கண் புருவங்களின் பயன்பாடு என்ன?
நண்பர்களே, நமக்குள் தோன்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த என்ன செய்வோம்? ஏதோ நமது வாயால் பேசி, குரல்களை எழுப்பி, சைகைகளைக் கொண்டு, கோபம், அன்பு, ஆனந்தம், துக்கம், பயம், ஆச்சரியம், வெட்கம் போன்ற பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவோம். அது சரி தானே? ஆனால் இந்த அனைத்து உணர்ச்சிகளையும் வெளிக்கொண்டு வர, இன்னும் ஒரு மிக மிக முக்கிய பங்களிப்பை எது செய்கிறது தெரியுமா? அது வேறு ஒன்றுமே இல்லை, நமது புருவங்கள் தான்! நமக்கு முன் நிற்கும் ஒருவர் நம் மீது கோபமாக இருக்கிறார் என்பதை அவரின் கண் புருவங்கள் கீழ் நோக்கி இருப்பதை வைத்தே எளிதாகக் கண்டறிந்துவிட முடியும். அதேபோல் எதையாவது ஆச்சரியமாகப் பார்த்தால், நமது புருவங்கள் தானாக மேலே ஏறிவிடும். இப்படி நம்மை அறியாமலேயே நமது புருவங்கள் நமது செயல்பாடுகளை உலகிற்குக் காட்டிக்கொண்டே இருக்கும். ஆனால், உங்களிடம் ஒன்று கேட்கவா? இப்படி நம்மைக் காட்டிக் கொடுக்கும் இந்தப் புருவங்களின் உண்மையான பயன்பாடு என்ன?
இயற்கையில் காணப்படும் அனைத்திற்கும் ஏதாவது ஒரு காரணம் இருந்தே தீரும். அதற்கு இதுவும் கூட ஒரு உதாரணமாக இருக்கிறது. மனிதர்களுக்குக் கண் புருவம் இருப்பது ஒரு பாதுகாப்பிற்குத் தான். சரி சரி, நீங்கள் எல்லோருமே கேட்கும் கேள்வி எனக்குப் புரிகிறது. இந்தக் கண் புருவங்கள் அப்படி எதைத் தான் பாதுகாக்கின்றது என்றும் எந்த ஆபத்திலிருந்து பாதுகாக்கின்றது என்றும் தானே கேட்கிறீர்கள். எல்லாம் நமது கண்களைப் பாதுகாப்பது தான் நமது புருவங்களின் வேலையே.
உதாரணமாக நீங்கள் வேகமாக ஓடுகின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். அப்படி ஓடும் போது அதிகப்படியான வியர்வை வந்து உங்கள் நெற்றியிலிருந்து கீழ் நோக்கி வழிகின்றது. அப்படி வழியும் வியர்வை, நமது கண்களுக்குள் செல்லாமல் தடுப்பது நமது புருவங்கள் தான். அதே போல் தான் மழையில் நாம் நனைந்தாலும் நமது கண்களைப் பாதிக்காமல் மழைத் துளிகளைக் கண்களுக்கு அருகே வழியும் படி செய்வதும் அதே புருவங்கள் தான். ஏனென்றால், அதன் வடிவமைப்பின் காரணத்தால் தலையிலிருந்து வியர்வையோ அல்லது நீரோ கண்களை நோக்கி வந்தால் அவற்றை நமது கண்களை நெருங்க விடாமல் கன்னத்திற்குக் கொண்டு செல்வது நமது புருவங்களின் முக்கிய வேலை ஆகும்.
சரி, கண் புருவங்களின் பயன்பாடு உங்கள் எல்லோருக்கும் இப்பொழுது புரிந்து இருக்கும், ஆனால் சும்மா ஒரு கற்பனைக்கு இதைச் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவேளை நமக்குக் கண் புருவங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்வோம். அப்படி என்றால், இயற்கை அதற்கு என்ன வழி பண்ணி இருக்கும் தெரியுமா? சில ஆராய்ச்சியாளர்களின் கணிப்புப் படி, நமக்குக் கண் புருவங்கள் இல்லாமல் இருந்தால், அதிகப்படியான கண்ணிமை முடிகளின் வளர்ச்சி இருந்து இருக்கும் அல்லது நமது நெற்றி முன்னோக்கி வளர்ந்து நமது கண்களைப் பாதுகாத்திருக்கும் என்று சொல்கிறார்கள்.
சரி நண்பர்களே, இனி நீங்கள் கூறுங்கள்? இயற்கையின் படைப்புக்குப் பின்னால் ஏதாவது ஒரு புத்திசாலித்தனமான காரணம் இருக்கும் என்பதற்கு நமது கண் புருவங்களே ஒரு உதாரணம் ஆகும், இல்லையா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? இதற்குரிய பதிலை மட்டுமில்லாமல், எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh)
1,656 total views, 3 views today