இலங்கையில் பெண்களைவிட ஆண்களே உப்புப் பிரியர்கள்!!!
உப்பு அதிகரித்தால் நோய்கள் வரும். உப்பு இல்லாவிட்டால் ?
எமது பண்பாட்டில் உப்பு முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதனால் தாய்மொழியில் பழமொழிகளும் வாய் மொழிகளும் உப்பைப் பற்றிப் பரவலாகப் பேசுகின்றன.
‘உப்பிட்டவரை உள்ளவும் நினை..’, ‘உப்பிலாப் பண்டம் குப்பையிலே..’, ‘உப்புச் சப்பில்லாத விடயம்..’ இவ்வாறு பல.
எமது உணவில் உப்பு
மொழி மத வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்களான நாம் அனைவருமே உப்புப் பிரியர்களாக இருக்கிறோம். தினசரி உட்கொள்ளக் கூடிய உப்பின் அளவானது 3.75 முதல் 5 கிராம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தபோதும் நாங்கள் 12.5 கிராம் வரை உட்கொள்கிறோம்.
இலங்கையில் ஆண்கள் பெண்களைவிட அதிகமாக உப்பை உட்கொள்கிறார்கள் என இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம்.
அதிலும் முக்கியமாக 20 முதல் 60 வயதுவரையான ஆண்கள், அவர்கள் நகர்புறத்தைச் சார்ந்தவர்களானாலும் சரி கிராமங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அதிகமாக உப்பை உள்ளெடுக்கிறார்களாம்.
சோற்றுக்கு உப்புப் போட்டுச் சமைப்பதும், கறிகளுக்கு உப்பும் உறைப்பும் செழிக்கப் போடுவதும் எமது தேசத்தின் பழக்கம். அதற்கு மேல் கடையில் வாங்கும் துரித உணவுகள் உப்பைத் தாரளமாகக் கொட்டித் தயாரிக்கப்படுகின்றன.
கிழக்கு ஆசிய நாட்டவர்களான நாம் மேலைத் தேசத்தவர்களை விட அதிகம் உப்பை உண்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உப்பு என்பது யேஊட. அதிலுள்ள சோடியம் (Na) எனும் கனிமம்தான் பாதகங்களுக்கு முக்கிய பங்களிக்கிறது
அதிக உப்பின் பாதக விளைவுகள்
உப்பை அதிகம் உட்கொண்டால் பிரஷர் வரும், ஏற்கனவே பிரஷர் உள்ளவர்களுக்கு மேலும் அதிகரிக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்த செய்திதான். அதே நேரம் தினசரி 12 கிராம் உப்பை உட்கொண்டவர் அதனை 3 கிராம் ஆகக் குறைத்தால் பிரசரானது 3.6 முதல் 5.6 ஆல் குறையும் என ஆய்வுகள் சொல்லுகின்றன.
ஆனால் அதிக உப்பானது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியத்தையும் அதிகரிக்கும் என்பது பலரும் அறியாத செய்தியாக இருக்கலாம்.
உப்பு அதிகரிப்பதால் பிரஷர் அதிகரிக்கும். அதனால்த்தான்; மாரடைப்பு பக்கவாதம் ஆகியன வரும் என நீங்கள் எண்ணலாம். ஆனால் பிரஸர் அதிகரிப்பதால் மட்டும் இவ் ஆபத்துக்ள் வருவதில்லை. அதீத உப்பு நேரடியாகவே இரத்தக் குழாய்களிலும், இருதயத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பையும் பக்கவாதத்தையும் கொண்டு வரும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.
ஆனால் உட்கொள்ளும் உப்பின் அளவை 12 கிராமிலிருந்து 3 கிராம் ஆகக் குறைத்தால் பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் நாலில் ஒரு பங்காலும், இருதய நோய்கள் வருவதற்கான சாத்தியம் மூன்றில் ஒரு பங்காலும் குறையும் என்ற நல்ல செய்தியையும் ஆய்வுகள் கூறுகின்றன.
அதீத உடல் எடைக்கு தவறான உணவு முறைதான் காரணம் என்ற போதும் கூடுதலாக உப்பு உட்கொள்வதும் ஒரு காரணமாகும்;. எண்ணெய். கொழும்பு, இனிப்பு மற்றும் மாப் பொருட்களை அதிகம் உட்கொள்வதே தவறான உணவு முறை என நாம் பொதுவாகக் கருதினாலும் அதிகமாக உப்பை உட்கொள்வதும் அதில் சேர்த்தியே.
உப்பை அதிகம் சேர்த்தால் தாகம் அதிகமாகும். தாகம் அதிகமாதால் இனிப்புள்ள பானங்களை அடிக்கடி அருந்துவம் எடை அதிகரிப்பிற்கு ஒரு காரணமாகிறது. முக்கியமாக குழந்தைகள் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி சாப்பிடுகிறார்கள். இவற்றில் உப்பு அதிகம். இதனால் ஏற்படும்தாகத்தைத் தணிக்க மென் பானங்களையும் இனிப்புள்ள ஜீஸ் வகைகளையம் குடிக்கிறார்கள். இதானால் எடை அதிகரித்து குழந்தைகள் குண்டாகிறார்கள்.
‘இவன் சாப்பிடுறதே இல்லை ஆனால் குண்டாகிறான்’ என அம்மாமார் சொல்வதுண்டு. அதற்கான காரணம் இப்பொழுது புரிகிறது அல்லவா?
இரைப்பை புற்றுநோய்,ஓஸ்டியோபொரோசிஸ்,சிறுநீரகக் கற்கள்,ஆஸ்த்மா பாதிப்பு தீவிரமடைதல் போன்ற பல பிரச்சனைகளுக்கும் உப்பு காரணமாக இருக்கிறது என்பதை மறக்காதீர்கள்.
மறைந்திருக்கும் உப்பு உணவுகள்
‘இவருக்கு பிரஷர் என்றபடியால் நான் உப்போ போட்டு சமைப்பதில்லை’ என்றார் ஒரு இல்லத்தரசி. அவ்வாறு சமைப்பது நல்லதா கூடாதா என்பதையிட்டு பிறகு பார்க்கலாம்.
ஆனால் அவள் உப்பு போடாவிட்டாலும் கூட வேறு பல வழிகளில் அதீத உப்பு வேறு உணவுகள் வழியாக அவரையும் எங்களையும் சென்றடையும் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
இன்று உணவு என்பது முற்று முழுதாக வீட்டு உணவு அல்ல. உணவகங்களில் கிடைக்கும் உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நேர்கிறது. அவற்றில் உப்பு அதிகமாகவே இருக்கிறது.
அதற்கு மேலாக பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்ண நேர்கிறது. அவற்றில் பெரும்பாலும் உப்பின் செறிவு அதிகமாகவே இருக்கிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், ஹம்பேர்கர் போன்ற இறைச்சி வகைகள், சோஸ் வகைகள், ஊறுகாய், அச்சாறு போன்றவை அதீத உப்பிற்கு நல்ல உதாரணங்களாகும்.
ஆனால் இவற்றில் மட்டுமின்றி நாம் சந்தேகிக்காத பல உணவுகளிலும் உப்பு அதிகமாக இருக்கிறது. பாண், கேக், பிஸ்கற் போன்றவற்றைச் சொல்லலாம்.
பிள்ளைகளும் பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடும் பொட்டேட்டோ சிப்பஸ் போன்ற பெரியல் வகைகளில் நிறைய உப்பு இருக்கிறது. பக்கற்றில் கிடைக்கும் உருளைக் கிழங்கு பொரியல் மாத்திரமின்றி, மரவெள்ளி, பாகற்காய் பொரியல்கள் யாவுமே உப்புப் பாண்டங்கள்தான்.
ஓவ்வொரு ரோல்ஸ்சிலும் 230 மிகி வரையும், பிட்ஷா ஒரு துண்டில் 760 மிகி சோடியும் இருக்கிறதாம். பற்றிஸ், சமோசா, மிக்ஸர் போன்றவை சற்றும் குறைந்தவை அல்ல.
போத்தலில் அடைக்கப்பட்ட மினரல் வோட்டர்களின் சோடியச் செறிவு அதிகம் இருக்கலாம்.
சில வகை மருந்துகளிலும் சோடியம் அதிகமாக உண்டு. அஸ்பிரின், பரசிற்றமோல் போன்ற மருந்துகள் கரையக் கூடிய மருந்துகளாகக் கிடைக்கின்றன. சோடியம் பை கார்பனேட் சேர்ப்பதாலேயே அவை கரையக் கூடிய தன்மையைப் பெறுகின்றன. இவற்றில் சிலதில் உள்ள சோடியமானது ¼ தேக்கரண்டி உப்பின் அளவிற்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரின் தினசரி உப்பு உட்கொள்வு ஒரு தேக்கரண்டியளவே இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வலிக்கு பொதுவாக உட்கொள்ளபப்டும் டைகுளோபெனிக் மருந்தில் சோடியும் (Diclofenac Na) உள்ளது. இதனால்தான் வலி மாத்திரைகளை அளவு கணக்கின்றி உபயோகிக்கும் நோயாளிகளுக்கு பிரஷர் நோய் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்கள் பொதுவாக பழவகைகளையும் காய்கறிகளையும் உணவில் அதிகம் சேர்க்கச் சொல்வார்கள். இதற்குக் காரணம் அவற்றில் உள்ள நார்ப்பொருளாகும். அவை உணவு உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துவதால் நீரிழிவு அதிகரிக்காதிருக்க உதவுவதுடன் எடை அதிகரிப்பையும் குறைக்கும் என்பதாலாகும்.
ஆனால் பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்களிகளிலுள்ள கனிமமான பொட்டாசியமானது, உப்பில் உள்ள சோடியத்தின் பாதிப்பை குறைக்கும் என்பதையும் வலியுறுத்தலாம். எனவே உணவில் பழவகைகளை அதிகம் சேருங்கள்.
குருதியில் உப்பு குறைதல்
குருதியில் உப்பு குறைதலை மருத்துவத்தில் (Hyponatremia) என்பார்கள். ஆனால் இது உணவில் உப்பைக் குறைப்பதால் ஏற்படுவதல்ல. இருதய வழுவல், சிறுநீரக வழுவல், ஈரல் சிதைவு, தைரோயிட் குறைபாடு போன்ற நோய்களால் ஏற்படும். கடுமையான வயிற்றோட்டம் வாந்தி போன்றவற்றால் நீரிழப்பு நிலை ஏற்படுவதாலும் இது ஏற்படலாம். இவை மருத்துவர்களால் உடனடியாக அணுக வேண்டிய பிரச்சனைகள் ஆகும்.
இருந்தபோதும் உணவில் உப்பின் தினசரி அளவை 1.5 கிராம் அளவிற்கு கீழ் குறைப்பது நீரிழிவு இருதய வழுவல் சிறுநீரக வழுவல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்லதல்ல என அண்மைய மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. இறுதியாக…உணவில் உப்பைக் குறையுங்கள்.ஒருவரது தினசரி உப்புத் தேவை ஒரு தேக்கரண்டிக்கு மேற்படக் கூடாது. உப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட மற்றும் கடை உணவுகளை ஒதுக்குங்கள்.
உப்பைக் குறைப்பது நல்லது. ஆனால் முற்று முழுதாக உப்பில்லாத உணவு அவசியமல்ல.
பழவகைளை உணவுகள் அதிகம் சேருங்கள். பொதுவாக பலதரப்பட்ட போசாக்குகளும் அடங்கிய சமச்சீரான உணவுகள் (Balanced food) ஆக உட்கொள்வது நல்வாழ்வற்கு உகந்தது: நன்றி: ஹாய் நலமா
டாக்டர்.எம்.கே.முருகானந்தன்MBBS(Cey) DFM (Col) FCGP (col) குடும்ப மருத்துவர்
1,298 total views, 6 views today