நினைக்கத் தெரிந்த மனமே!
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா. இந்தப் பாடல் மட்டும் நினைவு இருக்கு.இந்தப் பாடல் வந்த காலத்தில் வந்த காதலும் நினைவிருக்கு மிச்சம் மீதியெல்லாம் மறந்து போச்சு.
கலோ நான் மகள் கதைக்கிறேன் என்று தொடங்கும் காலம் போய்… யார் கதைத்கிறது தெரியுமோ ? என்று ஆரம்பிக்கும் காலம் வந்துவிட்டது.
தகப்பனும் விட்டு கொடுக்காமல் ஓமணை ஓமணை என்று கதைத்து முடித்து போனையும் வைத்துவிட்டு; மனிசியிட்டை யார் என்னோடு கதைத்தது என்று விழிபிதுங்கும், தந்தையாரும் இன்று உண்டு.
சரி 70 வயதைக் கடந்தவர் தான் அப்படி என்றால், இளசுகளுக்கும் மறதி மறதி தான்.
இரவு இரவாக நண்பருடன் நாளைக்கு பாங்கோக் கொலிடே போகக் கதைத்துவிட்டு, பாடசாலை நினைப்போடு பறக்க கீத்துறூ விமான நிலையத்திற்கு 200 மைல் தாண்டி சென்று, அங்கு வழியனுப்ப வந்தவரையும் வழியனுப்பிப்போட்டு வந்த நண்பர்களையும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை பகிர்ந்துவிட்டு,போடிங் பாஸ் எடுக்க பாக்குக்குள் கைவிட்டால்……
பாஸ்போர்ட்டை காணவில்லை.
அது 200 மைல்களுக்கப்பால் மறந்துபோகாமல் எடுக்கவேண்டும் என்று மேசையில் எடுத்து வைத்தது
அங்கேயே பத்திரமாய் இருக்குது.
சரி இனி மறதியை ஒரு கை பார்ப்போம் என்று மறதிக்கே சவால்விட்டு வீடுட்டில் இருந்து வேலைக்குப் போனால்!
இப்ப வீட்டுக்கதவைப் பூட்டினேனா என்று சந்தேகம் கதவைத்தட்டுகிறது. போனவன் 10 மைல் திரும்பி வந்து கதவை திறந்தது பார்த்தால் அது பூட்டித்தான் இருக்கு.
திரும்பி அப்பாடா என்று பெருமூச்சுடன் காருக்குள் ஏறவந்தால் கார்திறப்பைக் காணோம். இப்ப கார்த்திறப்பும் கதவுத்திறப்பும் கதவில் வெளியே தொங்குகிறது.
முக்கியமாக உப்பு இல்லை என்று கடைக்கு போனால் முதல் கண்ணில் படும் பொருள்களை எல்லாம் மேய்ந்துவிட்டு விலை குறைச்சு போட்டிருந்தால் தேவையோ இல்லையோ அள்ளிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தால் உப்பைக் காணோம். சரி இனிமேல் மறக்காமல் இருக்க நினைவு வரும்போது எல்லாம் எழுதிவைத்துவிட்டு கடைக்குப் போனால் எழுதிவைத்த லிஸ்ட் வீட்டில் இருக்கும்.
அடுப்பில் வைத்த பால் பொங்குது. கறி கருகுது. அறைக்குள் போட்ட லைட் வேலைக்குச் சென்று திரும்பும் வரை எரியுது. இது என்ன மறதி நோய் என்று அம்மாவுக்கு போன் அடித்துக் கேட்டால் ….
அம்மா உன் அப்பா சுன்னாகம் சைக்கிளில் போட்டு திரும்பி வரேக்கை சைக்கிளில் போனதை மறந்து பஸ்ஸில் வந்திட்டார். நல்லவேளை சயிக்கிளை தேத்தண்ணிக் கடைக்கு முன்னாலை விட்டதால்
தொலையாமல் தப்பிச்சு என்றா.
மனைவி உங்களுக்கு யாரோ போன் எடுத்தவை உங்களை எடுக்கட்டாம் என்றா. யார் எடுத்தது என்று கேட்டால் பெயர் மறந்துபோச்சாம், மூன்று மாதமாகப் பதிலே இல்லை. சிலசமயம் எடுத்தவரும் மறந்திருப்பாரோ.
மறதி மறதி இளையவர் முதல் வயதானவர் வரை இன்றும் அன்றும் தொடர்கிறது.
சரி அப்போ மறதிக்கு என்னதான் மருந்து. படுக்கும் போது நேற்று என்ன என்ன செய்தேன் என்பதை ஞாபகப்படுத்தி பார்க்கவும். உங்கள் வேலையை நீங்கள்தான் செய்யவேண்டும் என்று தி;டமாக நம்புங்கள்.
எவர் நினைவூட்டும் இல்லாமல் சுயமாக இயங்குங்கள். எங்கு புறப்படுகிலும் குறைந்தது 30 நிமிடத்திற்கு முன் தயாராகுங்கள். பதட்டம் குறையுங்கள். புதிய புதிய விடையங்களில் மனதைச் செலுத்துங்கள். பழையதையே திருப்பி திருப்பி இரைமீட்டாதீர்கள். பாசமலர் தேவதாஸ்,வசந்தமாளிகை,பாபு,தில்லானாமோகனாம்பாள் போன்ற திரைப் படங்களை நடுசாமத்தில் எழுப்பிக் கேட்டாலும் ஒரு காட்சி குறையாது சொல்வீர்கள். ஆனால் நேற்று இரவு பார்த்த மாதவனின் மாறாவும் சூரியாவின்; சூரரைப்போற்றும் கனவுபோல் இருக்கும். புதியவற்றை மீட்டுப்பாருங்கள்.இன்று கேட்ட செய்தியை நாளை நினைவு வைத்து சொல்லுங்கள். இப்படி நடந்தால்…வீட்டுச் சாவி வெளிக் கதவில் தொங்காது. பாலும் பொங்காது. அப்படிப் பொங்கினாலும் சட்டி எரியாது. இல்லையேல் கஜனி சூரியாபோல் உடல் எங்கும் குறிப்பு எழுதிக்கொண்டு தன்னைத்தானே தேடவேண்டிய காலம்வரலாம். எனக்கு மறதி என்பதை மறக்காதவரை! எனக்கு மறதியில்லை என்பதையும் நம்புங்கள்.
-மாதவி
1,276 total views, 3 views today