எப்படி அழைப்பேன்?

-பூங்கோதை – இங்கிலாந்து
உறவினர் தவிர்ந்த ஏனைய அன்புக்குரியவர்களை, முகம் தெரியா நட்புக்களை, யாரை எப்படிக் கூப்பிட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியாகவும் சமூகவியல் சார்ந்தும் எமக்கிடையே ஒரு குழப்பமும் தயக்கமும் ஏற்படுவதுண்டு என்றே தோன்றுகிறது. முக்கியமாக வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து தமது பழக்க வழக்கங்களையும் மாற்ற முடியாது வெளிநாட்டு கலாச்சாரத்துக்கும் இடம் தர விருப்பமில்லாது முழிப்பவர்கள் பலருண்டு. அண்மையில் கலாச்சாரக் காவலர் ஒருவர் ஏன் தன்னை எல்லாப் பெண்களும் ‘அண்ணா’ என்று கூப்பிட்டே கொல்கிறார்கள் எனக் குறைப்பட்டுக் கொண்டார். அவரைத் தோழராகக் கொள்வதற்கு அவர்களுக்குப் பக்குவம் போதாது என்று அழுகையை நிற்பாட்டி வைக்க வேண்டியதாயிற்று.
இங்கு தலைமை ஆசிரியரைக் கூட குழந்தைகள், பெற்றோர்கள் முன்னுக்கு மட்டுமே திரு, திருமதி சொல்லி அவர்களது ளரசயெஅந உடன் அழைக்கிறோம். தனியாகப் பேசும் போது அவர்களுடைய பெயர் சொல்லியே உரையாடுகிறோம். அது அவர்களுக்கும் எமக்கும் இடையே ஒரு நெருக்கத்தை உருவாக்கி சமத்துவமாக சில விடயங்களை அலசி ஆராய முடிகிறது. ஆரம்பத்தில், பல வருடங்களுக்கு முன்னர் அது எனக்கு மிகவும் சவாலாகவே இருந்திருக்கிறது. இது என்னடா வம்பாய்ப் போச்சு என்றே நினைத்துக் கொண்டேன். இப்போது பழகி விட்டது. “ஹேய் குட் மோர்னிங் ஏமி!” என்று என் தலைமை ஆசிரியைக்கு வணக்கம் சொல்லும் வரையில் நிலைமை மாற்றமடைந்து விட்டது. பாம்பு சாப்பிடும் ஊருக்குப் போனால் நடு முறி நமக்கு என்பது பல விடயங்களுக்கும் பொருந்தி வரத்தான் செய்கிறது. இப்படியான சில மாற்றங்கள் நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்கப் பண்ணுகிறது.
இங்கு பெயரளவில் என்றாலும் சமத்துவம் பேணப்படுகிறது. ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி விழுவதில்லை போலவே, குழந்தைகளது ஜனநாயக உரிமைகளும் அவர்களது விருப்பு வெறுப்புகளும் கூட பேணப்படுகின்றன. இதனால்த் தான் நமது தாயகத்தில் மக்களிடையே மரியாதை என்ற பெயரில், ஏற்றத் தாழ்வுகளும் வர்க்க வேறுபாடுகளும் அனைத்துப் பணிகளிலும் சமூகங்களிலும் உண்டெனத் தோன்றுகின்றது.
அதுவும் பல வருடங்களுக்கு முன் பணி புரிந்த பள்ளியில் இருந்தவர், ஆண் தலைமை ஆசிரியர், அவரை “ குட் மோர்னிங் டேவிட், ஹவ் ஆ யு டுடே?” கேட்கும் போது ஆரம்பத்தில் அப்பாவின் முகம் ஒரு தரம் வந்து பயமுறுத்தி விட்டே போகும், எல்லாம் வீட்டுக்கு வா பேசிக்கொள்கிறேன் ரீதியில் தான். அது எமது கலாச்சாரம். எல்லாக் கலாச்சாரங்களிலும் நன்மை தீமைகள் உண்டு.
இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இங்கு ள்ள வைத்தியர்கள் தம்மைக் கடவுளர்களாக யோசிப்பதில்லை. எம்மூர் வைத்தியர்களில் வயதான சிலருக்கு மட்டும் அந்த எண்ணமுண்டு. எல்லோருக்குமல்ல!
ஆசிரியையாகப் பயிற்சி செய்ய முன்னர், இளம் பட்டதாரியாய் ஒரு வயோதிப நிலையத்தின் முகாமைத்துவதில் இருந்தேன். அங்கு தான் பல விதமான ஆங்கில னயைடநஉவள ஐப் பற்றியும் கேட்டும், பேசியும், அறிந்தும் கொண்டேன். பல வயோதிபர்கள் இங்கிலாந்தின் பல பாகங்களிலிருந்தும் வந்து அங்கு வாழ்ந்தார்கள். அங்கும் அவர்கள் தம்மைப் பெயர் சொல்லி அழைப்பதையே விரும்பினார்கள். அதிலும் குறிப்பாக ஒருவர், Fred என்பவர் இரண்டாம் உலக யுத்தத்தில் கடற்சிப்பாயாக (ship navigator) இருந்தவர், சந்தித்த போது நிறைய ஞாபக மறதி அவரைப் பாதித்திருந்தது. என்னைப் பார்க்கும் போதெல்லாம் தான் மும்பாய்த் துறைமுகத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்வது நல்லதுக்கில்லை என செல்லமாகக் கடிந்து கொள்வேன்!
“உன்னைத் திருமணம் செய்து, இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப் போகிறேன்!” எனப் படு ஸீரியசாகச் சொல்லுவார். அப்போது அங்கு அந்த வயோதிபரைப் பரிசோதிக்க வந்த இளம் ஆங்கில வைத்தியர், தானே நிலத்தில் அமர்ந்து, அந்த வயோதிபரின் காலுறைகளைக் கழற்றித் தன் பரிசோதனையை ஆரம்பித்தார். அங்கு வந்த எமது நிலையத்தின் தாதிப்பெண், அவரைப் பார்த்து, “ஹேய் ஜோன் என்னைக் கூப்பிட்டிருக்கக் கூடாதா?” எனக் கடிந்து கொண்டாள். எமக்கு மட்டும் தான் டொக்டர் ஜோன் கடவுள் என்று தெரிந்தது.
எமது குடும்ப நண்பர்களில், ஒரு கணவன் மனைவி இருவரும் ஒரே பணியில், வேறு வேறு தளங்களில் பணி புரிபவர்கள். கணவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவரின் மனைவி அவரைப் பெயர் சொல்லி அழைக்காமல் அவரை, ‘அத்தான்’ என்றே அழைத்து வந்தார். அங்கு தொழில் பார்த்த அனைத்து பணியார்களும் உயர் அதிகாரிகள் உட்பட அவரை அத்தான் என்றே அழைத்து கேட்கவும் பார்க்கவும் வேடிக்கையாகத் தான் இருந்தது. நான் ஒரு காரணத்திற்காக அங்கு அவர்களில் ஒருவரைச் சந்திப்பதற்காக போகும் வரை எனக்கும் அது தெரிந்திருக்கவில்லை. அலுவலகத்தின் காரியாலயத்தில் அவர்களின் பெயரைக் கூறியதுமே என்னை அமரும் படி கூறிய ஒரு கருப்பு இன அலுவலர் ஒருவர், என்னிடம் பணிவாக கூறினார், ‘ அத்தான் வில் மீட் யூ சூன்! மரியாதையும் பக்தியும் மனதில் மட்டும் இருப்பது நல்லது என்ற தெளிவு வந்தது நல்லது என்றே தோன்றுகிறது.