நாரிப்பிடிப்புகள் – பாரம் தூக்குவதனால் மட்டும்தானா வருகின்றன?

நாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவதனால் மட்டும்தானா? பாரம் தூக்குவது மட்டுமல்ல உங்கள் நாளந்த செயற்பாடுகளும் நாரிப்பிடிப்புகளை கொண்டு வரலாம். நாரிப்பிடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படாதவர்கள் இருக்கவே முடியாது. தமது வாழ்நாளில் என்றாவது ஒரு நாளாவது இதை அனுபவித்தே இருப்பார்கள். அந்தளவுக்கு மனிதர்களை அதிகம் பீடிக்கும் பிரசனையாக இருக்கிறது.

நாரிப்பிடிப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வது எமது பின்புறத்தின் கீழ் முள்ளெலும்புகள் உள்ள பகுதியில் ஏற்படும் வலியாகும். Low backpain என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதேபோல பின்புறத்தின் மேல் பகுதியிலும் வலி ஏற்படலாம். இதை Upper backpain என்பார்கள். பொதுவாக இது ஏற்பட்டதற்கு ஏதாவது ஒரு காரணத்தை பெரும்பாலானவர்கள் இனங்கண்டிருப்பார்கள். குனிந்து ஏதாவது பாரத்தை தூக்கும்போது ஏற்படலாம். பாரம் தூக்கமாமல் சாதாரணமாக குனிந்துவிட்டு நிமிரும்போதும் ஏற்படலாம். மாறாக மொபைல் போனை நீண்ட நேரம் தூக்கிப் பிடித்து பார்க்கும்போது அல்லது கணனியில் நீண்ட நேரம் வேலை செய்த பின்னர் மேல் முதுகில் தேர்ள்மூட்டுக்கு இடைப்பட்ட பகுதியில் வலி ஏற்படலாம்.

தானாகவே பெரும்பாலும் குணமாகியிருக்கும். கவனியாது விட்டுவிடுவோம். சிலவேளைகளில் மருத்துவரிடம் ஓடவேண்டியும் நேர்ந்திருக்கலாம். எப்படியாயினும் நாம் கவனத்தில் எடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் ஏதோ ஒருவிதத்தில் எமது முதுகுப் புறத்திற்கு அதிகளவு வேலைப்பளுவைக் கொடுகிறோம் என்பதற்கான சிகப்பு எச்சரிக்கiயாக அது இருக்கிறது. அத்தகைள வலி தொடரும் போது அல்லது மீண்டும் மீண்டும் வரும்போது தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்.

பரம்பரை அம்சங்கள்
‘இது எனக்கு எனது அம்மா தந்தது.’ என்பார்கள் சிலர். தந்தையில் பழிபோடுவார்கள் வேறு சிலர். உண்மைதான் இத்தகைய பிடிப்புகளுக்கு பரம்பரை அம்சங்களும் காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறு மட்டும் இல்லை.பரம்பரையாக வருவதற்கு அவர்களது உடல்தோற்ற அமைவு (Posture) காரணமாக இருக்கலாம். முள்ளந்தண்டு அமைப்பிலோ, இடுப்பு எலும்புகளிலோ கால்களிலோ உள்ள அசாதராண மாற்றங்கள் காரணமாகலாம். ஆனால் அத்தகைய தோற்ற அமைவு மாற்றங்கள் இல்லாத போதும் வலி ஏற்படலாம். மாறாக எத்தகைய அமைவு மாற்றங்கள் இருந்தபோதும் வலி பாதிப்பு ஏற்படாதிருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

அதன் அர்த்தம் என்ன? முதுகு நாரி வலி ஏற்படுவதற்கான ஏதுநிலையை பரம்பரை அம்சங்கள் கொண்டிருந்தாலும் சரியான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பிரச்சனை ஏற்படாமல் நாம் தடுக்க முடியும் என்பதேயாகும். அதற்கு முதற்படியாக உங்கள் நாளாந்த நடவடிக்கைகளில் முதுகுப் புறத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள் என்பதை இனம் காண வேண்டும்.

திரும்ப திரும்ப செய்யப்படும் செயற்பாடுகள்

பாரம் தூக்கினால் அதுவும் முக்கியமாக தவறான முறையில் தூக்கினால் பிடிப்பு வரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் மீண்டும் மீண்டும் செய்யும் ஒரேவிதமான சாதாரண செயற்பாடுகள் கூட முதுகுப் புறத்தின் தசைகளுக்கும் முள்ளந்தண்டுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தாலாம். அது நாளடைவில் சிதைவுகளை ஏற்படுத்தும்
ஒரே விதமாகச் செய்யும் செயற்பாடுகள் அந்த உறுப்புகளுக்கான தசை வளர்ச்சிகளில் சமனற்ற தன்மையைக் கொண்டு வரும். இது நாளடைவில் தோற்ற அமைவில் மாறுபாடுகளை ஏற்படுத்தி வலியைக் கொண்டுவரும்.

தவறான உடல்நிலை வலியை ஏற்படுத்தும் என்றோம். உதாரணமாக நீங்கள் முன்நோக்கி சாய்ந்து (குனிந்து அல்ல) ஒரு பொருளை எடுக்கும்போது முள்ளந்தண்டின் பின்புறத்தில் விழவேண்டிய அழுத்தத்தை முள்ளந்தண்டின் முன்புறத்திற்கு கொடுக்கிறீர்கள். இது முள்ளந்தண்டுகளுக்கு இடையுள்ள இடைத்தட்டத்திற்கு கூடிய அழுத்தத்தைக் கொடுக்கும். நாளடைவில் இது இடைத்தட்டச் சிதைவுக்கு இட்டுச்செல்லும்.

உங்கள் தொழிலானது தினமும் பலதடைவைகள் முன்நோக்கி சாய்வதாக இருந்தால் அல்லது நீண்ட நேரம் நிற்பதாக இருந்தால் முதுகுவலி வரும் என்பதற்காக வேலையை விட்டுவிட வேண்டுமா?
நிச்சயமாக இல்லை. அதற்கு ஈடுசெய்யுமுகமாக நீங்கள் செய்யும் வேலைக்கு எதிர்புறமான தசைப் பயிற்சிகளை எடுக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் அடிக்கடி முன்நோக்கி சாய வேண்டிய வேலையாக இருந்தால் அதற்கு மாற்றாக வயிற்று தசைகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். சமமான தரையில் படுத்திருந்து கொண்டு இரு கால்களையும் மடிக்காமல் 90 பாகைக்கு உயர்த் வேண்டும். பின்னர் கால்களை மெதுவாக படிபடிப்படியாக பதித்து சமநிலைக்கு இறக்க வேண்டும். வயிற்றுத் தசைநார்கள் இறுகுவதை நீங்களே உணரக் கூடியதாக இருக்கும். நீண்ட நேரம் நிற்க வேண்டியது உங்கள் தொழில் முiறாயாக இருந்தால் அதற்கு மாற்றாக நீந்துவது அல்லது ஓடுவது போன்ற பயிற்சிகளை எடுப்பது உதவும்.

மன அழுத்தம்

உடலுக்கான அதீத வேலைகள் வலியைக் கொண்டுவருவது போலவே மன அழுத்தமும். மன உடல் வலி, நாரி வலியை கொண்டுவரலாம். மன அழுத்தம் இருக்கும்போது கோபம் பதற்றம் எரிச்சலுறும் தன்மை போன்றவை ஏற்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அனுபவத்திலும் உணர்ந்திருப்பீர்கள்.

அதே போலத்தான் உடல் வலிகளும் ஏற்பட வாய்ப்புண்டு. மனஅழுத்தம் ஏற்படும் போது உடலின் தசைநார்கள் இறுக்கமடைகின்றன. உதாரணமாக இடுப்பெலும்பின் தசைநார்கள் இறுக்கமடைகின்றன. இதனால் தன்னையறியாமலே இடுப்பு பகுதி முன்நோக்கி சற்று சரிவடைகிறது. இது நாரிவலியைக் கொண்டு வரும். மனஅழுத்தமானது உடலைப் பாதிப்பதைத் தடுப்பதற்கு மனஅமைதியைக் காக்க முயல்வதுடன் உடல் பயிற்சிகளிலும் ஈடுபட வேண்டும்.

புகைத்தல்
புகைத்தல் உடலாரோக்கியத்திற்கு தீங்கானது என்பதை எல்லோருமே அறிவோம். ஆனால் அது முதுகு வலியையும் கொண்டுவருவதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா. புகைத்தலானது குருதிக் குழாய்களை (நாடிகளை) சுருங்க வைத்து குருதி ஓட்டத்தைக் குறைத்து உறுப்புக்களை நலிவடையச் செய்கிறது. அவ்வாறு முள்ளந்தண்டு எலும்புகள் அவற்றை இணைக்கும் இடைத்தட்டம் ஆகியவற்றிக்;கான குருதி ஓட்டத்;ததை குறைவடையச் செய்யும் இதனால் அதிகரித்த வேலைப் பளுவால் அவற்றில் ஏற்படும் சிதைவுகள் குணமடையமல் மோசடைகின்றன. இது வலியை ஏற்படுத்தும். எனவே புகைத்தலை நிறுத்த வேண்டும். இதைத் தவிர புற்றுநோய்கள். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கு புகைத்தலே காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.

தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள்

முதுகுவலி நாரி வரி ஏற்படாமல் தடுக்க வேண்டுமாயின் அவற்றிற்கான தசைகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். முக்கியமாக முதுகுப்புற தசைகள், வயிற்றறைத் தசைகள் மற்றும் இடுப்புத் தசைகளை வலுப்படுத்த வேண்டும். அதை சரியாக செய்வது எப்படி என்பதற்கு உடற் பயிற்சி ஆசிரியர் ஒருவரிடம் ஆலோசனைகளை கேட்டு அறிய வேண்டும். தவறான பயிற்சிகள் வலி மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளது என்பதை மறக்கக் கூடாது. எனவே நீங்கள் முதுகுவலி நாரிவலி ஆகியவற்றால் பாதிக்கப்படுபவராயின் ‘எனக்கு ஏன் இந்தப் பிரச்சனை? நான் பாரம் தூக்கவில்லையே என மூளையைக் குழப்பாமல் உங்கள் நாளாந்த செயற்பாடுகள் எதாவது அதற்குக் காரணமாக இருக்கலாமா என மாற்று வழியில் யோசியுங்கள். விடையும் கிடைக்கும். நலமும் நாடி வரும்.

  • Dr.M.K.Muruganandan

1,280 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *