குறி
தண்டனை…
குற்றம் நிரூபிக்கப்பட்டது
குற்றவாளிகள் தவித்தார்கள்
மரண தண்டனையா?
ஆயுள் தண்டனையா?
பத்திரிகைகள் அடித்துக் கொண்டன
நீதிபதி பார்த்தார்
நிறைய யோசித்தார்
சாகும்வரை வாழவேண்டும்
என்று தீர்ப்பு வழங்கினார்!
அவசரம்…
மா இனிக்கும் என்றேன்
வார்த்தையை முடிக்கமுன்பே
மா புளிக்கும் என்றான் அவன்
விவாதம் சூடுபிடித்தது
கூட்டமும் கூடிவிட்டது
இரண்டாய் பிரிந்து ஏத்திவிட்டது
என் கூடையில் மாம்பழமும்
அவன் கூடையில் மாங்காயும்
அமைதியாய் ஓய்வெடுத்தன!
நாம்…
ஒரு மாடு
ஒரு வண்டி
இரண்டு மனிதர்கள்
சுற்றிலும் ஒரே இருட்டு
ஒருத்தன் வடக்கே என்றான்
அடுத்தவன் கிழக்கே என்றான்
ஒருத்தன் மாட்டை ஓட்டிச்சென்றான்
அடுத்தவன் வண்டியை ஓட்டிச்சென்றான்
சூரியன் தென்மேற்கில் சிரித்தது!
பழிக்குப்பழி…
குழந்தை கதவில்
அடித்துக் கொண்டது
ஓவென்று கத்தியது
அம்மா வந்தார்
கதவை ஓங்கி அடித்தார்
மெல்லச் சிரித்தார்
குழந்தை சிரித்தது
இப்படித்தான் குழந்தை
செய்முறையுடன்
பாடம் படித்தது!
கருணை…
கடவுளே உனக்கு கண்ணில்லையா?
என்று கதறினான் வியாபாரி
அப்படீன்னா என்ன கடவுளே?
என்றான்…
அதைக்கேட்ட குருடன்!
— தமிழினி பாலசுந்தரி – நியூசிலாந்து
1,433 total views, 3 views today