பிரத்தியாகாரம்
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
மனதை அடக்கி உள்ளத்திற்குள்ளே இருக்கும் இறைவனை உணரும் பயிற்சியே பிரத்தியாகாரம். இக்கருத்தை திருமூலநாயனார் திருமந்திரம் பாடல் எண் 578
“கண்டுகண்டு உள்ளே கருத்துற வாங்கிடில்
கொண்டுகொண்டு உள்ளே குணம்பல காணலாம்
பண்டுஉகந்து எங்கும் பழமறை தேடியை
இன்றுகண்டு இங்கே இருக்கலும் ஆமே.”
மனமானது ஒரு நிலையில் இருப்பதில்லை. அலைந்து கொண்டிருக்கிறது. மரத்துக்கு மரம் தாவும் குரங்கைப் போல. வெளியே அலையும் மனத்தை உள்ளே உணர்வோடு பொருந்தி இருக்கச் செய்தால், பல நன்மைகள் உண்டாவதை அறிய இயலும். காலம் காலமாகக் காண விரும்பி, பழைமையான வேதங்கள் தேடியடைந்த பரம்பொருளை இங்கே இப்பொழுது, உங்களுக்கு உள்ளேயே இருப்பதைக் கண்டறிதல் கூடும். மனதை அடக்க உதவும் பிரத்தியாகாரப் பயிற்சியால் உள்ளத்துள்ளே இறைவன் இருப்பதை உணர இயலும் என்பது கருத்து.
பெருமை மிகு பிரத்தியாகாரம் எனக்கூறும் திருமந்திரம் பாடல் எண் 585
“ஒருக்கால் உபாபதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்து உணர்வந்த உபாபதிப் பிரிவைக்
கரைத்துஉணர்வு உள்ளல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே”
ஒளி வடிவான பரம்பொருளை அறிய ஒண்ணாது சீவன்களை மாயை தடுக்கிறது. இந்த மாயையைப் பிரித்து அறியச் சிவப் பரம்பொருளை நெஞ்சில் நினைத்து, உணர்வில் கலந்து, உள்ளம் உருக, மனத்துக்குள் எண்ணித் தியானித்தலே (உள் நோக்கலே) பிரத்தியாகாரப் பயிற்சியின் பெருமைக்குரிய பயனாகும்.
மூலாதாரத்தில் மூண்டெழும் சோதி எனக் கூறும் திருமந்திரம் பாடல் எண் 580
“மூலத்து இருவிரல் மேலுக்கு முன்நின்ற
பாலித்த யோனிக்கு இருவிரல் கீழ்நின்ற
கோலித்த குண்டலி உள்ளே செழுஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நால்விரல் கீழதே”
மூலாதாரத்திற்கு இரண்டு விரல் அளவு மேலே, முன் பக்கம் உள்ள குறி உறுப்புக்கு இரண்டு விரல் அளவு கீழே, வட்டமிட்டுக் குண்டலினியில் எழுகின்ற அழகிய சிவந்த சோதி ஒளியானது மண்ணுலகில் வாழும் மக்களுக்கு உந்திக் கமலத்திற்கு நான்கு விரல் அளவு கீழே இருக்கின்றது.
“ஓம்” எனும் மந்திரம் உணர்த்தும் ஈசனை எனக் கூறும் திருமந்திரம் பாடல் 579
“நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண்டு ஈசன் குடிபுகுந் தானே”
கொப்பூழ் (உந்திச் சுழி) இற்குக் கீழ் பன்னிரண்டு அங்குல தூரத்தில் உள்ள மூலாதாரத்தில் நிலை நிறுத்திச் சொல்லப்பட வேண்டிய மந்திர (ஓம்) மொழியைப் பலரும் அறியாதிருக்கின்றனர். இம்மந்திரத்தை அறிந்து கொண்டு விட்டால், குதி போட்டுக் கொண்டு இறைவன் ஓடி வந்து அங்கே (அப்படி நிலைநிறுத்துபவர் சிந்தையில்) குடி கொள்வான்.
2,177 total views, 9 views today