திருமந்திரப் பாடல்களில் பரிபாசை – மறைபொருள் கூற்று (2)
திருமூலநாயனாரின் பரிபாசை அதாவது மறைபொருள் கூற்றுக்கு உதாரணமாக பின்வரும் திருமந்திரப் பாடல் எண் 2122 ஐயும் பார்ப்போமானால்
“காயப்பை ஒன்று சரக்கு பல உள
மாயப்பை ஒன்றுஉண்டு மற்றுமோர் பைஉண்டு
காயப்பைக்குள் நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணாய் மயங்கியவாறே”
உடம்பாகிய இந்தக் கோணிப்பைக்குள் பலவகையான சரக்குகள் (எலும்பு, சதை, இரத்தம், அல்லது ஆணவம், சினம் என்னும் குணங்கள்) உள்ளன. இந்தப் பைக்குள் இன்னொரு பை (மாயப்பை – கண்ணுக்குப் புலப்படாது மறைந்திருக்கும் வினைப்பை) உள்ளது. மற்றுமோர் பை (மனம், உணர்வு முதலியனவற்றைக் கருவியாகக் கொண்டு உடம்பை இயக்கும் பை). இந்த உடம்பாகிய பைக்குள் இருக்கின்ற கள்வனாகிய உயிர் புறப்பட்டுப் போய்விட்டால், காயப்பையும், மாயப்பையும், மண்ணில் கலந்து மறைந்துவிடும்.
விழலுக்கு நீர்ப்பாச்ச நினையாதீர் எனக் கூறும் பாடல் எண் 2873
“ஏற்றம் இரண்டுஉள ஏழு துரவுள
மூத்தாள் இறைக்க இளையாள் படுத்தநீர்
பாத்தியில் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்ததோர் கோழிப் புள்ளாமே”
இப்பாடலின் கருத்தை மேலோட்டமாகப் பார்த்தால் ஏழு கிணற்றில் இருந்து இரண்டு ஏற்றங்கள் வளியாக மூத்தவள் கீழிறக்க, இளையவள் மேல் ஏற்றிய நீரை பாத்தியில் பாய விடாது பாழ் நிலத்தில் பாச்சுவது விலை மகள் வளர்த்த கோழிக் குஞ்சு போலாகும் எனத்தான் இப்பாடலின் பொருளை நாம் கொள்வோம். ஆனால் திருமூலரின் எண்ணம் வேறுவிதமாக இருந்தது. அதாவது மறைபொருளாக இப்பாடலின் பொருள் ஏற்றம் இரண்டு என்பது வலப்பக்கநாடி, இடப்பக்கநாடி வழியாக வந்து போகும் மூச்சு. ஏழு துரவு (கிணறு) என்பது மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, ஆகிய ஆறு ஆதாரங்களுடன் உச்சித் தொளையாகிய சகஸ்ரதளமும் சேர்ந்து ஏழாகும். மூத்தாள் இறைக்க என்பது மூத்தவளான இடப்பக்க நாடியான சந்திரகலை வழியாக மூச்சை உள்இழுக்கும் மூச்சு. இளையாள் படுத்தநீர் என்பது இளையவள் என்று சொல்லப்பட்ட வலப்பக்க நாடியான பிங்கலை (சூரியகலை) வழியாக வெளிவரும் மூச்சு. இரண்டும் நடு நாடியாகிய பாத்தியில் பொருந்தி (பாய்ந்து) நிற்கச் செய்யாமல் அதாவது பூரகம் (உள்ளுக்கு இழுத்தல்), இரேசகம் (வெளி விடுதல்), கும்பகம் (அடக்குதல்) வீணாக வெளியேறச் செய்வார்களானால் இது பாழ் நிலத்தில் பாச்சும் நீர் போலாகும். இது விலைமகள் வளர்த்த கோழிக்குஞ்சு போல காம இச்சைக்குப் பலியாகிக் கலங்கி நிற்கும். அதாவது உயிர்த் துணையாக நின்று உதவாது என்பது கருத்து.
ஞான உழவு நன்செய் விளைவு எனக் கூறும் பாடல் எண் 2872
“மூவனை ஏரு உழுவது முக்காணி
தாமணி கோலி தறிஉறப் பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவில் செறுஉழார்
கால்அணை கோலிக் களர் உழுவாரே”
இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று மூன்றின் வழி இயங்கும் பிராணன் என்னும் உயிர் மூச்சு ஏர் ஆக, முக்கோண வடிவாக உள்ள மூலாதாரமாகிய நிலத்தில் உழவு நடைபெறும். உழுதபிறகு, முதுகுத் தண்டான கயிற்றால் கட்டப்பட்டு, சுழுமுனையில் நினைவு பொருந்த சிவ உணர்வில் திளைத்து, நாக்குக்கு மேல் தொண்டைக் குழிக்குள், சிவானந்த தேனமுதம் விளையும் ஞானத் தவம் செய்ய முடியாதவர்கள், மூச்சினை அடக்கி மோனத்தவம் என்னும் களர் நிலத்தை (விளையாத களிமண் நிலத்தை) உழுது பயிர் விளைவிக்க முயலுவோர் ஆவர்.
பால் தராது பட்டிப் பசு எனக் கூறும் பாடல் எண் 2874
“பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுஉள
குட்டிப் பசுக்கள் ஓர்ஏழுள ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே”
மேய்ப்பவர் இன்றித் திரியும் பட்டிப் பசுக்கள் (பால் கறக்காத பசு, பட்டிமாடு) இருபத்து நாலு என்பது ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கையும், குட்டிப் பசுக்கள் ஏழும், ஐந்தும் என்பது வித்தியா தத்துவம் ஏழும், சிவ தத்துவம் ஐந்துமாகும். குட்டிப் பசுக்கள் குடம் குடமாகப் பால் சொரிந்தாலும் ஒரு பயனும் இல்லாத வறட்டுப் பசுவே ஆன்மாவுக்கு அமைந்தது. சீவாத்துமாக்கள் பால் தரும் குட்டிப் பசுவைத் தேடாமல், புறநாட்டம் என்னும் பட்டிப் பசுவை (பால் தராத வறட்டுப் பசுவை) கட்டி அழுவதைக் கேலி செய்யும் மந்திரம் இது.
ஆன்ம்ப் பசுவை அலைய விடாதீர் எனக் கூறும் பாடல் எண் 2875
“ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுள
ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்து
மாற்றுப் பசுக்கள்வரவு அறியோமே”
ஈற்றுப் பசுக்கள் (பால்வற்றிப் போன பசுக்கள், பால் தராத பசுக்கள்) இருபத்து நான்கு உள்ளன என்பது ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கைக் குறிக்கின்றன. ஆனால் ஆன்மாவிற்குப் பால் ஊறும் பசுக்கள் தரும் ஒரு குடம் பாலே போதுமானது. என்பது ஊற்றுப் போல ஒளி வீசும் சிவ தத்துவத்தைக் குறிக்கிறது. இது தெரியாமல் காற்றுப் பசுக்களாகிய இடப்பக்கம், வலப்பக்கம் மூக்கு வழியாக வந்து போகும் காற்றைச் சுவாசித்து வாழும் காலத்தில் (உலகில் வாழும் போது) மாற்றுப் பசுக்களான புலனிச்சைகள் நம்மில் பொருந்த, நாம் அதன் வழிச்சென்று, வாழ்வைப் பாழாக்கிக் கொள்வதை உணராமல் இருக்கின்றோமே! அறியாமை அல்லவா இது? என்பது குறிப்பு.
சீவனுக்குரிய இடம் சிவதளம் எனக் கூறும் பாடல் எண் 2876
“தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மடிந்திட்டுத்
தட்டான் தனைத் தகைந்து கொண்டானே”
உயிர் (சீவன், தட்டான்) உள்ளத்துள் பொருந்த இடம் தருவது உடம்பு. இதன் உச்சியில் மேலே (மச்சு, வீட்டின் உயர்ந்த இடம்) அதாவது உச்சித் தலையில் (ஆயிரம் இதழ் தாமரை சகஸ்ரதளம்) செழுமையான, சிவந்த மொட்டுப்போல் தோன்றி, மலர்ந்து வட்ட வடிவமாக “ஓம்” என்னும் பிரணவ ஒளியாகி, நமசிவாய என்னும் மெய்யான ஐந்தெழுத்தோடு கலந்து, அதனைத் தன்னிடமாகக் கொண்டுவிட்டது.
2,185 total views, 9 views today