எழுத வேண்டுமென எழுதுவோர்
எழுத்து ! மனித வரலாற்றின் மாபெரும் அடையாளம். எழுத்து தான் இணைக்கிறது, எழுத்து தான் இயக்குகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய குகைகளில் காணப்படும் ஓவிய எழுத்துகள் அன்றைய வாழ்வியலை இன்றைக்கு நமக்குப் புரிய வைக்கிறது. எழுத்துகள் உருவாகும் முன்பே ஓவியத்தின் வழியாக வாழ்க்கையை அடுத்தடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்து வைத்தவர்கள் நம் முன்னோர்கள். எழுத வேண்டும் ! எனும் தாகம் அவர்களிடம் இருந்தது.
ஓவியக் காலம் கல்வெட்டுகளின் காலத்தை நோக்கி நகர்ந்தது. அப்போது எழுத்துகளின் வடிவங்கள் கலாச்சாரத்தையும், மொழியையும், வாழ்வியலையும் ஒரு சேர அடுத்த காலத்துக்கு அறிவித்தன. கல்வெட்டுகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பழமையின் நீட்சி இன்றைக்குத் தெரியாமலேயே போயிருக்கும். இதை எழுதவேண்டும், நேரமெடுத்து, உழைப்பைக் கொடுத்து, தேர்ந்தெடுத்த செய்திகளைப் பதிவு செய்ய வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள். எழுத வேண்டும் ! எனும் உத்வேகம் அவர்களிடம் இருந்தது.
ஓலைகளின் காலத்துக்கு கல்வெட்டுகள் இடம் பெயர்ந்தபோது இலக்கியங்களும் கூடவே உருவாகின. வாழ்வியல் கோட்பாடுகளும், சமயம் சார்ந்த, நன்னெறி சார்ந்த பதிவுகளும் உருவாகின. வருகின்ற தலைமுறையும், வாழ்கின்ற தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டுமெனும் சித்தாந்தங்களும் அப்போது தான் உருவாகின. எழுதவேண்டும் ! எனும் தேவை அவர்களிடம் இருந்தது.
ஓலைகள் காகிதங்களாக மாறியபின் எழுத்துகள் வேகமெடுத்தன. எளிதில் எழுதிவிடலாம் எனும் வசதி பல்வேறு பதிவுகளுக்குப் பிள்ளையார் சுழி போட்டது. ஆண்டுக்கணக்கில் உட்கார்ந்து கல்வெட்டு செதுக்க வேண்டாம். மாதக்கணக்கில் உட்கார்ந்து ஓலைகளில் கிறுக்கவேண்டாம் எனும் வசதி, எழுத்துகளைச் செதுக்கும் மனநிலையை சற்றே குறைத்து விட்டது. ஓலைகளில் நான்கு வரிகள் சுமந்து வந்ததை காகிதங்கள் பல பக்கங்கள் விலாவரியாக எழுதித் தள்ளின. செய்யுளாக இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டவை காகிதத்தில் வசதியாக வரிந்து கட்டியது. எழுதவேண்டும் எனும் ஆர்வம் அவர்களிடம் இருந்தது.
எழுத்து தான் வரலாற்றின் ஈரமும், குருதியும் படிந்த யதார்த்தத்தை தலைமுறை தாண்டி புரிய வைத்தது.
எழுத்து தான் கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை பல தலைமுறை கடந்தும் புரிய வைத்தது.
எழுத்து தான் திரைகடல் ஓடிய செல்வங்களை திண்ணையில் பந்தி வைத்தது.
எழுத்து தான் இதயத்தைச் செழுமையாக்கும் நீதிநெறிகளை ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கூட நம் சிந்தனைகளில் இறக்கி வைத்தது. எழுத்து அது தான் யுகங்களை இணைக்கின்ற பாலமாய் இருக்கிறது.
எழுத்து பல்வேறு மாற்றங்களை சமூகத்தில் கொண்டு வந்திருக்கிறது. விடுதலைப் போராட்ட காலங்களில் அவை வாள்களாக வீரியம் காட்டியிருக்கின்றன. சமூக மறுமலர்ச்சிக் காலங்களில் அவை விதைகளாகி விருட்சமாகியிருந்தன.
இன்று டிஜிடல் யுகம்.
நெருக்கியடிக்கும் டவுன் பஸ் போல எழுத்துகள் சமூக வலைத்தளங்களிலும் குறுஞ்செய்திகளாகவும் பல்லாயிரம் சிறகுகளோடு பயணித்துக் கொண்டிருக்கின்ற காலம். இப்போது பெரும்பாலான மக்கள் “எல்லாரும் எழுதறாங்க, நானும் எழுதவேண்டும்” எனும் மனநிலையோடு எழுதுகின்றனர். ஒரு செய்தியைக் குறித்த புரிதல் இல்லாமல் தான் பெரும்பான்மையான பதிவுகள் வருகின்றன என்பது தான் கவலைக்குரிய விஷயம்.
யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதலாம் எனும் சூழல் இருபுறமும் கூர்மையான கத்தியைக் குழந்தையிடம் கொடுத்தது போல பதைபதைக்க வைக்கிறது. அதைக் கையாளும் விதத்தில் சேதங்கள் உருவாகின்றன. எதைவேண்டுமானாலும் எழுதலாம் எனும் சுதந்திரம் கத்தியின் முனையை மழுங்கடிக்கவும் வைக்கிறது. எழுத்துகளின் வீரியம் நீர்த்துப் போகிறது. எழுத்து என்பது எழுத வேண்டுமென எழுதுவதல்ல, எழுத வேண்டியதன் தேவையை உணர்ந்து எழுதுவது.
மூன்று விஷயங்களை நாம் சிந்திக்கலாம். முதலாவது,
ஏன் எழுதவேண்டும் ? எனும் சிந்தனை. ஒரு விஷயத்தை எழுத நினைக்கிறோம் எனில், அதை ஏன் எழுதுகிறோம் என்பதில் ஒரு புரிதல் வேண்டும். சும்மா ஒரு சாராரைச் சீண்டுவதற்காகவோ, வெறுப்பை வளர்த்துவதற்காகவோ எழுதுவது விஷத்தை நதியில் கலப்பது போன்ற விஷயம். ஒரு நல்ல செய்தியை நான்குபேர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகப் பகிர்வதே சிறப்பானதாகும். அல்லது தான் எழுதுகின்ற செய்தியானது காலங்கள் கடந்தும் கூட பயனளிப்பதாய் இருக்கும் எனும் நம்பிக்கை இருக்க வேண்டும். சட்டென காற்றில் மிதக்கின்ற ஒரு ஈசல் பூச்சியைப் போன்ற எழுத்துகளை எழுதாமல் விடுவதே நலம்.
இரண்டாவது, எதை எழுதவேண்டும் என்பது ! என்னுடைய அப்பா சின்ன வயதில் எனக்கு ஒரே ஒரு அறிவுரையைச் சொன்னார். எழுதுகின்ற எந்த ஒரு எழுத்தும் ஒரு எதிர்மறை சிந்தனையை வாசகனின் மனதில் உருவாக்கக் கூடாது என்பதே அது. பாசிடிவ் சிந்தனைகள் மட்டுமே எழுத்தில் இருக்க வேண்டும் என்றார். எதை எழுதினாலும் அந்த அறிவுரையை நான் மனதில் கொள்வதுண்டு. சமூகத்தின் ஒற்றுமையையும் அன்புறவையும் வளர்க்கின்ற விஷயங்களையும், மனிதநேயத்தை செழுமைப்படுத்தும் விஷயங்களையும் எழுத வேண்டும் என மனதில் குறித்துக் கொள்வோம்.
மூன்றாவது, எப்படி எழுதவேண்டும் என்பது ! இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தின் அடிப்படையிலானது. எவ்வளவு சுவாரஸ்யமாக ஒரு விஷயத்தைக் கொடுக்கிறோம் என்பதை வைத்து அந்த செய்தியின் வீச்சு அமைகிறது. வெற்றிமணி காலங்கள் கடந்தும் ஆலம் போல வளர்ந்து நிற்கக் காரணம் அது கொண்டு வருகின்ற செய்திகள் பயனுள்ளதாகவும், சுவையுள்ளதாகவும் இருப்பது தான்.
எழுதவேண்டும் என எழுதுவது ஆபத்தானது. நாம் எழுதவில்லை என யாரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதில்லை, அதே நேரம் எழுதியதால் யாரும் மன உளைச்சல் அடைந்து விடக் கூடாது. என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
எளிதில் எழுதலாம் என்பது நமக்கு புதிய உத்வேகத்தைத் தரலாம், ஆனால் அதுவே அலட்சியத்தைத் தந்து விடக் கூடாது. நாம் எழுதுகின்ற எழுத்துகள் எல்லாமே நமது பெயரைச் சொல்வதாக இருக்க வேண்டும். அதற்கு நாம் எழுதப் போகும் செய்திகளைக் குறித்த நல்ல புரிதல் நமக்கு இருக்க வேண்டும்.
எழுத்து ! மனுக்குலத்துக்குக் கிடைத்த ஒரு வரம் ! ஆறாவது அறிவை வெளிப்படுத்துகின்ற தளம். அந்த எழுத்தை ஏனோ தானோவென எழுதி அர்த்தத்தை இழந்து விடாதிருப்போம்.
எழுத்து! மனிதத்தையும் மனிதநேயத்தையும் கட்டி எழுப்பும் வல்லமை மிக்க கருவி. அதைக் கொண்டு வெறுப்பின் வாய்க்கால்களையோ, பிரிவினையின் பள்ளத்தாக்குகளையோ உருவாக்காதிருப்போம்.
எழுத்து ! வாழும் தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் நாம் கொடுக்கப் போகின்ற பரிசு. அதில் பயனுள்ள விஷயங்களை மட்டுமே பதிவு செய்வோம்.
எழுத்து ! எழுதவேண்டுமே என எழுதுவதற்கானதல்ல, மானுடம் எழ வேண்டுமே என்பதற்காய் எழுத வேண்டியது. அதை மனதில் கொள்வோம்.
— சேவியர்
1,520 total views, 3 views today