திருமந்திரமும் வாழ்வியலும் – 54
குரு
மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்தே மனிதன், குரு மூலமாக, சீடர்களாக இருந்து அறிவைப் பெறும் செயல்பாடும் தொடங்கிவிட்டது. உலகியல் வாழ்க்கை நெறிகளை தாய், தந்தை, ஆசிரியர் மற்றும் பெரியோர்களின் செயல்பாட்டைப் பார்த்தும், அவர்கள் கூறும் வார்த்தைகளைக் கேட்டும், சடப் பொருட்களான இயற்கை, புத்தகம், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம், ஆகியனவற்றிற்கு ஊடாகவும் மனிதன் தனது அறிவைப் பெறுகின்றான். இந்த அறிவு சித்துப் பொருளான சிவத்தை அறிய உதவாது. சிவத்தை சிவஞானத்தால் தான் அறிய முடியும். சிவஞானம் குருவின் உபதேசத்தால் நிகழும். திருமந்திரத்தில் திருமூலநாயனார் குரு என்னும் சொல்லால் ஞானகுருவையே குறிப்பிடுகின்றார்.சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றான உமாபதி சிவாச்சாரியார் அருளிய “திருவருட்பயன்” 50 ஆவது பாடல்
“ஞானம் இவனொளிய நண்ணியிடும் நற்கல்அநல்
பானு ஒழியப் படின்“
“சூரிய ஒளி இல்லாமல் சூரியகாந்தக் கல்லில் தீ தோன்றுமானால் அருள் வழங்கும் குரு இன்றி ஆன்மாவுக்கு ஞானம் தோன்றலாம்.” அதாவது குரு இல்லாமல் உயிருக்கு ஞானம் உண்டாகாது எனக் கூறுகின்றது.
சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றான மெய்கண்ட தேவர் அருளிய “சிவஞான போதம்” எட்டாம் சூத்திரம்
“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே”
திருமந்திரம் பாடல் எண் 1581 இன் மூலம் திருமூலநாயனார் சிவப்பரம்பொருள்தான் ஞான குருநாதன் எனக் கூறுகின்றார்.
“குருவே சிவம்எனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என்பது குறித்து ஓரார்
குருவே சிவனுமாய் கோனுமாய் நிற்கும்
குருவே உரைஉணர்வு அற்றதோர் கோவே.”
சிவப்பரம்பொருள்தான் ஞானகுருநாதன் என்று சொல்லி அருளினான் நந்தியெம்பெருமான். இதை இன்னும் பலர் அறியாமல் இருக்கின்றார்களே. குருநாதன்தான் சிவப்பரம்பொருளாகவும், சீவர்களுக்கெல்லாம் மேலான தலைவனாக, உலகாட்சி செய்பவனுமாய் இருக்கின்றான். ஞானகுருநாதனான இவன் வாக்கும் மனமும் கடந்து நிற்கின்ற தலைவனுமாம்.
இதே கருத்தை கூறுகிற திருமந்திரம் பாடல் எண் 1584
“திரு ஆய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளாது அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடில் ஓர்ஒண் ணாதே”
போற்றப்படுவதாகிய தவஞானம் சித்திக்கப் பெறுவதும், பேரின்பப் பேறு பெறுவதும், இவற்றை பெற்றுவிட்ட பெருமையால், மயங்கித் திரியாது, அடங்கி இருக்கப் பெற்ற அருட் பேறும், மனமயக்கம் நீங்க, உண்மைப் பொருள் அறியும், வேதங்களின் முடிவான உபநிடதங்கள் கூறும் ஞான விளக்கங்களும், (சீவன்களுக்கு உணர்த்தத் தலைவனாகிய) இறைவன் குருவடிவம் கொண்டு வந்து உபதேசம் செய்யாவிட்டால், மானிடச் சீடர்களால் அதை அறிந்து கொள்ள முடியாது.
குருவின் தகமை பற்றி திருமந்திரம் பாடல் எண் 2058
‘சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத்தை சேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அற சுகமான சொல்
அத்தன் அருட்குருவாம் அவன் கூறலே”
சத்தான அழிவற்ற பரம்பொருள் சத்தாகவும், அசத்தாகிய மாயையுடன் சேர்ந்து அசத்தாகவும், சதசத்தாகவும் சிவத்தோடு பொருந்தி சுத்தமாயை, அசுத்த மாயை அகல உதவும் இனிய சொல்லான ஐந்தெழுத்தை அருளிச் செய்கின்றவனே உயிர்களுக்குத் தலைவன். அருளுபதேசம் புரியத்தக்க நல்ல ஞான குரு ஆவான்.
மாணிக்க மணிகள் ஞானிகள் எனக் கூறும் திருமந்திரம் பாடல் எண் 536
“கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
எய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தான்அறக்
கைப்பிட்டு உண்பான்போன்றும் கன்மிஞானிக்கு ஒப்பே”
கையில் கிடைத்திருக்கும் விலை மதிக்க முடியாத பெரிய மாணிக்கத்தைக் கீழே போட்டுவிட்டு காலில் தட்டுப்பட்ட வெறும் கல்லைச் சுமந்துகொண்டிருப்பவன் தலை எழுத்தைப் போலும், கைக் கெட்டும் தூரத்தில் கையிலேயே இருக்கும் நெய், பால், தயிர் போன்ற நல்ல உணவு இருக்க, தன் உடலுக்கு நன்மை தராத வெறும் கஞ்சியைக் குடிப்பதைப் போன்றதும் ஆகும். வினைத் தொடர்பால் காரியங்கள் செய்பவனுக்கும், வினையகலத் தவயோகம் புரியும் ஞானிக்கும் உள்ள ஒற்றுமை.
பரஞானம் அருளலே குரு உபதேசம் என் கூறும் திருமந்திரம் பாடல் எண் 2120
“நரரும் சுரரும் பசுபாசம் நண்ணிக்
கருமங் களாலே கழிதலில் கண்டு
குருஎன்பவன் ஞானி கோதிலன் ஆனால்
பரம்என்றால் அன்றிப் பகர்வொன்றும் இன்றே”
மனிதர்களும் தேவர்களும் ஆகிய பசுக்கள், பந்த பாசம் அடையப் பெற்று, அதன் விளைவான வினைத் துன்பங்களில் சிக்கி வீழ்வதைக் கண்டு, குரு என்று சொல்லப்படும் நல்லாசிரியன் ஞானமார்க்கத்தைப் போதித்து நல்வழிகாட்டும் ஆசானாவான். குறை குணம் இல்லாத, நிறை ஞானம் உடையவனாக இருந்தால், சீடனைப் பார்த்து “நீ பரஞானம் பெற்றுப் பரத்தோடு ஒன்றிப் பரம் ஆகுக” என்று உபதேசிப்பதைத் தவிர, சீடனுக்கு அவன் சொல்லுவதற்கு வேறு எதுவும் இல்லை.
அசற்குரு (தகுதி இல்லாத குரு) பற்றிய திருமந்திரப் பாடல் எண் 2044
“உணர்வு ஒன்றிலா மூடன்உண்மை ஓராதோன்
கணுவின்றி வேதாகம நெறி காணான்
பணிவுஒன்று இலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு ஆமே”
அற உணர்வு, இறை உணர்வு, நல்லறச் சிந்தை இல்லாதவன், அறிவில்லாத முட்டாள், உண்மையை ஆராய்ந்துணரும் திறமை இல்லாதவன், குழப்பம் இல்லாது வேதாகம சாரங்களைத் தெளிவாக அறியாதவன், பணிவுடைமை இல்லாதவன், பிறரைத் தூற்றுபவன், கீழான மன இயல்புகள் கொண்டவன் ஆகியோர் நன்னெறி அறியாத தீ நெறி போதிப்பவர் ஆவார்.
2,023 total views, 9 views today