது கருத்து
— பொன்.புத்திசிகாமணி – யேர்மனி
2,144 total views, 6 views today