பெண் புலவர் பொன்முடியார் பாடல்கள் ஓர் பார்வை.

-பொலிகையூர் ரேகா M.Com,M.Phil,MBA,M.Phil. (தாயகம்)

முன்னுரை
தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறப்படுகின்ற சங்க காலத்தில் நிறைந்திருந்த தமிழ்ப் புலவர்களில் ஆண் புலவர்களிற்குச் சளைக்காத வண்ணம் பெண் புலவர்களும் ஆளுமை மிகுந்தவர்களாகக் காணப்பட்டனர்.
பொன்முடியார் இவர் சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெண் புலவர் ஆவார். இவரது பாடல்கள் புறநானூற்றில் 299,310,312 எனும் பாடல்களாக உள்ளது. சங்க இலக்கியத்தில் உள்ள இந்த மூன்று பாடல்கள் தவிர புறத் திரட்டில் தகடூர் யாத்திரையிலும் இவரது மூன்று பாடல்கள் உள்ளது.

பொன்முடியாரின் பாடல்களும் செய்திகளும்

குதிரைகளின் வீரம்
“பருத்தி வேலிச் சீறூர் மன்னன்” என்று தொடங்கும் பாடலில் குதிரைகளின் வீரத்தைப் பற்றிப் பாடுகின்றார் பொன்முடியார். சீறூர் மன்னனின் குதிரைகள் உளுந்துச் சக்கையை உணவாக உண்டு வளர்வதாயும் , எதிரி நாடாகிய நண்ணடை மன்னனின் குதிரைகள் நெய் ஊற்றி மிதித்த சோற்றுருண்டைகளை உண்டு வளர்வதாயும் கூறுகின்றார்.ஆனாலும் அங்கு போரிடுவோரையும் மீறிக்கொண்டு சீறூர் மன்னனின் குதிரைகளே பாய்ந்து செல்வதாயும், நெய்ச்சோறுண்ட குதிரைகள் ஒதுங்கி நிற்பதாயும் கூறுகின்றார். இங்கு மன்னனின் குதிரைப் படையின் வீரம் கூறப்படுகின்றது.

இன்ப வருத்தம்
புறநானூற்றில் இடம்பெறும் 312 வது பாடலில் இடம்பெறும் “பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்” எனும் பாடலின் மூலமாக ஒரு தாயானவள் அடைகின்ற வியப்பையும், கவலையையும், துன்பத்திலும் பேருவகை அடையும் பண்பையும் தும்பைத் திணையினூடாகக் கூறுகின்றார். பாலை உண்ண மறுத்தபோது முன்னர் மகனை மிரட்டியதற்காக வருந்தும் அவள் இப்போது அவன் அம்பு பட்டு வீழ்ந்தருப்பதைக் கண்டு அவன் வீரத்தை மெச்சி இன்பத்துயர் அடைவதை விளக்குகின்றார்.
சமூகக் கட்டமைப்பு
புறநானூற்றின் 312 வது பாடலின் மூலம் சமூகக் கட்டமைப்பினைப் புலவர் வெளிப்படுத்துகின்றார். “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” என்று தொடங்கும் பாடலில் சமூகக் கட்டமைப்பையும் அச் சமூகத்தில் உள்ளவர்கள் கடமையையும் விளக்குகின்றார்.
ஒரு குழந்தையைப் பெற்றுத் தருவது தாயின் கடமை, அவனைச் சான்றோனாக்குவது தந்தையின் கடமை, நல்ல நடத்தையை அளிப்பது மன்னனின் கடமை, வாளைண் செய்து கொடுப்பது கொல்லனின் கடமை, அதைப் பயன்படுத்தி எதிரியின் யானையைக் கொன்று மீள்வது அந்த இளைஞனினர கடமை எனக் கூறுகின்றார். இதன் மூலம் சமூகத்திலுள்ளவர்கள் ஆற்ற வேண்டிய கடமையை வலியுறுத்துகின்றார்.

பெண்மையும் வீரமும்
“ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே” என்ற பாடலடிகள் மூலம் தாய்மையைப் பெண்களின் தலையாய கடனாகக் கூறுகின்றார். அதனை முதன்மைப்படுத்திக் கூறிய பின்பு மற்றவர்களின் கடமையை குறிப்பிடுவதால் அதன் பின்னர் இடம்பெறுகின்ற செயல்களுக்குப் பெண் ஆதாரமானவள் என்பதை வலியுறுத்துகின்றார் பொன்முடியார்.

நாட்டுப்பற்று
“உன்னிலன் என்றும் புண் ஆனது அம்பு” என்ற பாடலில் உரவோர் மகனே என்று குறிப்பிடப்படும் வீரனின் நாட்டுப் பற்று வெளிப்படுத்தப்படுகின்றது. சிறு வயதில் தாயின் மிரட்டலுக்கு அஞ்சியவன் இப்போது பகைவனின் யானையைக் கொன்ற பின்பு தன் நெஞ்சில் அம்பு தைத்தபடி வீழ்ந்திருப்பது அவனது வீரத்தையும் நாட்டுப் பற்றையும் காட்டுகின்றது.

ஒளி வீசும் வாளைக் கையிலேந்திப் போர்க்களத்திற்கு சென்று பகைவனின் யானையை வீழ்த்தி வெற்றி பெற்றுத் திரும்புவதே ஆண் மகனின் கடமை என்பதை “ஒளிறுவாள்….” என்ற பாடல் மூலமாக குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலமாக நாட்டுப்பற்றை வலியுறுத்துகின்றார் பொன்முடியார்.

போரில் பெண்களின் பெருமிதம்
முதல் நாள் கணவனை இறந்த பின்னும் மறுநாள் மகனைப் போர்க் களத்திற்கு அனுப்பிய தாய் அங்கு தன் மகன் மார்பில் அம்போடு கேடயத்தின் விழுந்திருப்பதைக் கண்டு மகிழ்தலும் அக்காலப் பெண்கள் போரின் மீது காட்டிய ஆர்வத்தைக் குறிப்பிடுகின்றது. போர்க்களத்தில் தன் மகனின் வீரச் செயலைக் கண்டு வியப்புறும் மறத்தாயின் உள்ளக் கிடக்கையைப் பொன்முடியார் பதிவு செய்திருப்பது ஒரு பெண் புலவரான அவரது வீரத்தையும், உறுதிப்பாட்டையும் வலியுறுத்துகின்றது.

பெண்களின் நிலைப்பாடு
பெண்களின் போர் ஆர்வத்தை வெளிப்படுத்தும் பொன்முடியார் அக்காலத்திலிருந்த பெண்களின் நிலைப்பாட்டையும் தன் பாடலூடாக மறைபொருளாய் உணர்த்துகின்றார். ஒரு ஆண் மகனைப் பெற்றுக் கொடுத்தல் பெண்ணின் தலையாய கடனாகக் கருதப்படுவதைக் கூறுகின்றார். அத்தோடு “கலம் தொடா மகளிர்” என்ற பாடலின் மூலமாகச் சங்க காலத்தில் மாதவிலக்கான பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை உவமானத்தினூடாக மறைபொருளாக உணர்த்துகின்றார். இப்போதுதான் பெண்கள் பற்றிய சிந்தனைகள் பேசுபொருளாய் இருப்பதாய் நினைப்பவர்களுக்கு இப்பாடல் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
முடிவுரை
சங்க இலக்கிப் பாடல்களில் பொன்முடியாரின் பாடல்களும் சிறப்பானவை. இவரது பாடல்கள் வீரம், வாழ்வியல், பழக்கவழக்கங்கள், போரின் பெருமை, தாய்மையின் பெருமை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. அக் காலத்திலேயே ஆண்களின் பொறுப்பை வலியுறுத்தி, பெண்களின் நிலைப்பாடுகளையும் உணர்விக்கும் வண்ணம் பாடல்களைப் பாடிய பொன்முடியாரின் ஆளுமை அளத்தற்கரியதாகும்.

6,336 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *