வெயிலிலுக்குள்; சென்றால் கறுத்து விடுவோம் என ஓடி ஒளிகிறோம்!
வெயிலோடு உறவாடி விளையாடி மகிழ்வோம்
-கரிணி
………………………………………………………………..
கோடையை தவற விட்டவர் கோல் ஊன்றியே தீருவர் என்பார்கள். மனிதன் வலுவிழந்து போகையிலே கோலூன்ற வேண்டியுள்ளது. ஆம் மனிதன் மட்டுமல்ல அத்தனை உயிர் தோற்றத்திற்கும் ஆதார சக்தியாக சூரியனே விளங்குகிறது. பஞ்ச பூதங்களை செயற்படுத்துவதும் சூரியனே.
பலதரப்பட்ட இன மக்கள் ஒன்று கூடும் இடத்தில் அவர்களின் இயல்பை உற்று நோக்குகையில் அதிக நகைச்சுவை உணர்வும், எலும்பு மற்றும் உடல் வலுவுடனும் பிறரோடு அதிக சிரிப்பொலியை பரவ விட்டுக் கொண்டிருப்பவர் யார் என உற்றுப் பார்த்தால் அது பெரும்பாலும் கறுப்பினத்தவராக இருப்பார்கள். அதற்காக அவர்களுக்கு கோபம் வராது என்று பொருள் அல்ல. அதிகமாக இந்த மகிழ்வான மனநிலை யாருக்குத்தான் பிடிக்காது? அவ்வாறு மகிழ்ந்திருக்க என்ன வழி?.
ஆம் வழி உண்டு. ஏப்போதும் ஏதோ இழந்த மனநிலையா? உளச் சோர்வா? பலவீனமா? மனச்சிதைவா? பலதரப்பட்ட வியாதிகளா? என்றும் நாடி நலம் பெற வேண்டிய ஒரே இடம் சூரிய ஒளி. ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் பண்டைக் காலம் தொட்டு கண்டுகொண்ட உண்மை
யோகக் கலையில் எத்தனையோ நலந்தரும் பயிற்சிகள் இருப்பினும் சூரிய வணக்கமே முதன்மை பெறுகிறது. பாடசாலைகளில் காலையில் இறைவணக்கம், உடற்பயிற்சி என்பன சூரிய இள வெயிலிலேயே இடம்பெறும். புதிதாக பிறந்த குழந்தையைக்கூட பலம் பெற வேண்டுமென எண்ணெய் பூசி சூரிய இளவெயிலில் படுக்க வைப்பார்கள். உடல் மற்றும் உளம் சார்ந்த செயற்பாடுகளில் சூரிய பங்களிப்பே ஆதாரம் என்று கூற முடியும். உடலின் உள்ள ஹார்மோன்களை செயற்படுத்த மூளைக்கு சூரிய சக்தி தேவைப்படுகிறது. ஹார்மோன்கள் செயற்படாவிடில் உடலியக்கம் நடைபெறாது. இதனால்தான் மரபுவழி ஆயுர்வேத மருத்துவத்தில் உடற்கழிவுகளை அகற்றி உடலை புதிய ஆற்றலுடன் செயற்பட வைக்க சூரியக் குளியலை வலியுறுத்துகின்றனர்.
இன்றைய காலத்தில் விளம்பர நாகரிகம் மேலோங்கி சூரிய ஒளி பற்றிய பயத்தை மக்கள் மத்தியில் பரவவிட்டு மேற்பூச்சு களிம்புகளையும், தலைமுதல் கால்வரை மூடுவதற்கு கவசங்களையும் விற்பனை செய்கின்றனர். ஏறினால் கார் இறங்கினால் அலுவலகம் அல்லது வீடு எனவும் அந்த வீட்டினை கூட சூரிய ஒளி புகாதபடி இருட்டாகவும் பகலிலும் மின்குமிழ்கள், குளிரூட்டிகள் எனவும் உடலின் ஆதார சக்தியோடு விளையாடத் தொடங்கி அதன் வினைகளை பெறத் தொடங்கி விட்டனர். ஆரோக்கிய விடயத்தில் நேரடியான சூரிய ஒளியின் முக்கியத்துவத்தையும், அதனை பெறமுடியாது போகும் நிலையில் ஏற்படும் பெரும் விளைவுகளையும் பார்ப்போம்.
நிழலில் வளரும் தாவரங்கள் எவ்வாறு சோபையிழந்து காணப்படுமோ அதேபோல் சூரிய வெயிலற்ற உடல் நலிவடைந்து மாயும்.
செரட்டோனின் (serotonin) எனப்படும் ஹார்மோன் தான் எமக்கு மகிழ்வைத் தருகின்றது. அது சூரிய ஒளி எந்தளவிற்கு பெற்றுக் கொள்கிறதோ அந்தளவிற்கே மூளையிலிருந்து உற்பத்தியாகிறது. மற்றும் பகல் வெளிச்சத்தில் சக்தி பெற்று கரிய இரவு நேர ஆழ்ந்த தூக்கத்தில் மெலட்டோனின் (melatonin) எனும் ஹார்மோன் சுரக்கிறது. இவை ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதியில் பெரும் பங்கு வகிப்பவை. இப்போது புரிந்திருக்கும் கறுப்பினத்தவர்களின் சூரிய ஒளி வாழ்வும், மகிழ்வும்.
உடலுக்கு உணவு முக்கியம் இருப்பினும் அந்த உணவை சூரிய ஒளியே உற்பத்தி செய்கிறது. மற்றும் மேலதிகமாக தேவையான வைட்டமின் டி சூரிய ஒளியிலிருந்து இலவசமாக கிடைக்கின்றது. எலும்புகள் பலம் பெறுவதற்கு கல்சியத்தின் செயற்பாட்டிற்கு இந்த சூரிய ஒளியே பிரதானமாக உள்ளது. குறிப்பிட்ட காலங்கள் சூரிய ஒளியிலிருந்து மறைந்து வாழ்ந்தால் எலும்புகள் நெகிழ்வடைந்து நொருங்கி உடையும். வெறுமனே சூரிய ஒளி என்பதை விட அதன் இள வெப்பநிலையோடு கூடிய நேரடி ஒளி உடலில் பட வேண்டும். அப்போதுதான் உடல் நன்கு சக்தியை உள்ளுறிஞ்சும். கடும் மதிய வெயில் தவிர காலை மற்றும் மாலை வெயிலில் உடலில் களிம்புகள் எதுவும் பூசாமல் நேரடியாக ஒளி படுமாறு பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். சூரிய ஒளி பற்றாக்குறையால் நுரையீரல், கணையம், சிறுநீரகம், நரம்புமண்டலம், எலும்புத்தொகுதி என உடலின் முக்கிய அவையங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. தீய செல்கள் உருவாகுவதை சூரிய ஒளி தடுக்கிறது. இதன் பற்றாக்குறை உடலில் ஆபத்தான கட்டிகள், மாரடைப்பு, என்புருக்கி, பூஞ்சைத்தொற்று, தோல்நோய்கள், உடற்பருமன், மூட்டுவலி, கைகால்குடைச்சல், இதயநோய், நீரிழிவு, முடிஉதிர்வு, மனவிரக்தி என நீங்கள் இன்று வீணே மருந்துகள் உட்கொள்ளும் மிக நீண்டு செல்லும் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றது. எனவேதான் சூரிய வெப்பம் குறைந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் வெயில் காலத்தை தவற விடுவதில்லை. அந்த கோடை காலத்தில் உடலில் சேர்த்துக் கொள்ளப்படும் சக்தியே குளிர்காலத்தில் உதவிபுரியும். இன்றைய கணிப்பில் பத்திற்கு ஏழு நபர்கள் சூரிய வெப்ப ஒளிசக்தி பற்றாக்குறையால் நோயுறுகின்றனர். இந்த ஆய்வின்படி போதிய வெப்பமான நாடான இந்தியாவிலும் வைட்டமின் டி பற்றாக்குறையானவர்களே அதிகம். இளவெயிலில் உலவ மறப்பவர்களை இவை இலகுவில் தாக்குகின்றன.
முக்கிய குறிப்பாக வெள்ளையர்களுக்கு தினமும் இருபது நிமிடங்கள் சூரிய ஒளி போதுமானது. குளிர் காலங்களில் ஒரு மணி நேரம் தேவை. மாநிறம் மற்றும் கருமை நிறம் கொண்டவர்களுக்கு கோடை காலத்தில் ஒரு மணி நேரமும், குளிர் காலத்தில் இரண்டு மணி நேரமும் நேரடியான சூரிய ஒளி தேவைப்படுகிறது. இந்த வேறுபாட்டிற்கு காரணம் கருமை நிறமான தோல் அதிக சூரிய வெப்ப வலயங்களில் உள்ளபோது கடும் வெயிலின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான மெலனின் மேலடுக்குகளால் ஆனது. எனவே அதனால் ஒளிசக்தியை கிரகிப்பதற்கு தாமதமாகிறது.
நண்பகலில் கடும் வெயிலில் உலவும் போது தலைக்கு நேரடியாக வெயில் தாக்குவதை தவிர்க்க வேண்டும். அந்நேரங்களில் அதிக குளுக்கோஸ் மற்றும் நீரிழப்பு ஏற்படுவதால் அடிக்கடி இயற்கையான பானங்கள் அருந்த வேண்டும். குளுக்கோஸ் இழப்பை சூரிய வெப்பம் செய்வதால் நீரிழிவு நோயாளர்கள் தகுந்த பாதுகாப்புடன் சூரிய ஒளியில் நன்கு உலவுவது நலம் தரும். காலையில் சூரிய உதயம் தொடங்கி பத்து மணிவரை நேரடியாக உடலில் வெயில் படும்படி உலாவலாம். மாலை மூன்றரை மணிக்கு பின்னர் வெயிலில் உலாவலாம். சூடு அற்ற மிகவும் இளம் காலை உதய சூரியனை சில நிமிடங்கள் கண்களால் நேரடியாக பார்த்து வருவதன் மூலம் கண்கள் மிக்க ஆற்றல் பெறும் எனவும், காலை சூரியன் அறிவு மற்றும் ஆற்றலையும், மாலைச் சூரியன் அழகினையும் சேர்க்கும் எனவும் கூறுவார்கள்.
வெயிலில் சென்றால் கறுத்து விடுவோம் என ஓடி ஒளியாது உள் உறுப்புகள் எல்லாம் சிறந்து விளங்க வேண்டுமென சிந்தித்து செயற்பட வேண்டும். வெயிலில் உங்கள் நேரம் செலவிடப்படவில்லை எனில். உங்களை பராமரிப்பதற்கு இன்னொருவருக்கு உங்கள் மூலதனம் அனைத்தையும் செலவிட வேண்டியிருக்கும்.
ஞாயிறே நலமே வாழ்க!
1,356 total views, 6 views today