நான் அது செய்தேன், இது செய்தேன் என்பது வாழ்வில்; அமைதியை தராது.

நல்லவனாய் வாழ்ந்தாலும் நிம்மதியில்லை
கள்வனாக மாறினாலும் காண்பது தொல்லை
அல்லும் பகல் பாடுபட்டும் அமைதி என்பதில்லை
சொல்லப்போனால் துன்பந்தானே மனிதனின் எல்லை.
என்பது ஒரு பழைய சினிமாப்பாடல்.

மனிதனுடைய சராசரி வாழ்வுக்காலம் இன்று ஏறத்தாழ 80 வருடங்கள் ஆக உயர்ந்து விட்டது. மருத்துவ வளர்ச்சி கல்வி வளர்ச்சி விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் ஆகியன மனிதனை அதிக காலம் வாழ வைப்பதில் வெற்றி கண்டுள்ளன ஆனால் எத்தனை பேர் தங்களது வாழ்வுக்காலத்தின் பெரும் பகுதியை அமைதியாக, மகிழ்வாக, நிம்மதியாக வாழ்ந்து முடிக்கின்றார்கள் என்று பார்த்தால் அந்த எண்ணிக்கை வரவர அருகி வருகிறது. உலகம் முழுவதிலும் மனச்சோர்வின் நூற்று வீதம் அதிகரித்து வருகிறது. அடுத்த தசாப்த காலத்தில் மனச்சோர்வு தடிமன் போல மிக வேகமாகப் பரவும் ஆபத்து இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. (அது தொற்று நோய் இல்லாவிட்டாலும்) வளர்ச்சி அடைந்த நாடுகளிலும் இத்தகைய உள நலப்பிரச்சினைகள் கையாளக் கடினமானவையாகத்தான் இருக்கின்றன.

“நிம்மதியான வாழ்வு” என்பது தான் எதிர்காலத்தில் மனிதர்களின் இலக்காக ஆக வேண்டி இருக்கின்றது. வேறு என்னதான் இருந்தாலும் – செல்வம், கல்வி, வேறு வசதி வாய்ப்புக்கள் எல்லாம் இருந்தாலும் – அமைதி இல்லை என்றால் வாழ்வு வெறுமையாகி விடும். மற்றதெல்லாம் தேடியது, அமைதியும் சந்தோசமும் வரும், வரவேண்டும் என்பதற்காகத்தானே!

வாழ்வின் அமைதி, உளநலத்தோடு தொடர்புடையது என்பது தெளிவு. உளநலமும் மனஅமைதியும் ஒன்றுக்கொன்று நேர்விகித சமனானது என்றும் கூறலாம். உளநலம் திருப்தியாக அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆரோக்கியமான நிறை உணவு, குடிப்பதற்கு சுத்தமான நீர், சுவாசிக்க மாசற்ற வளி, நிம்மதியான நித்திரை செய்ய ஒரு பாதுகாப்பான இடம் என்பவற்றோடு அன்புத்தேவையும் கணிப்புத்தேவையும் பூர்த்தியாக வேண்டும். மிகச் சுவையான விதம் விதமான உணவு, ஒரு கட்டிலில் தான் படுக்கமுடியும் என்றாலும் அதற்குப்பெரிய மாடி வீடு என்று எல்லாம் மனிதன் தேடிக்கொண்டு விடுகிறான் ஆனால் அன்புத்தேவையும் கணிப்புத்தேவையும் தான் அவனை சிக்கலில் தள்ளி விடுகின்றன.

.கணிப்புத்தேவை பூர்த்தியாவது அவசியந் தான் அது அதிகார வேட்கை ஆகிவிடக்கூடாது. “என்னுடைய கருத்தே எப்போதும் இறுதியாக இருக்க வேண்டும்” “ நான் சொல்வதையே எப்போதும் மற்றவர்கள் செய்ய வேண்டும். ” என்று நினைத்து மற்றவர்களை புண்படுத்தி துன்புறுத்தி செயற்படுபவர்கள் ஒருபோதும் அமைதி பெறுவதில்லை.

மறுதலையாகத்தனக்குள் ஒரு விழுமியமும் ஒழுக்கப்பண்பும் கருணையும் நிறைந்த ஒரு மனிதரை உருவாக்கிக் கொண்டு அதனால் தனது சுய கணிப்பபை உண்மையாக உயர்த்திக்கொள்பவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் , இருப்பார்கள். தாம் ஏனைய பல மனிதர்களை விட மனிதத்துவத்தில் சிறந்தவர்கள் என்பது அவர்களுக்கு உண்மையாகவே தெரியும். அதைப்பிறர் சொல்ல வேண்டும் என்பது கூட அவசியமில்லை. அவர்களது அகமனம், ஆழ்மனம், மனச்சாட்சி ஆகியவை சொல்லும். காலப்போக்கில் உலகிற்கு அது புரியும். இல்லாவிட்டால் அப்துல்கலாமையும், அன்னை திரேசாவையும் உயர்ந்த மனிதர்கள் தான் என்று உலகம் ஒரே குரலில் ஒத்துக்கொள்ளுமா?

நான் அது செய்தேன், இது செய்தேன்

வேறு பல மனிதர்களும் தான் “ நான் அது செய்தேன், இது செய்தேன் ” என்று மேடை மேடையாக வாய் கிழியக் கத்திக்கொண்டு திரிகி;றார்கள். ஆனால் உலகம் அவ்வளவு விரைவில் எல்லோரையம் சான்றோர்கள் என்று ஏற்றுக்கொள்வதில்லை. சான்றாண்மையை நிலைநாட்ட பல தசாப்தங்கள் செல்லும். அப்படி இல்லை என்று ஆவதற்கு ஒரு நாள், ஒரு சம்பவம் போதும். ஆகவே தான் மன அமைதியை நிலைநாட்டுவது பலருக்கும் பெருத்த சவாலாக இருக்கிறது.

தமக்குள் மன அமைதியுடன் வாழ்பவர்கள் தாமாக யாருக்கும் புத்திமதி சொல்லப்போவதில்லை. ஆயினும் அவர்களிடம் ஆலோசனை கேட்க ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பார்கள். அவர்களது உள்ளார்ந்த அமைதியை வெளியிலிருந்து யாரும் குழப்ப முடியாது என்பதால் அவர்கள் பெரும்பாலான நேரத்தில் சந்தோசமாகவும் அமைதியுடனும் இருப்பார்கள்.

அமைதியுடன் இருப்பவர்களுக்கும் எல்லா மனித உணர்வுகளும் இருக்கும். கோபம், பயம். போன்ற மறை உணர்வுகள் இவர்களுக்கும் வரலாம். ஆயினும் அந்த உணர்வுகளை அவர்கள் மிக ஆரம்பத்திலேயே இனங்கண்டு கொள்வார்கள். அந்த உணர்வுகளைக் கையாளும் முறை இவர்களுக்குத் தெரிந்திருக்கும். தொழிற்படாநிலைக்கோபம் என்பது தமக்கும் மற்றவர்களுக்கும் தீங்கு தருவது என்று இவர்களுக்கு நிச்சயமாகத் தெரியும் என்பதால், கோபத்தைக்காட்டி இவர்கள் மற்றவர்களை பயமுறுத்துவதில்லை. அந்தக்கோபம் தமது சொந்த இதயத்துடிப்பு வேகத்தையும், குருதி அமுக்கத்தையும் உயர்த்த வல்லது என்பதை இவர்கள் தெளிவாக அறிவர்.

வாழ்வின் அமைதியை வேண்டுபவர்கள் மற்றவர்களோடு உறவாடுகையில் வாக்குநேர்மை, செயல்நேர்மையைக் கடைப்பிடிப்பர். ஒப்புக்கொண்ட விடயத்தை ஒப்புக்கொண்ட வகையில் ஒப்புக்கொண்ட நேரத்தில் செய்து முடிப்பர். தங்களால் அது முடியாது எனக்கண்டால், அல்லது தாங்கள் அதைச்; செய்ய விரும்பவில்லை என்றால் அதை அவ்வாறு நேர்மையாகக் குறிப்பிடுவர்.

கவலைகள்; பெரும்பாலும் மற்றவர்களுடனான ஒப்பீட்டினால் வருவது என்பது அவர்களுக்குத் தெரி;யும். ஆகவே நிம்மதியாக வாழ விரும்புபவர்கள் தங்களை யாருடனும் ஒப்பிடுவதில்லை. “எனது காலுக்குச் செருப்பில்லை என்று கவலைப்பட்டேன.; தெருவில் கால்களே இல்லாத மனிதனைக்காணும் வரை ”(I had the blues I had no shoes; until upon the street I met a man with no feet) என்ற ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நாங்கள் எங்களை எங்களோடு ஒப்பிட்டுக்கொள்ளலாம். எங்கள் சுயவளர்ச்சி கண்டு மகிழலாம.; நாங்கள் செய்யும் நல்ல செயல்களுக்குச் சுய பாராட்டும் பரிசும் கூட வழங்கிக்கொள்ளலாம். ஆனால் இன்னொருவரோடு நம்மை ஒருபோதும். ஒப்பிடவேண்டியதில்லை.

ஒரு கிராமத்தின் கோடியில் உள்ள மரத்தின் கீழ் முனிவர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். கிராம மக்கள் ஒவ்வொருநாளும் அவரைத் தேடி கூட்டம் கூட்டமாகப் போகிறார்கள். அந்த நாட்டின் அரசனிடம் அவ்வளவு மக்கள் கூட்டம் வருவதில்லை. அரசனுக்கு ஒரு வகையில் இது பொறாமையாக இருந்தது. அவன் அதை முனிவரிடமே கேட்டு விட எண்ணினான் ஒரு நாள் தானே முனிவர் அமர்ந்திருந்த மரத்தடிக்குச் சென்றான். “சுவாமி” என்றான். முனிவர் தியானம் கலைந்;து கண்களைத் திறந்து பார்த்தார் “ஒரே ஒரு கேள்வி சுவாமி” என்றான் அரசன். “கேளப்பா” அவர் முகத்தில் சிறு புன்னகை! “என்னிடம் பெருமளவு செல்வம் இருக்கிறது, கல்வி இருக்கிறது. வீரம் இருக்கிறது. நினைத்தவுடன் எதையும் செய்யத்தக்க அதிகாரம் இருக்கிறது. இவை எதுவுமில்லாத அல்லது என்னை விட மிகக் குறைந்தளவிலுள்ள உங்களைத்தேடி .இவ்வளவு மக்கள் வருகிறார்கள். அந்த எண்ணிக்கையில் பாதி கூட என்னிடம் வரவில்லையே! ஏன்? ” முனிவரின் முகத்தில் மீண்டும் ஒரு சிறு புன்னகை. “நீ உன்னை என்னோடு ஒபபிடுகி;றாய். நான் அப்படிச் செய்யவில்லை. அவ்வளவுதான் வேறுபாடு.” என்று கூறி விட்டு மறுபடியம் தியானத்தில் மூழ்கி விட்டார்.

“சந்தோசமும் அமைதியும் கடையில் விற்கப்படும் சரக்குகளல்ல- விலை கொடுத்து வாங்குவதற்கு. அவை எமது மனதுக்குள்ளே இருந்து வருகபவை.” என்று தெரிந்தவர்கள் தங்களை யாருடனும் ஒப்பிடுவதில்லை ஒப்பிட விரும்புவதுமில்லை

எமது மகிழ்வுக்கும் எமது உடலில் சுரக்கப்படும் ” செறரோனின்” (Seratonin) என்ற நரம்பிணைப்புப் பதார்த்தத்திற்கும் தொடர்பிருக்கிறது என்று உளவியல் விஞ்ஞானம் கூறும். போதிய உடற்பயிற்சி செய்பவர்கள், தளர்வுப்பயிற்சிகள் செய்பவர்கள், யோகாவில் ஈடுபடுபவர்கள், தமது எண்ணங்களை முடிந்த வரை நேரானவையாக வைத்திருப்பவர்கள் தமது செறரோனின் அளவைக் கூட்டிக்கொள்கிறார்கள். தம்மைச்சூழவுள்ள விடயங்களை நிறையவே இரசிப்பவர்களும.; வாழ்வில் நன்றி சொல்வதற்கு நிறைய விடயங்களும் நிறைய மனிதர்களும் இருப்பதாக நினைப்பவர்களும் கூட அதை செய்து கொள்கி;றார்கள். தாம் செய்யும் விடயம் எதுவாக இருந்தாலும் அதை முழுமனதுடன் இரசித்து விரும்பிச் செய்பவர்கள் மகிழ்வாக இருப்பதற்கு இதுவே காரணம்.

மற்றைய மனிதர்களை அன்பு செய்வதும் மகிழ்வாகவும் அமைதியாகவும் இருப்பதற்கான சிறந்த வழியாகும். ஊலகம். முழுவதும் இன்று தனிநபர் வாதம் நிறைந்த சுயநலப் போக்கை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது (Individualization). கடிதங்களும் மின்னஞ்சல்களும் “அன்புள்ள” என்று தொடங்கினாலும் அன்பு என்பதன் அர்த்தம் புரிந்து கொள்ளப்படுகிறதா? என்று தெரியவில்லை. ஒருவரது வளர்ச்சி, விருத்தி, மகிழ்ச்சி ஆகியவை மற்றொருவருக்கு அவசியமாகும் நிலை தான் அன்பு. “அன்புதான் வாழ்வு அதுதான் வாழ்வின் ஒரே ஒரு சட்டம். இன்றும் என்றும் அது உண்மையானது ” என்றார் சுவாமி விவேகானந்தர். சுயநலம் என்பது இறப்புக்கு ஒப்பானது என்பதைப் புரிந்த கொள்ளாமல் மனிதர்கள் மேலும் மேலும் சுயநலம் மிக்கவர்களாக மாறி வருகிறார்கள்.

எந்த பிரதி பலனும் எதிர் பாராமல் மற்றவர் மீது நாம் அன்பு செலுத்தும் போது அது எம்மை நோக்கி ஏதோ ஒரு வகையில் திரும்பி வரும். இந்த உலகத்தினூடு நாம் ஒரு முறைதான் பயணம் செய்யப்போகி;றோம். (பிறகு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது). ஆகவே அந்தச் சிறு காலப்பகுதியில் விரக்தி உள்ள இடத்தில் நம்பிக்கையையும் இருள் உள்ள இடத்தில் ஒளியையும் மருள் உள்ள இடத்தில் மகிழ்வையும் உண்டாக்க முயல்வோம். விளக்கு ஒளியைத் தருமா தராதா என்று விவாதிப்பதை நிறுத்தி-விட்டு ஒரு சிறு அகல் விளக்கையாவது ஏற்றுவோம்.

மகாஜனா பழையமாணவர் சங்கம் – பிரான்ஸ் வெளியிட்ட வெள்ளிவிழா மலரான ‘வெளிச்சம்’ (2016) இதழிலிருந்து..

– கோகிலா மகேந்திரன்-

1,584 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *