பூவொன்று புயலானது! – சம்பவம் (6)

“ம்… எழும்பும்… எழும்பும்… இண்டைக்கு வலன்ரைன்ஸ் டே அல்லே!” ஓவியாவைத் தட்டினான் பிரதீபன். ஓவியாவின் உறக்கம் கலையவில்லை.
“உங்கை பாரும் கிழவனை… இப்பவே நடை போடத் தொடங்கிவிட்டுது” சொல்லியபடியே யன்னலுக்குள்ளால் வெளியே பார்த்தான் பிரதீபன். அவர்கள் வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளியிருக்கும் இத்தாலிய முதியவர் விறுவிறெண்டு தனது உடற்பயிற்சிக்கான நடையை ஆரம்பித்திருந்தார்.

நேரத்தைப் பார்த்தான். அதிகாலை 6 மணி. எங்குமே புலர்ந்திருந்தது.

முதியவருக்கு வயது எண்பதைத் தாண்டியிருக்கும். அவரின் மனைவி, வயது முதிர்ந்தவர்களின் காப்பகத்தில் இருக்கின்றாள். சில மாதங்களுக்கு முன்னர், வாயில் புக்குப்புக்கென்று புகைவிட்டபடி அவரும் நடை பயின்றவர்தான்.
மீண்டும் எழும்புமாறு ஓவியாவை ஆய்க்கினை செய்தான் பிரதீபன்.
“எழும்பி என்ன செய்யுறது? காதலர்தினமும் வருஷாவருஷம் வந்து போகுது. ஒரு பூ, எப்பவாவது வாங்கித் தந்தியளா? ”

“நீயே ஒரு பூ… உனக்கொரு பூவா?”
“உதுக்கு மாத்திரம் குறைச்சலில்லை. கலியாணம் செய்து 25 வருஷமாகுது! நானும் ஒவ்வொரு வருஷமும் வாய்விட்டுக் கேக்கிறன். இருக்கிற றோசா மரத்திலையிருந்தாவது ஒரு பூங்கொத்து வெட்டித் தந்திருக்கிறியளா?”
பிரதீபனுக்கு அதற்கான சுரணை இன்னமும் வரவில்லை. ஒரு தடவையாவது அதையிட்டு யோசித்தும் பார்க்கவில்லை.
”ஓவியா…. சீக்கிரமா எழும்பிக் குளிச்சிட்டு வெளிக்கிடும். நல்ல ஒரு கடையிலை காலைச் சாப்பாடு புக் பண்ணியிருக்கிறன். போய் சாப்பிட்டு வருவம்.”
இருவரும் வாசனை கமழ்க்க, அழகான ஆடைகள் அணிந்து, காலைச் சாப்பாட்டிற்காகப் புறப்பட்டார்கள். ஓவியா வீட்டு முகப்பினில் போய் நின்று கொண்டாள். பிரதீபன் கராஜ்ஜிற்குள் இருந்து காரை வெளியே கொண்டு வந்தான். ஓவியா காருக்குள் ஏறும்போது, தூரத்தேயிருந்து அந்த இத்தாலிய முதியவர் கண்ணை இடுக்கிப் பார்த்தார். கார் அவரது வீட்டை அண்மித்தபோது, மறித்து நிற்பாட்டினார். ஒரு இளந்தாரி போலப் பாய்ந்து, முன்னேயிருந்த றோசா மரத்தில் ஒரு பூங்கொத்தைப் பிடுங்கினார். ஓவியா இருந்த பக்கமாக வந்தார். ஓவியா காரிலிருந்து இறங்கிக் கொண்டாள். அழகிய செந்நிறப் பூங்கொத்தை நீட்டினார்.

“நன்றி… என்ன இன்று உற்சாகமாக இருக்கின்றீர்கள்?”
“கொரோனாவாலை இவ்வளவு நாளும் மனைவியைப் பார்க்க முடியவில்லை. இப்ப கொஞ்சம் குறைஞ்சிருக்கிறதாலை பார்க்க விட்டிருக்கின்றார்கள்.” அவர் முகத்தில் பரவசம்.
உரையாடல் முடித்துப் புறப்பட்டார்கள். பிரதீபன் ஓவியாவைப் பார்த்தான். கையில் வைத்திருந்த பூங்கொத்தை முகர்ந்து பார்த்தபடியே, ஓவியா புன்முறுவல் செய்தாள்.
பிரதீபனின் மனம் குறுகுறுத்தது. காலைச் சாப்பாட்டின்போது சிந்தனை வயப்பட்டிருந்தான். வீட்டிற்கு வந்ததும், ஓவியா முதியவர் கொடுத்த பூங்கொத்தை பவ்வியமாக அணைத்தபடி காரில் இருந்தும் இறங்கினாள். எண்பதுவயது முதியவரே நாற்பதாக துள்ளிக் குதிக்கும்போது, பிரதீபன் எம்மாத்திரம்? வில்லில் இருந்து புறப்பட்ட அம்பானான். விர் எனக் கிழம்பியது கார்.

“எங்கே போகின்றீர்கள்?”
“சந்திவரை போய்விட்டு வருகின்றேன்.”
வரும்போது கையில் ஒரு சிறு பெட்டியுடன் வந்தான். உள்ளே மிகவும் விலையுயர்ந்த, அழகான பூங்கொத்து – ஓவியாவை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் ஒளிந்திருந்தது..
பெட்டியை உடைத்துப் பார்த்த ஓவியா, பூங்கொத்தைக் கண்டதும் ஆத்திரம் கொண்டாள். பெட்டியைத் தள்ளிவிட்டாள். பிரதீபன் அந்தப் பூங்கொத்தைக் குடுக்க எடுத்த எந்தவித முயற்சிகளும் பலிக்கவில்லை.
“இனிமேல் எனக்கு ஒருபோதும் பூ வேண்டாம். நானும் கேட்க மாட்டேன். எனக்கு அவர் தந்த பூவே போதும்.” முடிந்த முடிவாகச் சொன்னாள் ஓவியா.
அவர் எவர் என்று குழம்பிப் போனான் பிரதீபன்.

— கே.எஸ்.சுதாகர்-அவுஸ்திரேலியா.

1,260 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *