யுரேக்கா

எங்கடை நாய் ஒவ்வொரு கதவாய் விறாண்டுது

  • கனகசபேசன் அகிலன்- இங்கிலாந்து

1987ம் ஆண்டு, வழமை போல் பாடசாலை முடிந்து யாழ் இந்து மகளீர் பாடசாலையை தாண்டி…(நம்புங்கள், இது நான் வழமையாகப் போகும் வழி, வேம்படி, சுண்டுகுழியெல்லாம் சுற்றி கடைசியாக இங்கு வந்து சேரவில்லை…). பாடசாலையைத் தாண்டியவுடன் இடது பக்கத்தில் வரும் சிறு ஒழுங்கையூடாகச் சென்று பலாலி வீதியில் மிதக்கின்றேன்…இந்திய இராணுவ வாகனங்கள் வரிசையாகச் செல்கின்றன, வீதியோரம் நின்று மக்கள் கை காட்டி குதூகலிக்கின்றார்கள்… ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமோ? என்று மனதில் சந்தேகம் கலந்த சந்தோசம்… அமைதி காக்க வந்த படையென்றல்லவோ பெயர் வைத்திருந்தார்கள்… இருந்தாலும், ஏதோ ஒரு கூறமுடியாத குழப்பம்… சில மாதங்களில் சிறிது சிறிதாக நிலைமை மோசமாகியது… அதே பலாலி வீதியை அணுகும்போது ‘வந்து துலைக்கப்போறாங்களோ?’ என்று மனதில் ஒரு பீதி…அந்த நிலை இன்னும் மோசமாகி போற வாறவர்களையெல்லாம் இராணுவம் மறித்து சோதனை செய்யத் தொடங்கியது…தப்பி ஒரு மாதிரி வீட்டுக்குச் சென்றால் அங்கும் இராணுவத்தின் நெருக்கடி. எனது கிராமம் நீர்வேலி, எனது வீடு இருந்த இடத்திலும் (தெற்குப் பகுதி) அடிக்கடி இராணுவத்தின் முற்றுகை நடக்கும், கால நேரம் கிடையாது… காலையில் இராணுவத்தின் துப்பாக்கிக்கு முன் நின்று பல் விளக்கிய நாட்கள் பல… இப்படி நிலைமையிருக்கையில் ஒரு நாள் யாழ்ப்பாணத்திலிருந்து பாடசாலை முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் வருகின்றேன்… அப்பா படபடப்புடன் என் வருகையைப் எதிர்பார்த்து வாசலில் நிற்கின்றார்… அவரது முதல் கேள்வி…’வரேக்கை ஆமிற்றை பிடிபட்டனியே?’ ‘இல்லையப்பா…ஏன் ?’ என்று அவரிடம் நான்… ‘ஆ…அப்ப தப்பீற்றாய்…சரி, பள்ளிக்கூட பாக்கை என்னட்டை தந்திட்டு கெதியாய் அரசகேசரி பிள்ளையார் கோயில் பக்கமாய்(நீர்வேலி மத்தி) எங்கையாவது ஓடு…இப்போதைக்கு திரும்ப வராதை’… ‘ஏனப்பா? ஆமி இஞ்சை வந்தவங்களே?’ அவரிடம் கேட்டேன் ‘இல்லை இனி தான் வரப்போறாங்கள்…’ ‘உங்களுக்கு யாராவது சொன்னவையளே?’ திரும்பவும் நான்… ‘எங்கடை நாய் ஒவ்வொரு கதவாய் விறாண்டுது, தெரியேலையே…அங்கை பார்…’ என்று நாயை காட்டினார். நானும் நிலமையை உணர்ந்து உடனே அங்கிருந்து ஓடிவிட்டேன். அந்த நேரத்தில் தொலைபேசி இல்லை, இராணுவம் வருவதை அயலவர்களோ அல்லது என்னைப்போல் ஓடிவரும் நண்பர்களோ சொன்னால் தான் தெரியும்… அப்படி எவரும் சொல்லவில்லையெனில், எமது வீடுகளில் உள்ள நாலுகால் கடவுள்கள் எப்படியோ எதையோ வைத்து மோப்பம் பிடித்து (இராணுவம் உண்ணும் கடலை எண்ணெய் எனக் கேள்வி) தானும் அவர்களிடமிருந்து தப்ப, வீட்டு கதவை கால்களால் விறாண்டி உள்ளே வர கடுமையாக எத்தனிப்பார்கள்…அது தான் எங்களுக்கு கடைசி அறிவிப்பு … அன்று, மூன்று நாலு மணித்தியாலங்களாக நண்பர்களுடன் அரட்டையடித்துவிட்டு, இருட்டியவுடன், வீட்டுக்கு திரும்ப வருகிறேன், அப்பா சிறிது கவலையாக இருக்கின்றார்… ‘ஏனப்பா ஆமி அடிச்சவங்களே?..என்ன கேட்டவங்கள்?’ “இல்லை…பிள்ளையள் எங்கையெண்டு கேட்டாங்கள், நான் பள்ளிக்கூடமெண்டு சொன்னன்…உங்களுக்கு என்ன பிரச்சனை? எண்டு கேட்டான்… நான் ஒன்றும் பேசேல்லை…கொஞ்ச நேரத்தில் அவனே ‘வீடுகளிலெல்லாம் கிணறு, தண்ணி டாங், பாத்தி கட்டி மரங்களுக்கு தண்ணி விடுகிறியள்…பாத்தி கட்டேக்கை ரேடியோவிலை உங்களுக்கு பாட்டு வேறை… நாங்கள் அங்கை குடிக்கவே தண்ணியில்லாத இடத்திலை எவ்வளவு சந்தோசமாய் இருக்கிறம்…உங்களுக்கு இஞ்சை பிரச்சனை’…என்று தாறு மாறாய் பேசிப்போட்டு போறாங்கள்…” ‘அப்பா…அவன் கிடந்தான்…’ என்று நான் சமாதானப்படுத்தியும் அவர் இன்னமும் ஏதோ குழப்பத்தில்… பின்பு அவராகவே..’அவங்களில்லே என்றை ரேடியோவை தரச்சொல்லி கேட்டவங்கள்…முகாமிலை பாட்டு கேட்க தேவையாம்…ஒருமாதிரி இழுத்து மறைச்சு வைச்சிட்டன்’ …என்று மிகுந்த கவலையுடன்… நான் மனதுக்குள் நினைத்தேன்…’சீ, இண்டைக்கும் இந்த ரேடியோ தப்பீட்டுது…வந்தவங்கள் இதை கொண்டு போயிருக்கலாம்’… அப்படி நான் நினைத்ததற்கு காரணம்…அப்பாவிற்கு அந்த ரேடியோ வலக்கை மாதிரி(கிட்டத்தட்ட படத்தில் உள்ளது போல்), அவர் செல்லுமிடமெல்லாம் அதுவும்…எப்ப பார்த்தாலும் அதில் பழைய பாடல்கள் தான் 1950,60,70களில் வந்த பாடல்கள்…நான் ‘அந்தி மழை பொழிகிறது’ பாட விட்டால் அவர் ‘உதெல்லாம் ஒரு பாட்டோ’ என்று என்னை பேசிவிட்டு மீட்டரை மாற்றி ‘அதோ அந்த பறவை போல…’ பாட விடுவார். இப்படியே…’ஒரு ராஜா ராணியிடம்…பரம சிவன் கழுத்திலிருந்து…முத்துக்கு முத்தாக…அண்ணன் என்னடா தன்பி என்னடா…’ நான் கேட்காத பழைய பாடல்களே இல்லை…இது போதாதென்று பாடல்களுக்கு விளக்கம் வேறு சொல்லுவார். நல்ல காலம் ‘ஒட்டகத்தை கட்டிக்கோ’…’சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலு’ பாடல்கள் வரும் போது அவர் உயிரோடு இல்லை ! அந்த ரேடியோவை தூக்கி ஏறிய வேண்டும் போலிருக்கும்…இப்போது, பல வருடங்களுக்குப் பிறகு அப் பாடல்களை முணுமுணுக்கும் போது நினைத்துப் பார்க்கிறேன்…காலத்தை கடந்த அன்றைய பாடல்களில் பல அதிசயங்கள் தான்! அவற்றை ஆக்கி எமக்குப் படைத்தவர்கழும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்! இதற்கு இன்னொரு படி மேல் சென்று சிந்தித்தோமேயானால்…நான் எந்தப் பாட்டு போடலாம் என்று அடிபட்ட, தூக்கியெறிய நினைத்த அந்த ரேடியோவை, தன் வாழ் நாளில் பல வருடங்களை செலவளித்து கண்டு பிடித்தவரை பற்றி ஒரு கணம் கூட நான் சிந்திக்கவில்லை. இப்படி தான் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்களும் – அவை எமக்கு வழங்கப்பட்ட படியால் அவற்றை நாம் ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை, ‘அது ஏன் அப்படி செய்யவில்லை, இப்படி செய்யவில்லை’ என்று மேலும் மேலும் குறைகளை காணும் சமுதாயமாகவே வளர்ந்து கொண்டிருக்கின்றோம் ! ஒவ்வொரு பொருளையும் ஆக்கியவரைப் பற்றியும் அவர்கள் பட்ட சிரமத்தையும் சிறிது அறிந்து கொண்டால் அந்த பொருள் மீதும் அவர்களின் மீதும் ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்படும். பொருட்கள் மட்டும் கண்டுபிடிக்கப்படவில்லை ஒவ்வொரு மனிதர்களும்கூட கண்டுபிடிக்கப் படுகிறார்கள்! அவர்கள் திறமைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன! சிலர் தமது பெற்றோரால், சிலர் ஆசிரியர்களால், சிலர் நண்பர்களால்..சிலர் தாம் என்றுமே சந்தித்திராத நபர்களால் தம்மை, தமது திறமைகளை, தமது எதிர்கால வாழ்க்கை பாதைகளை கண்டறிந்து கொள்கின்றார்கள்… ‘டேய், இப்படியே போனால் நீ உருப்படமாட்டாய், அந்த வழியில் போ… உனக்கு அது தான் சரி…என்று உங்களுக்கு உணர்த்தப்பட்ட, அல்லது நீங்களாகவே உணர்ந்துகொண்ட கணங்களை…நீங்கள் உண்மையில் யார், உங்களுள் ஒழிந்திருக்கும் அபார திறமைஃகள் என்ன என்று அறிந்து கொண்ட அந்த யுரேக்கா தருணங்களை ஒரு கணம் எண்ணிப்பாருங்கள்… ஒரு அரை மணி நேரம் அமைதியாக கண்களை மூடி…அரிவரியிலிருந்து இன்று வரை பயணித்த உங்கள் வாழ்க்கையை அணுவணுவாக அனுபவித்து திருமபவும் பயணியுங்கள்…நீங்களும் ஒரு அபாரமான கண்டுபிடிப்பு என்பதை உணர்வீர்கள்! உங்களை கண்டுபிடித்த ஆக்கிமிடிஸ{ம் உங்களுக்குத் தென்படுவார்! உங்களை உங்களுக்கு உணர்த்தியவர் இன்றும் இருந்தால் அவரை தேடிச்சென்று உங்கள் மரியாதையைச் செலுத்துங்கள்…

1,451 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *