நிழலும் நிழலும் தீண்டுவதற்கும் வெளிச்சம் வேண்டும்

நின்னை சரணடைந்தேன் -24

— கலாசூரி திவ்யா சுஜேன்

பாரதி இவ்வுலகை சக்தியின் லீலையாகக் காண்கிறார். லீலை இவ்வுலகு என்றும், இவ்வுலகு இனிது என்றும் திரும்பத் திரும்பச் சொல்வதில் மகிழ்ச்சி உற்றார். இதுவே வாழ்வின் மந்திரம் என்பதை பாரதி பக்தர் நன்கு அறிவர்.
பாரதியின் மொழி , உடலும் உடலும் உரசிக்கொள்வதை சொல்ல முனையவில்லை. நிழலும் நிழலும் தீண்டுவதற்கும் வெளிச்சம் வேண்டும் என்ற சூட்சுமத்தை சொல்கிறது.
பாரதியின் வசனகவிக்குள் கண்களை புதைத்தால் புரியும், புதைந்தது நம் கண்கள் அல்ல , ஆழ்மனம் என்று. உள்ளத்தை ஊற்றி ஒரு வரி படித்தாலே போதும், அவன் கவித்தட்டில் எம்மை ஏற்றி வியனுலகு காட்டுவான்.
மந்திரக்காரன் அல்ல, தந்திரம் செய்து எம்மை வசியம் செய்வதும் அவன் நோக்கம் அல்ல. நம் எந்திரியங்களை வென்றிட சூத்திரம் சொல்கிறான். பத்திரமாய் படிப்பவரே பாத்திரம் ஆவர். அவன் உண்மைக்குடிலுக்குள் அகப்பட்டு சுதந்திரமாவர்.

அசைகின்ற இலையும், ஆற்றிலிட்ட கல்லின் சலனமும் , ஓடுகின்ற மேகமும் , இசைகின்ற காற்றும், மழையும், மாலையும், காலை சூரியனும் , மலையின் தொடரும் , குளிர் நிலவும், சிட்டு குருவியும், குழந்தையின் சிரிப்பும், மலரும் மொட்டும் இன்னும் இன்னும் என உலகத்து விந்தை யாவிலும் கலையின் விம்பத்தைக் காண்பவன் கலைஞன். .அவன் கண்களின் பார்வையில் முப்பரிமாணக் காட்சி இருக்கும். இன்னும் சிலர்க்கு பல பரிமாணங்கள் தோன்றும். அவனின் ஒற்றை பார்வைக்குள் ஒளிந்துள்ள விடயங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் கூட சாதாரண மக்களின் அறியாமை அறிவுக்கு இருக்காது. அணுவிலும் நுண்ணிய அவன் நெஞ்சம் அகிலம் முழுவதிலும் கலை அம்சத்தைக் காண்கிறது , உள்ளம் தெளிந்திட, உடல் வலிமை பெற்றிட, வாழ்க்கை அமைதி கண்டிட , எதிலும் பேரின்பம் விளைய , படைப்பின் அருளை கணம் தோறும் உணர கலைஞானத்தை துடுப்பாக்கி , ஜீவ நதியைக் கடக்க முயல்கிறான். அந்த வகையில் வாழ்வின் நூதனத்தை சொல்லும் போதும் கலையை சம்பந்தப்படுத்தவல்ல மதிநுட்பம் நம் பாரதியிடத்து இருப்பதில் ஆச்சர்யம் இல்லை. அதனால் அவனோடு இசை இரண்டறக் கலந்து விடுகிறது.

“பாம்பு பிடாரன் குழலூதுகிறான்.
குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா ?
பாம்பு பிடாரன் மூச்சிலே பிறந்ததா ?”

இப்படி ஓர் கேள்வி எழுப்பிகிறார். அதற்கு என்ன பதில் கூறுகிறார் பார்ப்போம்.
“அவன் உள்ளத்திலே பிறந்தது;குழலிலே வெளிப்பட்டது ;
உள்ளம் தனியே ஒலிக்காது; குழல் தனியே இசைபுரியாது.
உள்ளம் குழலிலே ஒட்டாது. உள்ளம் மூச்சிலே ஒட்டும்.
மூச்சு குழலிலே ஒட்டும் ; குழல் பாடும்.
இது சக்தியின் லீலை.”

ஆஹா ! என்ன அற்புதமான விளக்கம். ஆக, உள்ளத்தையும், குழலையும் இணைக்க மூன்றாவதாக ஒரு சாதனம் தேவைப்படுகிறது. அது தான் மூச்சு என்னும் சக்தி. இப்படித்தான் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைக்க ஒரு குரு தேவைப்படுகிறது.
உயிரற்ற கருவியை உயிருள்ள இசையாக மாற்ற கூடிய வல்லமை ஓர் கலைஞனிடத்தே உண்டு. அப்பேற்பட்ட கலைஞனை கடவுளின் உருவமாய் காண்கிறோம்.
” அவள் உள்ளத்திலே பாடுகிறாள்; அது குழலின் தொளையிலே கேட்கிறது “.
உயிர்ப்பான கலையை வெளிப்படுத்தவல்ல எந்த ஒரு கலைஞனின் உள்ளத்திலும் இறைவன் குடிகொண்டிருக்கிறார்.
உள்ளத்தின் வழியே தான் கலையின் ரசம் பிறக்கிறது. உள்ளத்திற்கோர் ஊறு விளைந்தால் கலையின் இருப்பிடத்தை இருள் கவ்விக்கொள்ளும் ( நிழலும் நிழலும் தீண்டுவதற்கும் வெளிச்சம் வேண்டும்.)
வெறும் புலன் இன்பத்தில் உடலும் உடலும் உரசும் யௌவன காட்சிகளை கண்விழித்திப் பார்ப்போருக்கு தெரியுமா உயிரும் உயிரும் தீண்டிக்கொண்டால் பிறக்கும் கலையின் ஆழம் ?
இந்த வசனகவியின் அடுத்து வரும் வரிகளை ஆழ்ந்து கவனியுங்கள்.

“தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்கு கத்துகின்றன
பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும்
யார் சுருதி சேர்த்து விட்டது ?”

பிடாரன் குழலுக்கும், பிச்சைக்கு அழும் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்? பல்வேறுபட்ட முரண்பாடுகளுக்குள் வாழ்க்கை சிக்கி இருப்பதாய் சில சமயங்களில் எண்ணத் தோன்றும். ஒரே குடும்பத்தில் இருந்தாலும் எண்ணங்கள் செய்கைகளில் எண்ணற்ற வேறுபாடு இருப்பதைக் கூட காண்போம். ஒத்த கருத்துள்ள உள்ளங்களை மட்டுமல்ல , ஒவ்வாது என்று கருதுபவற்றையும் சேர்த்து வைப்பதும் இந்த படைப்பின் லீலை தான் என்று பாரதி கூறுகிறார்.

” பொருந்தாத பொருள்களைப் பொருத்திவைத்து அதிலே
இசையுண்டாக்குதல் – சக்தி “

பாம்பு பிடாரன் குழல் ஊதுகிறான்; பிள்ளைகள் பிச்சைக்கு கத்துகின்றனர்; அதே சமயம் ஜரிகை வேணும் ஜரிகை! என்று ஒருவன் கத்திக்கொண்டு போகிறான் . யாவும் ஒரே சுருதியில் இருக்கிறது. அங்கே அகக்கண் திறக்கிறது. உட்பொருளைக் கண்டு கொள்கிறார் பாரதி.

“ஆ ! பொருள் கண்டு கொண்டேன் .
பிடாரன் உயிரிலும் , தொம்பக் குழந்தைகளின் உயிரிலும், ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகிறது.
கருவி பல , பாணன் ஒருவன்
தோற்றம் பல , சக்தி ஒன்று.
அது வாழ்க !”
எல்லா உயிர்களும் சமம் என்று எண்ணினால் , முரண்பாடுகளை தவிர்த்த வசந்த வாழ்க்கையை அனுபவிக்கலாம்.
ஏதோ பாம்பு பிடாரனின் குழல் பற்றி சொல்லும் கவிதை என்று மேலோட்டமாகப் பார்த்து விட்டு சென்றால், அக்கவியில் மறை பொருளாய் பொதிந்துள்ள உண்மை விளக்கம் கிட்டாது. இப்படித் தான் பல சமயங்களில் எம் அறியாமை தலைக்கு மேல் நின்று தாண்டவம் ஆடும் போது எல்லாவற்றையும் மேலோட்டமாக கண்டு உணர்ச்சிவசப்பட்டுவிடுகிறோம். அதன் விளைவு எமது உடலுக்கும் உள்ளத்திற்கும் எப்பேர்ப்பட்ட பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று ஒரு பொழுதும் கவனிக்கவும் மாட்டோம். இந்த உடல் உள கவனத்தை இலகுவில் ஏற்படுத்தி தரவல்ல அரும் சாதனம் கலைகள். கலைஞனின் அழகியல் உலகம் என்பது வினோத சித்திரம். விபரிக்க விபரிக்க முடிவிலியாய் தோன்றும் விந்தை .
வீட்டுக்கொரு கலைஞன் இருந்தால் வீடுபேறுக்கு வழியுண்டு. கலையெனும் காற்றை மூச்சாக்கி சக்தி கொள்வோம். சக்தியின் லீலைக்குள் மீண்டும் சரணடைவோம்.

1,519 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *