2020 ஆண்டு வருடிச்சென்றதா வாரிச் சென்றதா?
ஓவ்வொரு ஆண்டும் முடியும் போது ஒரு குதூகலம் மனதில் எழும். புது வருடம் பிறக்கின்றது என்பதே அந்த புத்துயிர்ப்பின் காரணம். அதற்காக முன்னைய ஆண்டு சிறந்தது அல்ல என்பது பொருள் அல்ல. பலரது வாழ்வையும் ஏதோ ஒருவிதத்தில் மகிழ்வையும், துன்பத்தையும் தந்தே அந்த ஆண்டும் கடந்து சென்றிருக்கும்.
ஆனால் எவரும் 2020 ஆண்டை வாழ்வில் மறக்க முடியாதபடி முற்றாகத் திருப்பிப் போட்ட ஒரு ஆண்டாகத் திகழ்கின்றது. எப்போது இந்த ஆண்டு கடந்துபோகும் என்ற எண்ணமே யாவரது மனதிலும் இப்போது உள்ளது. ஏதோ இந்த வருடம் போனால் கொரோனாவும் அதனுடன் கைகோர்த்து சென்றுவிடும் என்ற ஒரு அற்ப ஆசையே காரணம்.
நாம் புலம்பெயர்ந்து வந்து இங்கு மட்டுமல்ல, தாய்மண்ணிலும்தான் எத்தனை விதமான கொரோனாக்களுடன் வாழ்ந்து பழக்கப்பட்டனாங்கள். இருந்தாலும் இது கண்ணுக்குத்தெரியாத ஒரு வைரஸ். சிரமம்தான்! இருந்தாலும் அதனுடனும் நாம் வாழக்கற்றுக் கொள்வேண்டும். இது கட்டாயம் அல்லாத கட்டாயம்.
ஒரு வீட்டை இடிக்காமல், அது இருக்கத்தக்கதாகவே வீட்டை எமக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதுபோல, நாமும் அது இருக்க எமது வாழ்ககை முறைகளை மாற்றி அமைப்போம்.
அதற்காக நாம் நம்மை நாமே தொலைத்துவிடாமல் அவதானமாக இருப்போம்.
திருவிழாக்கள், விழாக்கள், திறப்புவிழாக்கள், திருமணங்கள் எல்லாம் சூமாகிவிடாது பார்த்துக்கொள்வோம். பாதுகாப்பாக நடந்துகொள்வோம். நிலவுக்குப் பயந்து பரதேசம் போன கதை வேண்டாம்.
சென்ற வருட இனிய நினைவுகளை அசைபோட எதுவும் இல்லை என்ற கவலையை விடுங்கள். நாம் ஒரு சோதனைக் காலத்தை எப்படி எதிர்கொள்வது என்பதனை நன்கு கற்றுக்கொண்ட ஆண்டாக எண்ணி மகிழுங்கள்.
நம்மை வருடிச் சென்ற காலம் அல்ல 2020. பலவற்றை வாரிச்சென்றகாலம் அது.
உங்கள் உறவுகள் முதல், உங்கள் அபிமானமான பாடகரான பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வரை வாரிச்சென்றது இந்த வைரஸ்.
யேர்மனியில் இறுதியாக நடந்த பெருவிழா வெற்றிமணி மகளிர் தினவிழா (08.03.2020) அதற்குப்பின் பெருவிழாக்கள் ஏதும் இல்லை. திருவிழாக்களும் இல்லை! யாவும் நடைபெறமுடியாது போயின. 2021 ஆம் ஆண்டு எதற்கும் எம்மைத் தயார்படுத்த வேண்டும். யாவும் இயல்பு நிலைக்கு வரவேண்டும். அரசின் சுகாதார ஆலோசனைகளுடன் நீங்களாகவே உங்கள் உடல் ஆராக்கியத்திற்கு ஏற்ற சட்டதிட்டங்களை அமைத்துக்கொண்டு வாருங்கள். வாரிச்சென்ற ஆண்டை வழியனுப்புவோம்! மெல்ல வருடிச்செல்லும் ஆண்டாக 2021ஆம் ஆண்டை வரவேற்போம்.
உரிய சோதனைகளுக்கு எம்மை உட்படுத்தி மீண்டும் பறப்போம். பாதுகாப்போடு வழமைக்குத் திரும்புவோம். வாழ்க்கை என்பது உயிருடன் இருப்பது என்பது மட்டும் பொருள் அல்ல. மனநோயாளியாகாமல் நம்மையும் பாதுகாத்துப் பிறரையும் பாதுகாப்போம்.
கோவிட்-19 தடுப்பூசி இதோ வருகிறது அதோ வருகிறது! வந்தால் மகிழ்ச்சிதான். இந்தத் தடுப்பூசியாலும் இணையத்துள் மக்கள் கரைந்துபோவதைத் தடுப்பது என்பது சந்தேகமே!
அனைவருக்கும் எங்கள் நத்தார் புத்தாண்டு வாழ்த்துகள்.
— மாதவி
1,489 total views, 3 views today