முயல் மட்டுமா செத்தது? காதலும்தான்!

சூரியன் மறைந்து இருள் பரவத் தொடங்கிவிட்டது. வீதியில் விளக்குகள்கூட மங்கலாக தூரம் ஒன்று என்ற ரீதியில் அழுது வடிந்து கொண்டிருந்தது. அது ஒரு காட்டுப் பகுதியின் ஊடாக உள்ள ஒரு வீதி, சுதர்சன் உற்சாகமாக கார் ஓடிக்கொண்டிருந்தான். அருகில் அவனுடைய அன்பு மனைவி, சினிமா பாடலை ரசித்தவண்ணம் கண்மூடி பாடலுடன் தானும் சேர்ந்து மெதுவாக பாடிக்கொண்டிருந்தாள்.

சுதர்சன் கடைக்கண்ணால் மனைவியைப் பார்த்தான், சுமதி அழகான பெண், அறிவுடன் கூடிய அமைதியான பெண், சுதர்சனும் சுமதியும் இணைபிரியாத தம்பதியர்கள். ஆதர்ச தம்பதியர்கள் என்று நட்பு வட்டாரத்தில் பேசப்பட்டார்கள். அவன் தன் மனைவியிடம் கோபமாக என்றுமே நடந்து கொண்டதில்லை. சுமதியும் ஒரு தடவை கூட தன் கணவனை எதிர்த்து கதைத்திருக்கமாட்டாள். சுதர்சனின் எண்ணங்கள் அவனது காதல் மனைவியை சுற்றி வட்டமிட்டது. அவன் ஒரு அலுவலகத்தில் பெரிய பதவியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். சுமதியும் வேலை பார்த்த பெண்தான், திருமணத்தின் பின் கணவனின் வேண்டுகோளிற்கிணங்க வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டாள். வீட்டிலேயே அவனுடைய நோய்வாய்ப்பட்ட பெற்றோரை கவனித்துக்கொண்டு, வீட்டு நிர்வாகத்தையும் திறம்பட நடத்திவந்தாள். வீட்டு வேலைகள் செய்ய வேலைக்காரர்கள் இருப்பதினால் அவளுக்கு எந்தவித சிரமமும் இருக்கவில்லை. மாலை வேளையில் கோவில், பீச், ஷாப்பிங் என்று சுற்றி வருவார்கள். வார விடுமுறையில் கொஞ்சம் தூரமான இடங்களுக்கு சுற்றுலா செல்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பது ஒரு வசந்தமாக பூத்துக் குலுங்கியது அன்றும் ஒரு வார விடுமுறை நாள்தான், அவர்கள் ஒரு பயணம் புறப்பட்டு இருந்தார்கள்.

காட்டின் ஊடாக அமைக்கப்பட்ட வீதியினூடாக காரில் சென்று கொண்டிருந்தனர், வீதியில் அவர்களுடைய கார் மட்டும்தான் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென சுதர்சன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான், என்னவெனச் சுமதியும் கண்களாலேயே வினவினாள்! முயல் ஒன்று அடிபட்டுவிட்டது, என்று சொன்னபடியே அவன் கீழே இறங்கினான். சுமதியும் கீழே இறங்கினாள், முயல் இறந்தபடி கார் முன்னே கிடந்தது. இது முதலிலேயே இறந்துபோன முயல் போன்று இருக்கின்றது. யாரோ காரின் முன்னே வீசியது போல் அல்லவா இருக்கின்றது. தனக்குள்ளேயே அவன் சொல்லிக்கொண்டான் அப்போது அங்கு ஒரு மனிதன் வந்தான். என்ன விஷயம்? என்ன நடந்தது? என வினாவியபடி வந்த அவன் சுதர்சன் உடன் கதைத்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வை சுமதி பக்கம் பார்க்கும் போது அசௌகரியமாக இருப்பது போன்று சுமதி உணர்ந்தாள். சுதர்சனும் அவ்வாறே உணர்ந்ததால், காரின் உள்ளே போய் அமரும்படி கண்ஜாடை காட்டினான். அதன்படி அவளும் உள்ளே போய் அமர்ந்து கொண்டாள். அந்த மனிதனிற்கு அந்த நிகழ்வு பிடிக்கவில்லை. அவனுடைய குரலில் ஏற்றம் இருந்தது, கோபம் கொப்பளித்தது, இருவருக்குள்ளும் வார்த்தைகள் தடித்தன, கைகலப்பு ஏற்பட்டது சுமதி பயந்தாள், கணவனை வந்து காரில் ஏறும்படி சத்தமாக கத்தினாள். ஆனால் நடந்தது வேறு விதமாக இருந்தது, மிகவும் பயங்கரமாக இருந்தது, கண்சிமிட்டும் நேரத்தில் அவன் சுதர்சனை தள்ளி விழுத்திவிட்டு, காரில் ஏறி டிரைவர் சீட்டில் இருந்து உள்பூட்டுப் போட்டுப் பூட்டிக் கொண்டான். நடந்த விபரீதத்தை சுமதி பின்புதான் புரிந்துகொண்டாள் அவளால் இறங்கி வெளியில் செல்ல முடியாமல் உள் பூட்டு போடப்பட்டு இருப்பதை உணர்ந்தாள்.

அவள் என்னதான் சத்தம் போட்ட போதும் எந்த சத்தமும் வெளியில் கேட்கவில்லை. கார் கண்ணாடியை அடித்தாள், எதுவும் முடியவில்லை. வந்தவனை தாக்க முயற்சித்தாள், காருக்குள் இருந்த அவன் சுமதியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான், சுமதி குருவிக் குஞ்சைப்போல் அடங்கி ஒடுங்கி விட்டாள். வெளியில் இருக்கும் சுதர்சனால் எதுவும் செய்ய முடியவில்லை. போனை காருக்குள் வைத்து விட்டு இறங்கிவிட்டான், அதனால் யாருக்கும் தொலைபேசியில் தொடர்பு ஏற்படுத்தி உதவியும் கேட்கமுடியவில்லை. அடர்ந்த இருளில் உள்ளே என்ன நடக்கின்றது என்றும் தெரியவில்லை. கார் கண்ணாடியை உடைத்து விடலாம் என்றால், அவன் கை கால்கள் நடுங்கின, வந்திருப்பவன் முரடன், அவனுடன் சண்டை செய்யக்கூடிய தைரியம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தான். தாங்கள் இரண்டு பேர் இருப்பதனால் அவன் ஒருவன்தானே அவனை எப்படியும் சமாளிக்கலாம் என்றாலும், தான் ஆண்! தன்னாலேயே முடியவில்லை என்றால், மனைவி மட்டும் எப்படி துணிவாக இருப்பாள்? என்று எண்ணினான். ஆனால் சுமதி தன் கணவன் தன்னை காப்பாற்றுவான், என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஏதாவது மரக்கட்டையை கையிலெடுத்து கார் கண்ணாடியை உடைத்து உள்ளே வந்து விடுவார் என்று எதிர்பார்த்தாள். அப்படி அவர் வரும் போது, தானும் வீரத்தோடு போராடி அவனை வீழ்த்தி விட வேண்டும் என மனக்கணக்கு போட்டு இருந்தாள். ஆனால் எல்லாம் கற்பனை ஆகிப் போய்விட்டது. அவளுடைய கணவனும் கையாலாகாதவனாக காரின் பின்புறமும் முன்புறமும் ஓடிக்கொண்டிருந்தான். ஆனால் உள்ளே வருவதற்கான எந்தவித முயற்சியையும் எடுக்கவில்லை என்பதை பார்த்து அவளுடைய அந்த இரவு அவளிற்கு நரகமாக்கிக் கொண்டிருப்பதை எண்ணி வருந்தினாள். சில பல நிமிடத் துளிகள் நீடித்தன…

வந்தவனும் சுமதியை விட்டு விட்டு, காருக்குள் இருக்கும் போன், பணம், நகைகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு இறங்கினான். போகும்போது முயலையும், எடுத்துக்கொண்டு போகின்றான். இறந்த முயலைக் எடுத்து, தோளின் மேலே போட்டு, நடைபோட்டு சென்றான் அந்த முரடன். நடப்பவற்றை அவதானித்தபடி இருந்த சுதர்சன், உடனடியாக செயற்பட ஆரம்பித்தான். காரினுள்ளே வந்து இருந்தவண்ணம், மனைவியை பார்த்தான்.

அவள் ஆடைகளை சரி செய்த வண்ணம், அழுதபடி இருந்ததைப் பார்த்து, “என்ன நடந்தது என்று?” கரகரப்பான குரலில் கணவன் கேட்டதைப் பார்த்து சுமதி திகைத்துப் போனாள். “எப்படி இருக்கின்றாய்? என்று கேட்பீர்கள் என்று நினைத்தேன். ஏன் ஒரு மாதிரியாக கதைக்கிறீங்க?” என்று சுமதி கேட்டாள் “அது இருக்கட்டும், இங்க இதுவரைக்கும் என்ன நடந்தது?” என்று குற்றம் சாட்டுவதைப்போல் சுதர்சன் அவளைப் பார்த்து கேட்டான். “ஏன் உங்களுக்கு ஏதும் தெரியாதா?” பதிலுக்கு அவளும் வினாவினாள். கோபத்தின் உச்சிக்கே போய்விட்டான் சுதர்சன் “நான் ஆம்பிள அப்படித்தான் கேட்பன், கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு!” திகைத்துப் போனாள் சுமதி நிமிர்ந்து அவனைப் பார்த்து, “ஆம்பிளையா? உங்கள் ஆம்பள தனத்தை வந்த முரடனிடம் ஏன் காட்டவில்லை? அந்த மனிதனின் முகத்தில் நான் என் நகத்தால் கீறியபோது, அவன் ரத்தத்தைத் துடைத்துவிட்டு பின், என்னை அடித்தான். அப்போது இந்த ஆம்பளையின் கைகள் எனக்கு உதவிக்கு வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நீங்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என் உயிர் காதலி, என் உயிர் காதலி, என்று சொல்லுவீங்களே? அந்த காதல் செத்துவிட்டதா? ஆனால் இப்போ உங்க மேல வைத்த நம்பிக்கை மட்டுமல்ல, உங்கள் மேல் வைத்த காதலும் செத்துவிட்டது!” என்று சொல்லிவிட்டு காரை விட்டு இறங்கி விட்டாள்.

“சுமதி” என அழைக்க எண்ணிய சுதர்சன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். நான் ஆம்பிள, லேசுல பணிந்து போகக் கூடாது. எவ்வளவு நேரம் வெளியில குளிரில் நிற்பாள்? தானாக வருவாள் என்று எண்ணினான். ஆனால் எதிர்ப்பக்கம் இருந்து வந்த பஸ்சை மறித்து, அதில் அவள் ஏறி சென்று விட்டாள். தப்பு செய்து விட்டேனோ? என எண்ணிய படி, அவன் காரை ஸ்டார்ட் செய்தான். காரும் ஸ்டார்ட் ஆகவில்லை. அவனுடைய வாழ்வும் அதே இடத்தில் நின்று விட்டது.

சுதர்சனின் வாழ்வும் காரும் நடுத்தெருவில் நின்றது. கணவனை திரும்பிக்கூட பார்க்காமல், அவள் சென்று கொண்டே இருந்தாள். வாழ்க்கையில் காதல் மட்டுமல்ல ஆணித்தரமான நம்பிக்கையும் தேவை என்பதை சுதர்சன் அன்று புரிந்தானோ? இல்லையோ?

— மங்கை அரசி

1,256 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *