நின்னைச் சரணடைந்தேன் -25
உங்கள் நல் வாழ்வுக்கு
பாரதி தரும் வெகுமதிகள்
தமிழ்ச் சுவை பருகியோர் கண்களில் காவடி ஆடாமல் இருந்திருக்காது காவடி சிந்து பாடல்கள். அத்தனை நயமும் , அழகும் கொட்டிக் கிடந்தாலும் ,இலக்கியத் தரத்தை எட்ட வைக்கும் அளவு உட்கருத்தும் சொல்லாட்சியும் மிளிரும் வகையில் சிந்து பாடலுக்கு உயிர் கொடுக்கிறார் பாரதி. மிக பிரமாண்டத்தில் நர்த்தனமாடுகிறது பாரதியின் காவடி சிந்து.
அத்வைதம் ஃ ஒருமை என்னும் மாபெரும் சக்தி உணர்வை மீண்டும் மீண்டும் தன் கவிகளினூடு பெரும் கருணையோடு சொல்ல முற்பட்ட தத்துவக் கவிஞன் பாரதி. அந்த சுத்த நிலையில் பாரதி வாழ்ந்தான் என்பதற்கு அக்கவிகளில் தென்படும் அனுபவச் சொல்லாட்சியே சாட்சி.
ஒருமைப் பொருளை நன்கு ஆராய்ந்து உணர்த்தவர்க்கு, என்னெவெல்லாம் வெகுமதியாக வாழ்வில் கிடைக்கும் என்று பட்டியல் இட்டு சொல்கிறார்.
- துயர் தீரும்
எந்த ஒரு விடயத்தை எடுத்தாலும் அதில் உள்ள இருமை நிலையினால் பல பேதமைகளுக்குள் சிக்கி கொள்கிறோம். இதனால் பல்வேறு முரண்பாடுகளை எதிர் கொள்கிறோம். இந்த பேதமை என்னும் பேய் அல்லது முரண்பாடு என்னும் புலப்படா பூதம் எம்மை துயரம் என்னும் பேரிருளில் தள்ளிவிடுகிறது. எனவே முரண்பாட்டினை தவிர்க்க பேதமை அகல வேண்டும். அதற்க்கு யாவும் ஒன்று என்ற அறிவு வேண்டும். - பரம ஞானம் கிட்டும்.
மேற் சொன்ன இந்த அறிவு தான் பரம ஞானம் என்று மிக எளிதாக ஞான நிலைக்கு வரைவிலக்கணம் சொல்கிறார். - நீதியாம் அரசு செய்வர்
முறை தவறாத நல்ல வழியில் அரசு செய்வார்கள். அதாவது தமது உடல் , உளம், மனம், புத்தி, வாக்கு , செயல் யாவும் ஒன்றுக்கொன்று முரண்படாத வகையில் ஐம்புலன்களையும் சீரான விதத்தில் ஆட்சிசெய்வர். - நீண்ட காலம் வாழ்வர்
இதில் இரண்டு விடயங்களை கருதலாம். ஒன்று இவ்வாறு உடலும் உள்ளமும் சம நிலையில் இயங்கும் போது இயற்கையாகவே பல்லாண்டுகளுக்கு ஆரோக்கியமாக வாழ்வர். இதனால் நீண்ட ஆயுள் கிட்டும். இரண்டாவது இத்தகை பரம ஞானத்தோடு வாழ்ந்தோர் பெருமை, அவர்கள் இவ்வுலகை விட்டு நீக்கினாலும் வாழ்ந்துகொண்டு இருக்கும். - எந்த நெறியும் எய்துவர்
மேற்குறிப்பிட்ட நான்கு படிகளையும் மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள். அவற்றை எல்லாம் நாம் அடைந்து விட்டதாக கருதும் போதே நமக்குள் சக்தி பிறக்கும். உண்மையிலேயே அந்த நிலையை அடைந்து விட்டால் ? நிச்சயமாக நமக்கு என்ன வேண்டும் என்று நினைக்கின்றோமோ அதனை நினைத்த மாத்திரத்திலேயே அடையலாம். அதில் எந்த விதமான ஐயமும் இல்லை என்று ஐயன் பாரதி தன் பல கவிகளில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்நிலையை எய்த வேண்டுமானால் நம்மிடத்தே இருக்க வேண்டிய ஒரே தன்மை என்னவென்றால் ? ” சரணடைதல் ” . நான் என்று ஒரு பொருள் இல்லை என படைப்பினடத்தே சரணடைந்து ஐக்கியமாகும் சுகானுபவம். இதனை அடைய ஆதாரமாக சக்தியின் பாதங்களில் அடைக்கலமாவோம். இதுவே ஒரே வழி என மிக மிக அற்புதமான காவடி சிந்து பாடலின் முடிவில் கூறி நிற்கிறார்.
ஆக, பட்டியலிட்ட ஐந்தும் கிடைக்க , ஒருமையை ஆய்ந்து அறிந்துணர வேண்டும் , அதற்க்கு அன்னையை சரணடைவதே ஏக மார்க்கம்.
தான் அனுபவித்த மொத்த சுகத்தையும் பரந்த மனதுடன் செறிந்த சொல்லாட்சியில் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் மொழிபெயர்க்கும் வல்லமை பாரதியிடத்தே உண்டு. ஆதியான சிவனும், ஜோதியான சக்தியும் ஒன்றாய் கலந்து அங்கும் இங்கும் எங்கும் என வியாபித்திருக்கும் காட்சியைச் சொல்ல , சொற்களின் நர்தனத்தில் உணர்வின் வேகத்தை புரிய வைக்க, . எப்பேர்ப்பட்ட ஆழ்ந்த அனுபவம் இருந்திருக்க வேண்டும் நம் பக்குவச் சித்தன் பாரதிக்கு என மீண்டும் மீண்டும் வியந்து, காவடி சிந்து பாடலை நவராத்திரி காலத்தில் நம் வெற்றிமணி வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள துணை நின்ற பரம்பொருளினடத்தே சரணடைகிறேன்.
ஆதியாம் சிவனும், அவன் சோதியான சக்தியும் தான்
அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் – ஒன்றே
ஆகினால், உலகனைத்தும் சாகும் – அவை
அன்றியோர் பொருளுமில்லை, அன்றி ஒன்றுமில்லை, இதை,
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் – இந்த
அறிவுதான் பரம ஞானம் ஆகும்
நீதியாம் அரசு செய்வர், நிதிகள் பல கோடி துய்ப்பர்.
நீண்டகாலம் வா ழ்வர் தரை மீது – எந்த
நெறியும் எய்துவர் நினைத்த போது – அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெரும் காளி பதம்,
நீழல் அடைந்தார்க்கு இல்லையோர் தீது – என்று
நேர்மை வேதம் சொல்லும் வழி ஈது.
— திவ்யா சுஜேன்
2,051 total views, 6 views today