உண்மையிலேயே நமக்குத் தூக்கம் தேவைதானா? தூங்காமலே இருந்தால் என்ன நடக்கும்?

என்ன தான் ஒரு நாள் முழுவதும் வேலை செய்தாலும் சரி, எந்த வேலையும் இல்லாமல் சும்மாவே இருந்தாலும் சரி இரவில் எல்லோருக்கும் வருவது ஒன்றே ஒன்று தான்… தூக்கம். அப்படி தூக்கம் வந்து விட்டால், நம்மால் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கும். அப்படிக் கட்டுப்படுத்தினாலும் அடுத்த நாள நாம் பெரும்பாலும் சக்தி இல்லாமல் எப்போதும் தூங்கித் தூங்கிக் கொண்டே இருப்போம். அது சரி தானே? சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் நான் உங்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கிறேன், பதில் கூறுங்கள் பார்ப்போம். நமக்கு ஏன் தூக்கம் தேவைப் படுகின்றது? அது மட்டும் இல்லை, அப்படி ஒரு வேளை நாம் தூங்காமல் இருந்தால் நமக்கு என்ன நடக்கும்?

இதற்குப் பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு உங்களுக்கு இது தெரியுமா? ஒரு சராசரி மனிதன் தனது வாழ்நாளில் சுமார் 25 ஆண்டுகள் தூக்கத்திலேயே கழிக்கிறான். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இன்று வரை நமக்கு ஏன் தூக்கம் தேவைப்படுகின்றது என்பதற்கான விளக்கம் தெரியவில்லை. விஞ்ஞானிகளின் கணிப்புப் படி நமது மூளையின் Hypothalamus எனும் பகுதி நமக்குத் தூக்கம் கட்டாயம் வேண்டும் என உணர்த்திக்கொண்டிருக்கின்றதாம்.

Hypothalamus பகுதியில் உள்ள Supra-Chiasmatic Nucleus நமது செயல்பாடு மற்றும் நிலைமைக்கு ஏற்றவாறு ஹோர்மோன்களை வழங்கக் கூடியது. குறிப்பாக நாம் தூங்குவதற்காகவே Melatonin எனும் தூக்கம் வரவழைக்கும் இயக்குநீர் (hormone) அதிகளவில் உருவாக்கப்பட்டு, Cortisol எனப்படும் Stress hormone குறைக்கப்படும். இதுவே நாம் தூங்கி விழிப்பதற்கு இந்த இரு இயக்குநீரும் மாற்றி உருவாக்கப்படும்.

ஆனால் தூக்கத்திற்குக் காரணமாக இருப்பது இது மட்டுமில்லை. மூளையிலிருக்கும் Adenosine எனும் கூட்டுப்பொருளும் நமக்குத் தூக்கத்தை ஏற்படுத்துமாம். இது நியூரான் மற்றும் பிற செல்கள் Adenosine Triphosphate எனும் பொருளை எரிப்பதால் கிடைப்பதாகும். விஞ்ஞானிகளின் கணிப்புப்படி நமது மூளைக்குள் இந்த Adenosine இன் அளவு கூடக் கூட, நமக்குத் தூக்கமும் வருமென்று. ஆனால் நாம் தூங்கும் போது இந்த Adenosine இன் அளவு குறைந்து நமக்குக் காலையில் விழிக்கும் போது களைப்பாறியது போல் இருக்கும்.

அது சரி உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நாம் முழித்து இருக்கும் வேளைகளுடன் ஒப்பிடும்போது நாம் தூங்கும்போது 10 சதவீதம் குறைவான ஆற்றலை நமது உடல் செலவிடுகிறது. திசுக்கள் வளர, அடிபட்ட இடம் சரியாக என உடல் தன்னைத்தானே தயார் செய்துகொள்ளத் தூக்கம் தேவைப்படுகிறது. மூளைக்கும் இதேபோல் ஓய்வு தேவை. அந்த நாள் முடிவில் நடந்ததில் தேவையான நினைவுகளை மட்டுமே சேகரித்து வைக்கவும், தேவையில்லாதவற்றை மறந்துவிடவும், அடுத்த நாள் வேலைக்குத் தன்னை தயார்செய்து கொள்ளவும் என மூளைக்குரிய செயல்களைச் செய்யத் தூக்கம் தேவை. இதற்கு Brain Plasticity என்று பெயர். இதன் மூலம் பழைய விஷயங்களை ஒரு முறை நினைவுகூரவும், புதிய நினைவுகளைச் சேமித்துவைக்கவும், தேவையில்லாத விஷயங்களை நீக்கிவிடவும் மூளை தயாராகும்.

வருஷத்திற்கு சுமார் 200.000 வாகன விபத்துக்கள்

ஒவ்வொரு மனிதனும் பொதுவாக 7-8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று ஒரு அளவு இருக்கிறது. இதில் சிறுவர்கள் இதை விட அதிக நேரம் தூங்க வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் இந்த மணி நேரத்தை விடக் குறைவாகத் தான் தூங்குகின்றார்கள் என்று ஒரு கணக்கீடு இருக்கிறது. தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதற்கு ஒரு சில உதாரணங்களைச் சொல்கிறேன் கேளுங்கள். வருஷத்திற்கு சுமார் 200.000 வாகன விபத்துக்கள் தேவையான தூக்கம் கிடைக்காமல் ஓடும் ஓட்டுநர்களால் ஏற்படுகிறதாம். இது குடித்துவிட்டு மது போதையில் வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படுவதைவிட அதிகமாம்.

ஒருநாள் முழுவதும் தூங்காமல் இருந்தால் நமது மூளையின் சிந்திக்கும் திறனுக்கான பகுதிகள் பாதிக்கப்பட்டுவிடுமாம். தூங்காமல் இருந்தால் ஏற்படும் பாதிப்புகளில் உங்களின் பேச்சுத்திறன் பாதிப்பும், நினைவுகளுக்குப் பொறுப்பான பகுதிகளில் பாதிப்பும் ஏற்படுமாம். அப்படி என்றால், தூங்காமலேயே இருந்தால் இறந்துவிடுவோமா, என்று நினைக்கிறீர்களா? நண்பர்களே, உண்மை சொல்லப்போனால் அது தான் கடைசியில் நடந்துவிடும். உணவில்லாமல் நீங்கள் இருப்பதை விடத் தூக்கமில்லாமல் இருப்பதால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். இதுகுறித்து 1980ம் ஆண்டில் செய்த ஒரு ஆய்வில் சரியாகத் தூங்காமலிருந்த எலிகளின் மீது ஆய்வு செய்தனர். அவை இரு வாரங்களில் இறந்துவிட்டன.

சரி இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், இனி ஒரு மனிதனால் எவ்வளவு நாட்கள் தூங்காமல் இருக்க முடியும் என்பதைப் பார்ப்போமா? இதைக் கண்டுபிடிப்பதற்காகவே 1965ம் ஆண்டில் ஒரு 17 வயதாகிய மாணவன் முயன்றார். அந்த முயற்சியில் 264 மணி நேரங்கள் அதாவது 11 நாட்கள் தூங்காமல் இருந்து உலக சாதனையைப் படைத்தார். இந்த சாதனையைப் படைக்கும் போது, இறுதிக் கட்டத்தில் தூக்கம் போதாத காரணத்தால் அவரது மூளை சரியாக வேலை செய்யவே இல்லை. ஏனென்றால் அவரால் சரியாகச் சிந்திக்க முடியவில்லை, அவரது பார்வை மங்கிப் போய் இருந்தது, அவர் எதிர்பார்க்காமலே அவரது கண்கள் தானாகவே அசையத்தொடங்கிவிட்டன. இது எல்லாமே போதாது என்று அவருக்கு மாயத்தோற்றங்கள் கூட வரத்தொடங்கிவிட்டதாம். ஆக மொத்தத்தில் அவரது மூளை அதனது சக்தியையும் இயக்கத்தைக் கிட்டத் தட்ட இளந்துவிட்டது.

நண்பர்களே நான் உங்களிடம் வேண்டுவது ஒன்றே ஒன்று தான். தயவு செய்து நீங்களும் சாதனை செய்யும் பெயரில் இதுபோல் தூக்கம் இல்லாமல் இருந்து உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடாதீர்கள். இருந்தாலும் நான் கேட்கும் இந்தக் கேள்விக்குப் பதிலைச் சொல்லி விடுங்கள். நீங்கள் இன்று வரை தொடர்ந்து தூங்காமல் எத்தனை மணி நேரங்கள் அல்லது நாட்கள் இருந்து இருக்கின்றீர்கள்? இதற்குரிய பதிலை மட்டுமில்லாமல், எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh) பதிவுசெய்யுங்கள்

Dr.-நிரோஷன் தில்லைநாதன்

3,047 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *