உன்னைப்போல் ஒருவர்

பரந்து விரிந்த இவ்வுலகில் அணுக்கள், கலங்கள், உடற்பிண்டம் என ஆன உருவில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கும் உடலும், விரிந்து சுருங்கிக் கொண்டிருக்கும் மனமும் ஒருபோதும் இன்னொன்றுடன் ஒன்று ஒப்பிட முடியாதவை. யாரும் யாரைப் போலவும் பிரதிபலிக்கவும் முடியாது. தனிதன்மையுடன் திகழ்கிறது படைப்பின் பேராற்றல்.
நான் என்பது ஆணவமல்ல. அது ஒரு மகத்தான படைப்பின் தனிப்பட்ட அடையாளம். நானே பெரிது என்பதே ஆணவம். ஏனெனில் படைப்பில் அனைத்தும் பொதுவானதே. தன்னைப் போன்ற ஒரு பிரதி வேறெங்கும் இல்லை. அதனை எந்த விஞ்ஞானத்தாலும் ஒருபோதும் உருவாக்கவும் முடியாது. இதனை பணிவாக ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். எனவே நான் என்ற தனித்துவமான ஒன்று தன்னால் இயன்றளவு தன்னைப் பிரதிபலிக்க வேண்டும். அப்போதுதான் முற்றுமுழுதான ஒளிரூட்டம் பெற முடியும். சுய ஒளியை பிரகாசமாக ஒளிரவிடத்தொடங்கி தன் தன்மையை விரிவாக்கிக் கொள்ள முடியும்.
பயம் என்பது எங்கு முடிகிறதோ அங்கு வாழ்வு ஆரம்பமாகிறது. பயமானது சக்தி வெளிப்பாட்டை, ஆற்றலை சுருக்கி இடைவெளிகளை ஏற்படுத்துகிறது. அங்கே வேண்டத்தகாத விடயங்கள் உள் நுழைகின்றன.
தன்வீட்டு செல்லப் பிராணி நாய் இறந்துவிட்டால் கூட கொல்லைப்புறத்தில் புதைப்பவர்கள். தன் குடும்ப உறுப்பினர் இறந்து விட்டால் அந்த உடலை வீட்டு வளாகத்தில் புதைக்க பயம் கொள்ளுவார்கள். சடங்குகள் முடிந்தபின்பு இறந்தவர் பெயரில் பீதி அடைவார்கள். இது அனைவருக்குமே பொருந்துமா என்றால் இல்லை. தன்னைத்தானே உணர்ந்த, தன் இயல்பை பிரகாசிக்க செய்த, படைப்பில் எல்லாம் சமம் என்று ஏற்றுக்கொண்டதொரு மெஞ்ஞானி சமாதியடைந்துவிட்டால் எந்தவொரு தயக்கமுமின்றி அவரது இடத்திலேயே புதைக்கப்படுகிறார். அது மட்டுமன்றி பயமின்றி பிறரால் வணங்கப்படுகிறார். இவ்வாறான பற்பல விடயங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தன் உருவாக்கத்தின் சிறப்பை உணர்ந்த எவரும் தன்னைப்பற்றி தாழ்வுமனப்பான்மை அடைவதில்லை. உடல் ஊனமுள்ளவர் கூட உயிரோட்டத்துடன் செயற்பட முடிந்தால் அவரும் பேராற்றல் மிக்கவரே. ஒப்பிடுதலை விட்டுவிட்டாலொழிய தன் சிறப்பை எவராலும் உணர முடியாது.
இயற்கையின் படைப்பில் எந்தவொரு விடயமும் ஒரே மாதிரியாக படைக்கப்படவில்லை உதாரணமாக ஒரு மரத்தின் இலைகள் கூட ஒவ்வொன்றும் தனித்தன்மையுடனேயே படைக்கப்பட்டுள்ளது. ஒன்று போல் மற்றொன்று அமைவதேயில்லை. இயற்கையிடம் படைப்பாற்றலுக்கு சிறிதளவும் பஞ்சமிருப்பதில்லை. ஒரு மனிதனைப் போல் இன்னொருவர் இருந்ததுமில்லை, இருக்கப் போவதுமில்லை. இதுவே படைப்பின் சிறப்பு
சுயத்தை போலியாக மாற்றுவது தற்கொலைக்கு சமன். இங்கு தன்னுடைய தன்மை இழக்கப்படுகிறது. அவரவருக்கு அவரவர் இயல்பே சிறப்பம்சமாகும். தத்தமது தனித்தன்மையை மதித்து மெருகூட்ட வேண்டும். ஒருவரை பார்த்து அவரை போல் பிரதிபலிக்க ஆசைப்படுவது அப்படி உருவாக வழிகாட்டுவது, திணிக்கப்படுவது என்பது தவறான வழிகாட்டலாகும். சிறுவயது முதல் தத்தமது தனித்தன்மையை ஊக்குவித்து தட்டிக் கொடுக்க வேண்டும். இதற்கு பிறர் உதவி நாடப்படலாம். ஆனால் பிறர் அவர்களை மடைமாற்றம் செய்வதோ, அவர்களை ஒரு பொம்மைகளாக ஒரு இயந்திரத்தனத்தோடு உருவாக்குவதோ அவர்கள் ஆற்றலை உறிஞ்சுவதற்கான ஈனச் செயல். பொது விடயங்களை அறிந்து கொள்ளவும், தம்மில் உள்ள நல்ல விடயங்களை வளர்க்கவும் பிறரைத் துணை கொண்டோ அல்லது புற மற்றும் அகச்சூழல் கொண்டோ பயனடைவதில் தவறில்லை.
தன் தனித்துவமான இயல்பை உணர சுய விசாரணை முக்கியம். தன்னை பற்றி சிறிதளவாவது தான் தெரிந்திருக்க வேண்டும். இன்று பிறரை பற்றி ஆராய்வதிலேயை காலங்கள் கடந்துவிடுகின்றன. “உன்னை நீ அறி” என்பதே இதன் அடிப்படை விதியாகும். அதற்கு சுதந்திரமான சூழலில் வாழ்தல் மிக மிக முக்கியம். அல்லது கிடைத்த சூழலில் தன்வயமாகிடல் வேண்டும்.
விடுதலையையும், சுதந்திரத்தையும் ஒவ்வொரு ஜீவனும் விரும்புகின்றன. அவை கிடைக்காதவிடத்து சுதந்திர தாகம் அனைத்து ஜீவனுக்கும் உண்டு. ஒவ்வொரு ஜீவனும் தனது இனத்துடன் சேர்ந்து இயற்கையுடன் ஒன்றித்து சுதந்திரமாக வாழவே விரும்புகின்றன. தன் இயல்பில் வாழவே உள்ளூர ஏங்குகின்றன.
ஒவ்வொரு மனிதனும் தன்னிடமுள்ள பேராற்றலை உணர, அனுபவிக்க, பயன்படுத்த தொடங்கி விட்டாலே மற்றவர் மீதுள்ள மோகங்கள் குறைந்து தன்னைத்தானே நேசிக்க தொடங்கி விடுவார்கள். அந்த நேசிப்பும், தம் ஆற்றலை பயன்படுத்தும் விதமும் தன் மகத்துவத்தை உணர வழி வகுக்கும். அது மட்டுமல்ல அதே தனித்துவத்துடன் படைக்கப்பட்டுள்ள பிற ஜீவன்கள் மேல் மதிப்பு உருவாகும். அவற்றின் வாழும் உரிமையில் குறுக்கிடாது வழிவிடும், வாழ விடும். இதுவே தனித்துவம் நிறைந்த ஆற்றல் நிறைந்த வாழ்வு.
உன்னைப் போன்றவர் வேறெங்கும் இல்லை. இருந்ததுமில்லை, இருக்கப் போவதும் இல்லை. இல்லவே இல்லை. இருந்தால் அது நீயே! உன்னைப்போல் ஒருவர் அது நீயே.
-கரிணி