‘நட்சத்திரவாசி’ 1977-1978

எனது நாடக அனுபவப் பகிர்வு 04
ஆனந்தராணி பாலேந்திரா

நான் நடித்த ‘நட்சத்திரவாசி’ நாடக காலகட்டத்தில் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் நடந்தது. 21 வயதுவரை கொழும்பில் வசித்துவந்த என்னை இந்த சம்பவம் நிரந்தரமாக யாழ்ப்பாணத்திற்கு குடியேற வைத்தது.
க. பாலேந்திரா நெறிப்படுத்தி நான் நடித்த ‘மழை’ நாடகம் 1976 இல் முதல் மேடையேற்றம் கண்டு பின்னர் 1977இல் இலங்கையில் வேறு இடங்களில் மேடையேறிக் கொண்டிருந்த வேளையில், இனக்கலவரம் வெடித்தது. அதற்கு முன்னர் கொழும்பு தெகிவளையில் வசித்து வந்த நான் இனக்கலவரம் ஆரம்பமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் கொழும்பு மவுண்ட்லவனியாவில் எனது பெற்றோர் சகோதரர்களுடன் வேறு வீட்டில் வசிக்க ஆரம்பித்திருந்தேன். நாம் இருந்த தெருவில் ஓரிரு தமிழ் குடும்பங்களே வசித்து வந்தன.
காடையர்கள் தமிழர்களைத் தாக்குகிறார்கள் என்ற செய்தி எம்மை வந்தடைந்தது. எனது அப்பாவும் அம்மாவும் ஏற்கனவே 1958 இல் நடந்த இனக்கலவரத்தின் போது தாம் பொல்காவலவில் இருந்து எப்படித் தப்பினார்கள் என்ற கதையை எமக்குச் சொல்லியிருந்தார்கள். அவர்களுக்கு இதன் தாற்பரியம் நன்கு புரிந்திருந்தது. இப்போது நாங்கள் ஐந்து பிள்ளைகளும் கூட.
நாம் வசித்த வீட்டின் பின்புறமாக அனெக்ஸில் ஒரு பறங்கியர் (Burghers) குடும்பத்தினர் வசித்து வந்தார்கள். இருவரது வீட்டிற்கும் இடையில் ஒரு கதவு இருந்தது. அவரவர் பகுதிகளில் பூட்டி வைத்திருந்தோம். அவ்வப்போது கண்டால் ‘ஹலோ’ சொல்லும் அளவில்தான் எமது உறவு இருந்தது. பதட்டம் நிலவிய வேளையில் அவர்கள் எம்மிடம் வந்து பொதுக் கதவின் பூட்டை நாம் திறந்து வைத்துள்ளோம். உங்களுக்கு ஆபத்தென்று கருதினால் எமது பகுதிக்கு வரலாம் என்று சொன்னார்கள். ஒரு இரவு அங்கே தங்கினோம்.
காடையர்களுக்கு எமது வீடு தெரிந்துவிட்டது. அடுத்த நாள் நிலைமை மோசமாகியதை அடுத்து எமது பக்கத்து வீட்டில் குடியிருந்த சிங்களக் குடும்பத்தினர் தமது வீட்டில் எம்மைத் தங்கவைத்தார்கள். மறுநாள் எமது வீதியில் கத்தி, பொல்லுகளுடன் தமிழர்களைத் தேடித்திரியும் காடையர்களைக் கண்டவுடன் வீட்டுச் சொந்தக்காரர் தனது மாமனாரின் வீடு பாதுகாப்பானது என்று கூறி அங்கே அழைத்துச் சென்றார். மாமனார் அந்த இடத்தின் கவுன்சிலராக இருந்தவரென்பதும் அவரது காரில் எம்மை அழைத்துச் சென்றதும் எனக்கு நல்ல ஞாபகம்.
அவரது வீட்டில் எமக்கு அடைக்கலம் கொடுத்தது தெரியவர, அது அவருக்கே ஆபத்தாக மாறும் என்று தெரிந்தபோது எனது அப்பா வெள்ளவத்தை பிள்ளையார் கோயில், கதிரேசன் மண்டப வளாகத்தில் தமிழர்களுக்கான முகாம்கள் திறந்திருப்பதை அறிந்து அங்கே எம்மைக் கொண்டுபோய் விடுமாறு கேட்டார். இரண்டு கார்களில் அவர்கள் எம்மைக் கூட்டிச் சென்றார்கள். வழியில் தெகிவளை சந்தியில் தமிழர்களின் கடைகள் எரிவதைப் பார்த்தோம். உயிராபத்து ஏற்படும் வேளையில் நடந்தவை, அது எவ்வளவு காலம் சென்றாலும் மனதில் பதிந்துவிடுகிறது. மனிதநேயம் என்பது சாதி மத இனத்திற்கு அப்பாற்பட்டது என்பதும் புரிந்தது.
முகாமுக்குப் போனபோது அங்கே ஏற்கனவே பல பகுதிகளிலிருந்தும் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள். அதிலே காயப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என பலவிதமானோர் இருந்தனர். சிலரின் கதைகளைக் கேட்டபோது எமது துன்பம் கடுகளவானது. எல்லோருக்குமான உணவு விநியோகம், சுகாதார சேவைகள் போன்றவற்றை ஒழுங்குமுறையில் செய்வதற்கு நானும் என்னைப்போன்ற இளையவர்கள் சிலரும் தொண்டர்களாக பணியாற்ற ஆரம்பித்தோம். அப்போதுதான் இன்னுமொரு இளைஞர் குழுவினரும் அங்கே தொண்டாற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அக் குழுவில் பாலேந்திராவும் என்னோடு ‘பிச்சை வேண்டாம்’ நாடகத்தில் நடித்த சிலரும் இருந்தனர்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நேரம் அது. என்னோடு ஒன்றாகப் படித்த லோகா சிவஸ்கந்தராஜா (சிவசிங்கம்) இந்த முகாமிற்கு எதிரில் இருந்த பம்பலப்பிட்டி கடயவள இல் வசித்துவந்தார். கொழும்பில் அப்போது இந்த கடயவள, ரொறிங்டன் அன்டசன் கடயவள என விரல் விட்டு எண்ணக்கூடிய தொடர்மாடி வீட்டுக் கட்டடங்கள்தான் இருந்தன. இப்போது நிலைமை வேறு. தனி வீடுகள் எங்கே என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. நாம் தங்கியிருந்த முகாமில் சுகாதார வசதிகள் மிக மோசமாக இருந்தன. ஆண்கள் சமாளித்தார்கள். பெண்கள் நாம் சிரமப்பட்டோம். குறிப்பாக இளம் பெண்கள். அவ்வேளையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்திய நேரங்களில் லோகாவின் வீட்டில் குளியலறை போன்றவற்றை எனக்கு மட்டுமல்ல, சிரமப்படும் பெண்களுக்கும் பாவிக்க உதவினார்கள்.
எனது அப்பா எங்களை எப்பிடியாவது யாழ்ப்பாணத்திற்குக் கூட்டிப்போக வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருந்தார். கொழும்பு துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்படும் என்றார்கள். ஆனால் அது எப்போது என்று யாருக்கும் நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை. இதற்கிடையில் இலங்கை விமான சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த எங்கள் உறவினரான சுந்தரகுமார் (இவர் பின்னர் எனது அக்காவைத் திருமணம் செய்து எனது மைத்துனர் ஆனார்) கொழும்பிலிருந்து பலாலிக்கு விமான சேவை இடம்பெறவுள்ளது என அறிந்து அதில் நாம் பயணிப்பதற்கு ரிக்கற்றுகளை பெற்றுத் தந்தார்.
இரண்டு பஸ்களில் ஆமிக்காரரின் பாதுகாப்போடு இரத்மலானை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். விமான நிலையத்திலும் பல மணித்தியாலங்கள் நாம் எல்லோரும் காத்திருக்க வேண்டியிருந்தது. எந்த நேரமும் என்னவும் நடக்கலாம் என்ற ஒரு அச்சம் எல்லோரையும் ஆட்கொண்டிருந்தது. பல மணி நேரத்திற்குப் பின்னர் நாம் எல்லோரும் விமானத்தில் ஏறினோம். எனது முதல் விமானப் பயணம் அது. எல்லோரும் அது Jumbo Jet என்று பேசிக்கொண்டார்கள்.
மிகுதி அடுத்த இதழில்.

1,406 total views, 6 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *