மன அழுத்தம் தொலைந்து போக வாசிப்பே மருந்தாகும்!
அருகிப் போகும் வாசிப்புப் பழக்கம்
முன்பெல்லாம் புத்தகம் வாங்குவது தீபாவளிக்குப் புத்தாடை எடுப்பதை விட அதிக சிலிர்ப்பூட்டக் கூடிய விஷயம். ஒரு புத்தகத்துக்காகக் காசு சேமிப்பது மாதாந்திர இலட்சியம்.
நினைவுகளைக் கொஞ்சம் சுழற்றிப் பார்க்கிறேன். எங்கள் கிராமத்திலிருந்து பக்கத்தில் உள்ள மார்த்தாண்டம் எனும் நகரத்துக்குச் சென்று தான் புத்தகம் வாங்க வேண்டும். சுமார் ஏழு கிலோமீட்டர் பஸ் பயணம். புத்தகத்துக்காகக் சேமித்து வைத்திருக்கும் காசை எடுத்துக் கொண்டு, நகரத்துப் போய் புத்தகம் வாங்கி, உடனே பிரித்து அதன் வாசனை நுகர்ந்து, பேருந்து நிலையத்தில் வசதியாய்ச் சாய்ந்து நின்று வாசிக்க ஆரம்பிப்பேன். பல வேளைகளில் ஊர் வந்து சேரும் முன்பாகவே புத்தகம் வாசிக்கப்பட்டு விடும். புத்தகம் வாங்கக் காசு குறைந்துவிட்டால் பஸ் பயணம் என்பது நடைபயணமாகிவிடும்.
ஒரு புத்தக வாசிப்பு தருகின்ற இன்பம் அளவிட முடியாதது. நூலின், அச்சடிக்கப்பட்ட முதல் எழுத்து முதல், கடைசி பக்கத்தின் கடைசி எழுத்துவரை வாசிக்கும்போது, பசுமையான மலைச்சரிவில் புல் மேய்ந்து திரியும் ஆட்டுக் கூட்டத்தைப் போல மனம் உற்சாகமிடும். வேர்க்கடலை பொதிந்து தரும் காகிதம் முதல், கதவடைக்கும் வரை வாசிக்கும் கல்லூரியின் லைப்ரரி வரை மனதுக்குள் ஏதோ ஒரு காட்சியை வரைந்து கொண்டே இருக்கும்.
வாசிப்புகளின் மீது வசீகரப் பிரியம் வைத்த கடந்த தலைமுறை பாக்கியம் செய்தது. செழுமையான இலக்கியங்களிலும், தகவல் களஞ்சியங்களிலும் மனம் தனது ரசனைகளை விதைத்துக் கொண்டே இருந்தது. சவ்வூடு பரவல் போல கையோடு நூல்கள் இல்லாத கல்லூரி காலங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆறாவது விரலைப் போல கரங்களில் நூல்கள் தொங்காத பயணங்கள் குதிரைக் கொம்பு போல காணக் கிடைக்காதவை.
ஒவ்வொரு புத்தகத்தையும் திறந்தவுடன் ஒரு மிகப்பெரிய மாளிகையின் கிரில் கதவு கிரீச் என திறந்து கொள்கிறது. அதன் பக்கங்கள் பறக்கப் பறக்க மாளிகை நோக்கி கால்கள் ஓடுகின்ற. மாளிகையின் அறைகளெங்கும் மர்மங்களும், சுவாரஸ்யங்களும், வலிகளும் மௌனத்தின் சத்தத்தில் முனகிக் கொண்டிருக்கின்றன. எந்த மனநிலையில் வாசிக்கிறோமோ அந்த மனநிலைக்கு ஏற்ப மாளிகையிலிருந்து பூதங்களோ, தேவதைகளோ புறப்பட்டு வருகின்றனர். எல்லா அறைகளின் மர்ம முடிச்சுகளையும் அவிழ்த்து முடித்தக் களைப்பில் பின் வாசல் வழியாக வெளியேறும் போது நினைவுகளின் பள்ளத்தாக்குகளில் ஆயிரக்கணக்கான மாளிகைகள் முளைத்துக் கிளம்புகின்றன.
ஒரு நூல் என்பது ஒரு நூல் அல்ல ! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நூல் ! ஒவ்வொருவரும் தங்களது வாழ்வியல் அனுபவத்தில் அந்த நூலைப் பொருத்திப் பார்க்கின்றனர். அதனால் தான் சிலரை வசீகரிக்கும் நூல், சிலரால் நிராகரிக்கப்படும். சிலரை ஊக்கப்படுத்தும் நூல், சிலரைச் சலனப்படுத்துவதில்லை. நூல் என்பது வெறும் எழுத்துகள் சொல்லும் செய்தியல்ல. எழுதப்பட்ட எழுத்துக்கள் நமது வாழ்வின் வலிகளோடு கடந்து செல்லும் போது உருவாகின்ற தடங்கள். அந்தத் தடங்களின் அழுத்தமே நூலின் மீதான தாக்கத்தை உறுதி செய்கிறது.
இப்படி வாழ்வில் மிகப்பெரிய ஒரு தோழனாக, வசீகரமாக இருந்த வாசிப்புப் பழக்கம் இன்றைக்கு கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறிவிட்டது. வாழ்க்கை நம்மை அவசரத்தின் பிள்ளைகளாக உருமாற்றியதால், நிதானத்தின் வாரிசான வாசிப்புப் பழக்கமானது புறக்கணிப்பின் பின்வாசல் வழியே வெளியேறிவிட்டது.
அவசர யுகம் எல்லாவற்றையும் உடனடியாக முடிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. முன்பெல்லாம் நானூறு பக்கம், ஐநூறு பக்கம் என நீண்டு விரிந்த வரலாற்று நாவல்கள் அறைகளை ஆக்கிரமித்திருந்தன. வேப்பமர நிழல்களும், புளியமர வேர்களும் கிராமத்து வாசகசாலைகளாய் இருந்தன. நாவல்கள் வாசிக்கும் பொறுமை இன்றைக்கு இல்லை. அரைபக்கக் கதைகளைப் படித்து முடிப்பதே பெரிய விஷயம் போலப் பாவிக்கும் தலைமுறை வந்து விட்டது. இன்றைய வாசகர்கள் நாவலை வாசித்து காட்சிகளை தங்கள் மனவெளிகளில் உருவாக்க விரும்புவதில்லை. நேரடியாக காட்சிகளை தங்கள் மூளையில் இறக்குமதி செய்யவே விரும்புகிறார்கள். அங்கே கற்பனை கதவடைப்பு செய்கிறது. புகைப்படங்கள் தஞ்சமடைகின்றன.
இரவின் கும்மிருட்டுகளை இப்போது ஸ்மார்ட்போனின்
வெளிச்சத் திரைகள் தான் கிழித்துக் கொண்டிருக்கின்றன.
வி{வல் உலகம் வாசிப்பு உலகத்தை ஒரே வெட்டில் வீழ்த்தி முன்னேறிவிட்டது. எழுத்து உலகம் என்பது மீம்ஸ்களின் மடியில் தலைசாய்த்து உறங்குகிறது. அவசர மீம்ஸ்களுக்குச் சிரித்து, நான்குவரி தத்துவத்தில் சிலாகித்து, டிக் டாக் வீடியோக்களில் மனம் மகிழ்ந்து மக்களின் நேரம் முடிந்து விடுகிறது. விடிய விடிய உட்கார்ந்து நாவல் வாசித்த காலங்கள் மலையேறிவிட்டன. இரவின் கும்மிருட்டுகளை இப்போது ஸ்மார்ட்போனின் வெளிச்சத் திரைகள் தான் கிழித்துக் கொண்டிருக்கின்றன.
வாசிப்பு குறைந்து போவதற்கு வாசகனின் ரசனை இடம் மாறியதைப் போல, எழுத்தாளனின் தரம் தடம் மாறியதும் ஒரு காரணம் எனலாம். தமிழின் சுவையைப் பந்திவைக்கும் எந்த நூல்களும் இப்போது வருவதில்லை. அத்தி பூத்தார்ப் போல வருகின்ற சில நூல்கள் தவிர்த்து ! அறிவுரைச் சாட்டையைச் சுழற்றும் நூல்களை மக்கள் விரும்புவதில்லை. தன்னம்பிக்கை என்று சொல்லி பக்கம் பக்கமாகப் பாடம் எடுக்கும் கட்டுரைகள் கயலான் கடைக்கு அனுப்பப்படுகின்றன. ரசனையை இடம் மாற்றிய வாசகனின் எல்லைக்குள் எழுத்தாளன் நுழைய வேண்டிய காலம் வந்துவிட்டது.
மீன்கள் நதிமாறி விட்டால், தூண்டில்காரன் மட்டும் பழைய இடத்தில் இருப்பதில் எந்த பயனும் இல்லை. அவனும் தனது தூண்டிலை புது தளங்களுக்குள் நகர்த்த வேண்டும். அவனும் தனது வலைகளை புதிய குளங்களில் விரிக்க வேண்டும். அவனும் தனது உத்திகளையோ, பத்திகளையோ கவனிக்க வேண்டும். காலம் காலமாக ரசனைகள் மாறுகின்றன. வாசகன் மாறுகிறான். அதை எழுத்தாளர்களும் உணர வேண்டும்.
பண்டில் பண்டிலாக வாங்கிப் படித்த நிலையை விட்டு, கிண்டில் காலத்தில் நுழையும் வாசகனுக்கு ஏற்ப எழுத்தாளனும் மாற வேண்டும். டிஜிடல் திரைகளுக்கு ஏற்ப தமிழின் நூல் கட்டமைப்புகள் மாற வேண்டும். ஓலைச்சுவடி காலத்தில் நெருக்கியடித்த செய்யுள்கள் பல்லாயிரம் ஆண்டு கடந்தும் வாசனை வீசுகின்றன. காகிதக் காலத்தில் விசாலமான பரப்புக்கு இடம்பெயர்ந்த இலக்கியம் நூற்றாண்டுகள் கடந்தும் வசீகரிக்கின்றன. டிஜிடல் வெளியில் நுழைகின்ற தமிழும் காலங்களைத் தாண்டி கவனிக்கப்பட வேண்டும் !
எழுத்தாளர்கள் வாசகனின் ஆதர்ஷ பிம்பங்கள். ஒளவை என்றதும் எழுகின்ற அன்பொழுகும் மரியாதைக்குக் காரணம் அவரது எழுத்துகள் மட்டுமல்ல, அவரது இயல்புகளும் தான். கம்பன் என்றதும் எழுதின்ற பிரமிப்புக்கு அவரது எழுத்துகள் மட்டுமா காரணம். வள்ளுவர் என்றதும் எழுகின்ற பெருமைக்கு அவரது எழுத்து மட்டுமா காரணம் ? இல்லை. அவர்களது வாழ்க்கையும், இயல்புகளும் மிக முக்கிய காரணம். ஒரு எழுத்தாளன் தனது படைப்புகளில் போலித்தனம் காட்டும்போது அந்த படைப்பு வலுவிழந்து விடுகின்றது.
சாதீய வெறியில் ஊறிப்போன ஒருவன், சாதி மறுப்பு சார்ந்த படைப்பை உருவாக்கும் போது அது கேலிக்கூத்தாகிவிடுகிறது. படைப்பு என்பது படைப்பாளி முகம் பார்க்கும் கண்ணாடியாய் இருக்க வேண்டும். அல்லது படைப்பாளியின் கண்மூலமாக உலகைப் பார்க்கும் முயற்சியாக இருக்க வேண்டும். தண்ணி அடித்துக் கொண்டே, மதுவைத் தீண்டாதே என்பது இலக்கியவாதியையும், இலக்கியத்தையும் ஒரு சேர புறக்கணிக்க வைக்கும்.
வாசிப்பு, குழந்தைகளின் கவனத்தையும் கல்வியையும் சீராக்கும் என பல்வேறு ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அவர்களுடைய வாழ்க்கை செழுமையாக இருக்க வேண்டுமெனில், அவர்களுடைய சிந்தனை கூர்மையாக இருக்க வேண்டுமெனில் வாசிப்பு தேவை என்பதை ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அவர்களை காட்சி ஊடகங்களிடம் விற்று விடாமல், வாசிப்பு வனத்துக்குள் உலவ விட வேண்டியது நமது கடமையாகும் !
வாசிப்பை நேசிக்கும் எவருக்கும் மன அழுத்தம் எளிதில் வருவதில்லை. வருகின்ற மன அழுத்தத்தை ஒரு நூலை வாசிப்பதன் மூலம் எளிதில் தூக்கி எறியமுடியும். வாசிப்பை நேசிப்பவர்கள் எப்போதுமே தனிமையாய் உணர்வதேயில்லை. அவர்களோடு பயணிக்க கதாபாத்திரங்கள் ஆயிரமாயிரம் உண்டு. வந்தியத்தேவனின் வார்த்தைகளோ, கோபல்ல புரத்து வீடுகளோ அவனோடு எப்போதும் கதை பேசிக்கொண்டே இருக்கும். எந்தத் தலைமுறையும் உதறிவிடக் கூடாத உன்னதமான ஒரு விஷயம் வாசிப்பு.
வாசிக்கும் தளம் மாறுபடலாம். ஐபேட்களோ, கிண்டில்களோ, ஐபுக் களோ புத்தகத்தின் வடிவத்தை மாற்றலாம். ஆனால் வாசிக்கும் பழக்கத்தை நாம் அழித்துவிடக் கூடாது. வாசிப்பு அழியும்போது மனிதனின் சிந்தனையும், கற்பனையும் உடைபடுகின்றன. அவன் இலக்கிய வாசனையிலிருந்து, இயந்திர வாசனைக்குள் விழுந்து விடுகிறான்.
வாசிப்பை நேசிப்போம்,
அருகி வரும் வாசிப்பை அருகில் வரவைப்போம்!
1,610 total views, 3 views today