புத்தாண்டும், புதிய சவால்களும்

  • சேவியர்

ஒரு பத்தாண்டு சந்திக்க வேண்டிய சவால்களை இந்த ஒற்றை ஆண்டு நமக்குத் தந்து விட்டது. வாழ்க்கையில் நாம் சந்திக்காதவைகளை சந்திக்கவும், சிந்திக்காதவைகளை சிந்திக்கவும் வைத்து விட்டது இந்த ஆண்டு. உண்மையிலேயே ஒரு நாள் என்பது, இறைவனோ, இயற்கையோ நமக்குத் தருகின்ற வரப்பிரசாதம் என்பதை எல்லோரும் புரிந்து கொண்டது இந்த ஆண்டு தான்.

வழக்கமாக புத்தாண்டு வந்தாலே ஒரு குதூகலம் வரும். ஒரு புதிய ஆண்டுக்குள் நுழையும் சிலிர்ப்பு மனசுக்குள் சிறகடிக்கும். இந்த வருஷம் நான் கண்டிப்பா எக்சர்சைஸ் செய்வேன் என்றோ, இனிமே டெய்லி வாக்கிங் தவறவே தவறாது என்றோ, இந்த பாழாப்போன சிகரெட்டை இனிமே புடிக்க மாட்டேன் என்றோ புத்தாண்டு வாக்குறுதிகள் புறப்படும். அது நாலாவது நாளே காலாவதி ஆகிவிடும் என்பது வேறு விஷயம்.

இந்த ஆண்டு அப்படி ஒரு புத்தாண்டு தீர்மானம் இருக்குமா ? இருந்தாலும் என்ன இருக்கும் ? அடிக்கடி கைக்கு சானிடைசர் போடுவேன் என்றா ? இனிமே மாஸ்க் இல்லாம ரிஸ்க் எடுக்க மாட்டேன் என்றா?சமூக இடைவெளியில்லாமல் மக்களிடையே நடக்க மாட்டேன் என்றா ? ஒரே குழப்பமாக இருக்கிறது இல்லையா ? கொரோனா அந்த அளவுக்கு நம்மை குட்டிக் கரணம் அடிக்க வைத்திருக்கிறது, என்பது தான் அதன் காரணம்.

புத்தாண்டு நம்மை ஒரு சவால்களின் தேசத்துக்குத் தான் அழைக்கிறது. போர்க்காலத்தில் பதுங்கு குழிக்குள் ஒளிந்து கிடந்தவன் வெளியே வரும் போது இருக்கின்ற மனநிலை தான் புத்தாண்டில் நுழையும் போதும் நமக்கு இருக்கும். தன்னைச் சுற்றி எல்லாமே மாற்றமடைந்தும், சிதிலமடைந்தும், சின்னாபின்னமாகியும் கிடந்தால் என்ன தான் செய்ய முடியும் ? மீண்டும் அனைத்தையும் புதுப்பிக்கவேண்டும் எனும் உத்வேகத்தைத் தவிர எதைத் தான் சுமக்க முடியும் ?
இதோ பொருளாதாரம் தனது பற்களை இழந்து பொக்கை வாய் காட்டிச் சிரிக்கிறது. ஏற்கனவே சிறு தொழில் செய்பவர்களெல்லாம் தங்களுடைய வயிற்றுக்குப் பட்டினி போடத் தொடங்கி விட்டார்கள். அன்றாடம் காய்ச்சிகளெல்லாம், அவ்வப்போது காய்ச்சிகளாக மாறிவிட்டார்கள். பணக்கார வாசத்தின் பங்களாக்களைத் தவிர மற்ற இடங்களில் வசந்தத்தின் வெயில் படவே இல்லை. நாம் சந்திக்கப்போகும் முதல் சவால், நமது பொருளாதாரம் சார்ந்தது. இலக்கு என்பது, உயரங்களுக்குச் செல்வதல்ல, ஆழங்களில் புதைபடாமல் காத்துக் கொள்வது.

உறவுகளின் நெருக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டியது இன்னொரு சவால். மதில்களில் அடைக்கப்பட்ட ஆண்டு முடிவு பெறுகிறது. கதவுகளைத் திறந்து வைக்கும் காலம் வருகிறது. உறவுகளைக் கூட ஆறடி தள்ளி நிற்க வைத்த வைரசின் வைராக்கியம் எப்போது தணியுமோ ? புத்தாண்டு இந்த இடைவெளியை உடைக்கும் காலம். இதயத்தால் இணைந்தும், உடலளவில் பிரிந்தும் இருக்கின்ற உறவுகளை சந்திக்கும் காலம். எப்படி சாத்தியமாகும், எப்போது சாத்தியமாகும் எனும் கேள்விகளுடனே மலர்கிறது இந்த ஆண்டு.

கல்விகளின் களத்தில் தாயம் ஆடி மாணவர்களைத் தோற்கடித்திருக்கிறது இந்த பேரிடர் காலம். காற்றைப் போல சிறகுகள் கொண்ட மாணவர் சமூகத்தை டிஜிடல் திரைகளில் சிறைவைத்திருக்கிறது. அவர்கள் அந்த சன்னல்களை உடைத்து விட்டு மீண்டும் பள்ளிக்கூட முற்றங்களில் பறந்து திரியும் காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். கல்வியின் ஆழம் குறைந்து போய், பள்ளி வாழ்வின் சுவாரஸ்யம் மறைந்து போய், ஆசிரியர்களின் அருகாமை அகன்று போயிருக்கும் இந்த காலம் எப்போது மறையும் ? கல்வியின் தாழ்வாரங்களில் எப்போது மாணவ பாதங்கள் ஓவியம் வரையும் ? கேள்விகளோடு புலர்கிறது புத்தாண்டு.

சந்திப்புகள், விழாக்கள், திருமணங்கள், விசேஷங்கள், திருவிழாக்கள் என கூட்டமாய்ச் சேர்ந்து கும்மியடிக்கும் அத்தனை சுவாரஸ்யங்களையும் அனுமர் வால் போலச் சுருட்டி அதன் மேல் அமர்ந்து கொண்டது கொரோனா. புதிய ஆண்டு இந்தச் சங்கிலியை உடைத்து ஒரு புதிய சூழலை உருவாக்குமா எனும் கனவும், எதிர்பார்ப்பும் எல்லோரிடமும் இருக்கிறது. அத்தகைய விழாக்களை நடத்துவதும், அத்தகைய விழாக்களில் கலந்து கொள்வதும் புத்தாண்டு நம் முன்னால் வைக்கப் போகும் சவால்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.

உணவுப் பழக்கங்களில் உருவாகியிருக்கும் மாற்றம் இந்த ஆண்டின் ஒரு திருப்பம். நோய் எதிர்ப்புச் சக்திகளுக்கான உணவுகளைச் சாப்பிடவேண்டும், ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடவேண்டும், போன்றவையெல்லாம் மக்களுடைய முதன்மைப் பட்டியல்களில் வந்திருக்கின்றன. அந்த சிந்தனையின் நீட்சி அடுத்த ஆண்டில் இன்னும் அதிகமாய் பிரதிபலிக்கும். உணவுகளின் மீது கவனம் செலுத்தும் ஒரு புதிய கலாச்சாரம் உருவாகும். ஆரோக்கிய உணவுகளின் தேவையும், தேடலும் வரும் ஆண்டின் புது சவால்களில் ஒன்றாய் புன்னகைக்கும்.

ஹெல்த் கேர், அடுத்த ஆண்டு நிச்சயம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த ஆண்டு உலகெங்கும் உள்ள மக்கள் ஒரு நல்ல மருத்துவக் காப்பீடின் அவசியத்தை உணர்ந்திருப்பார்கள். டுபாக்கூர் காப்பீடுகளின் சிக்கல்களையும் புரிந்து கொண்டிருப்பார்கள். ஒரு நல்ல மருத்துவக் காப்பீடு எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தக் காலகட்டம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. இனிமேல் அதை அரவணைத்துக் கொள்ள வேண்டும் எனும் சிந்தனை முதன்மைப் பட்டியலுக்குள் நுழைந்து விடும்.

பயணங்களும், பயணங்கள் சார்ந்தவையும் அடுத்த ஆண்டு மீண்டும் புத்தெழுச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு பயணங்களின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி படியிலேயே அமர வைத்தாயிற்று. அத்தியாவசியம் தவிர்த்து மற்ற பயணங்களெல்லாம் கைகழுவப்பட்டு விட்டன. அச்சத்தின் உச்சத்தில் பொழுதுபோக்குப் பயணங்கள் விடைபெற்று விட்டன. நின்று போன பயணங்களை மறுபடியும் துவங்குவதும், புதிய பயணங்களை மேற்கொள்வதும் வரும் ஆண்டின் சவால்களின் வரிசையில் இடம் பெறும் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த ஆண்டின் காயங்கள், அடுத்த ஆண்டின் தீர்மானங்களாக மாறும் அதே வேளையில் சில விஷயங்களை நாம் மனதில் எழுத வேண்டும். வாழ்க்கை என்பது நம்மைச் சுற்றி அரண்களை எழுப்பி நம்மைக் காப்பது மட்டுமல்ல. நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களைப் பற்றிய கரிசனையை எழுப்புவது. அவர்களுக்கும் கை கொடுப்பது. கொரோனா காலம் வறுமையை எத்தனையோ வீடுகளில் நிரப்பிவிட்டுச் சென்றிருக்கிறது. அத்தகைய மக்களுக்கு உதவுகின்ற கரிசனை நிச்சயம் வேண்டும். மனித நேயம் அடுத்த ஆண்டு நம்மிடமிருந்து பெருமழையாய் சொரியட்டும்.

ஆன்மிகத்தின் அடைபட்ட மதகுகளை இந்த ஆண்டு அகலத் திறந்திருக்கிறது என்று சொல்லலாம். பலர் ஆண்டவனைத் தேடவும், தனிமையில் தன்னை ஆராய்ந்து பார்க்கவும் இந்தக் காலம் துணை செய்திருக்கிறது. புத்தாண்டு தனது சிறகுகளை விரித்து நம்மை அழைக்கும் போது, இந்த ஆன்மிகம் கற்றுத் தந்த அன்பின் பாடங்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளட்டும். உன்னத வாழ்வின் உயரிய சிந்தனைகள் நம்மை அணி செய்யட்டும். அப்போது தான் மலரும் புத்தாண்டு, சுயநலச் சிறைகளை விடுத்து அன்பின் சிறகுகளை உடுத்தும்.

புத்தாண்டுகள் எப்போதுமே நம்பிக்கையின் காலங்கள். பழைய காலத்தின் வலிகளை மறந்துவிட்டு, புதிய இதயத்தோடு இந்த புது வருடத்தில் நுழைவோம். இழந்து போனவற்றின் கவலைகளை விட, இழக்காமல் இருப்பவற்றின் மகிழ்ச்சி நம்மை இயக்கட்டும். நட்டங்களின் துயரத்தை விட, உயிர்பிழைத்த உற்சாகத்தோடு பயணிப்போம். செல்வங்களின் குவியலில் சுருண்டு கிடப்பதில் மகிழ்ச்சி விளைவதில்லை என்பதைப் புரிந்து கொண்டமைக்காக மகிழ்வோம். சக மனித கரிசனையோடும், தோழமையோடும் புத்தாண்டில் நுழைவோம்.

புத்தாண்டு புதிய சவால்களோடு காத்திருக்கிறது ! அதனால் என்ன நாம் புதிய மனிதர்களாய் நுழைவோம் !!

1,615 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *