திருக் கூத்து (திரு நடனம்) -52


(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

சிவன், “சிவாயநம“ என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு உயிர்களின் பிறவித்துயர் நீங்குவதற்காகவும், உலக இயக்கம் ஒழுங்குற நடைபெறவும் நடராஜர் ரூபத்தில் ஆடும் நடனங்கள் திருக் கூத்து (திரு நடனம்) எனப் போற்றப்படுகின்றன. தென் இந்தியாவில், (தமிழ் நாடு) ஐந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகியவற்றைக் குறித்து ஆடிய இடங்கள் பஞ்ச சபைகள் (ஐம் பெரும் சபைகள்) எனவும், ஆடிய நடனங்கள் தாண்டவம் எனவும் அழைக்கப்படுகின்றன. மேலும் திரு அதிகை, திருவிற்குடி, திருக்கோவலூர், திருக்கொறுக்கை, திருக்கடவூர், திருப்பறியலூர், வழுவூர், கண்டியூர் ஆகிய எட்டு வீரட்டத்தலங்களிலும் ஆடியவையுடன் அறுசமயக் கூத்து உட்பட பல நடனங்களை இறைவன் ஆடிக்கொண்டிருக்கின்றான்.

  1. இறைவன் “ஆனந்த தாண்டவம்” (வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி) ஆடிய சிதம்பரம் திருமூலட்டநாதர் ஆலய நடராஜர் சன்னிதியே பொற்சபை (பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம்) ஆகும். இத் திருநடனத்தை கண்டுகளித்தவர்கள் பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர் ஆகியோர்.

இந்த நடனம் பற்றி திருமந்திரம் பாடல் 2722
“எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவன்அருள் தன் விளையாட்டதே”

சிவபெருமானுக்குத் திருமேனி, சிவசக்தி. விண்ணும் மண்ணும் என எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது சிவசக்தி சொரூபமே. எனவே காணும் இடமெல்லாம் சிவசக்தி தோற்றம். எங்கும் சிவசக்தி ஆனதால் எல்லா இடமும் சிதம்பரமே. எங்கும் இறைவன் திருநடனமே. இப்படி எங்கும் சிவசொரூபமாக இருப்பதால் எங்கும் எல்லாவற்றிலும் பொருந்தியிருக்கும் சிவபெருமான் தன் அருள் விளையாட்டு (திருநடனம்) படைத்தல், காத்தல், அருளல், அழித்தல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலுமே அத்திருக்கூத்து. சிதம்பரம், இறைவன் ஓயாது நடனமாடிக்கொண்டிருக்கும் இடம் இருதயஸ்தானம் என்றும் கூறுவர்.
மேலும் திருமந்திரம் பாடல் எண் 2743 இல்
“மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொன் கூத்தனை யார் உரைப்பாரே”

மாணிக்க மணி ஒளி போல, ஒளி வடிவாக நடமிடும் நாதனை, வளம் மிக்க பேரம்பலமாகத் திகழும் தில்லைப் பொன்னம்பலத்தே திருநடனம் புரிபவனை, விரிசடைகளாட விளங்கும் வேதாந்தக் கூத்தனை, எட்டத்தே உள்ள வெட்ட வெளி ஆகாசத்தில், விரிசடைகளாட ஆனந்த நடனமிடும் அண்ணலை, உயர்ந்த பொன்போல ஒளிநடம் புரிபவனை யார் அறிவார்?. அவன் பெருமையை யார் அளவிட்டுச் சொல்ல இயலும்?.
மேலும் திருமந்திரம் பாடல் 2723
“சிற் பரஞ்சோதி சிவானந்தக் கூத்தனைச்
சொற் பதமாம் அந்தச்சுந்தரக் கூத்தனைப்
பொற்பதிக் கூத்தனை பொன்தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார் அறிவாரே”

ஞானத்திரு உருவாகவும், சோதி ஒளி வடிவாகவும் உள்ள சிவப்பரம்பொருள், அருள் விளையாட்டாக ஐந்தொழிலும் புரிவதுபோல, உலக இயக்கம் ஒழுங்குற நடைபெற ஐவகைக் கூத்தினையும் நிகழ்த்துகின்றான். அவை சிவானந்தத்தைச் சீவன்களுக்கு அருளும் கூத்து. சொல்லும் பொருளாக உள்ள “ஓம்” எனும் பிரணவ ஒலியில் விளங்கும் அழகியல் கூத்து. பொற்பதியாகிய சித்தாகாசத்தில் விளங்கும் கூத்து. பொன்னம்பலமான தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடும் அம்பலப் பரவெளிக் கூத்து. ஆருயிர்கள் எல்லாம் கண்டு களித்து இன்புற ஆடும் அற்புதமான ஆனந்த நடனம் என்னும் நடனங்களாகும். இப்படி மன்றிலும், மனதிலும், வெளியிலும், ஒளியிலும், உயிரிலும் கலந்து நடனமிடும் கூத்தன், சிவப்பரம்பொருளின் அளப்பரிய ஆற்றலை அறிந்துணர யாரால் இயலும்?.
மேலும் திருமந்திரப் பாடல் எண் 2740 இல்
“அடியார் அரன்அடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தர் அருள் உற்றோர்
அடி ஆர்பவரே அடியவர் ஆமால்
அடியார் பொன்னம்பலத்து ஆடல் கண்டாரே”

சிவபெருமான் திருவருளால், அவன் திருவடிப்பேறு பெற்றவர்களே, சிவானந்தம் அடைந்தவர்களே, சிவனடியார் ஆவர். சிவனுக்கே அடிமையாகி, சிவனருள் பெற்றவர்களே சிவனடியார் எனப்படும் மெய்யடியார் ஆவர். மேலும் சிவபெருமான் திருவடி இன்பத்தை எண்ணி, அதையே இடையறாது சிந்தித்திருப்பவர்களே சிவனருள் பெற்ற சீலர் ஆவர். இவர்களே இறைவன் பொன்னம்பலத்தில் ஆடும் திருநடனம் கண்டு களிக்கும் பேறு பெற்றவராவார்.
மேலும் திருமந்திரப் பாடல் 2790 இல்
“இருவரும் காண எழில் அம்பலத்தே
உருவோடு அருவோடு ஒரு ரூபாரூபமாய்த்
திருவருட் சத்திக்குள் சித்தா னந்தன்
அருளுருவாக நின்று ஆடல் உற்றானே”

பதஞ்சலி, புலிக்காலுடைய வியாக்கிர பாதர் என்னும் இரு தவமுனிவர்களும் காணத் தில்லைச் சிற்றம்பலத்தே திருநடனம் புரிந்தருளினான் சிவப் பரம்பொருள். உருவமாயும், அருவமாயும் உள்ள இறைவன், திருவருள் சக்தியாகிய உமையின் மனத்துள்ளே மகிழ்ச்சியை விளைக்கின்ற சித்தானந்த சிவமூர்த்தி, அம்பலத்தில் அருவடிவாக நின்று திருநடம் புரிகின்றான்.

  1. இறைவன் “திரிபுர தாண்டவம்” (வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி) ஆடிய குற்றாலம் குற்றாலநாதர் ஆலய நடராஜர் சன்னிதியே சித்திர சபை (சித்திர அம்பலம், சித்திர மன்றம்) ஆகும். இத் திரு நடனத்தை கண்டுகளித்தவர் பிரம்மதேவன்.
  2. இறைவன் “ஊர்த்துவ தாண்டவம்” (வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி) ஆடிய, திருவாலங்காட்டில் உள்ள ஆலய நடராஜர் சன்னிதியே இரத்தின சபை (இரத்தின அம்பலம், மணி மன்றம்) ஆகும். இத் திரு நடனத்தை கண்டுகளித்தவர் காரைக்கால் அம்மையார்.
  3. இறைவன் “சந்தியா தாண்டவம்” (இடதுகாலை ஊன்றி, வலது காலைத் தூக்கி) ஆடிய மதுரையில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய நடராஜர் சன்னிதியே வெள்ளி சபை (வெள்ளியம்பலம், வெள்ளி மன்றம்) ஆகும். இத் திருநடனத்தையும் கண்டுகளித்தவர்கள் பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர் ஆகியோர்.
  4. இறைவன் “திருத்தாண்டவம்” (வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி) ஆடிய திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சந்தன சபாபதி ஆலய நடராஜர் சன்னிதியே தாமிர சபை (தாமிர அம்பலம், தாமிர மன்றம்) ஆகும்.

3,222 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *